பட்டாசு தொழிலுக்கு பெரும் பாதிப்பு


பட்டாசு தொழிலுக்கு பெரும் பாதிப்பு
x
தினத்தந்தி 27 Dec 2017 9:30 PM GMT (Updated: 2017-12-27T17:18:39+05:30)

சிவகாசி என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது ‘பட்டாசு தொழிற்சாலை’ தான். இங்கு 849 லைசென்ஸ் பெற்ற தொழிற்சாலைகள் இயங்குகின்றன.

சிவகாசி என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது ‘பட்டாசு தொழிற்சாலை’ தான். இங்கு 849 லைசென்ஸ் பெற்ற தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இந்த தொழிற்சாலைகளில் 3 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். இதுதவிர, இந்த தொழிலை நம்பி 106 உபதொழில்கள் இருக்கின்றன. 5 லட்சம் தொழிலாளர்களுக்குமேல் உப தொழில்களை நம்பிதான் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். ஆக, இந்த 8 லட்சம் தொழிலாளர்களுக்கும் வேறு எந்த தொழிலும் தெரியாது. அதற்கான வாய்ப்பும் அந்தபகுதியில் இல்லை.

பட்டாசு உற்பத்தி ஆண்டு முழுவதும் நடக்கும். அப்படிப்பட்ட பட்டாசு தொழிலுக்கு கடந்த ஓரிரு ஆண்டுகளாக சோதனைக்குமேல் சோதனை மேலிட்டு கொண்டே இருக்கிறது. சீன பட்டாசுகளின் சட்டவிரோத விற்பனை, 28 சதவீத சரக்கு சேவை வரி, எல்லாவற்றிற்கும் மேலாக நடந்து முடிந்த தீபாவளியின்போது டெல்லியில் பட்டாசு விற்க விதிக்கப்பட்ட தடை என்று பல சிக்கல்களை தாண்டி வந்துகொண்டிருந்த பட்டாசு தொழில் மேலும் ஒரு அபாயத்தை எதிர்நோக்கி இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு பொது நல வழக்கின் எதிரொலியாகத்தான் டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. இதுமட்டுமல்லாமல் மேலும் ஒரு பொதுநல வழக்கு நாடு முழுவதும் பட்டாசு தொழிலை தடை செய்யவேண்டும் என்ற கோரிக்கையோடு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த தீர்ப்பு எப்படி வருமோ? என்றநிலையில் ஒரு பெரிய சந்தேக வளையத்திற்குள் பட்டாசு தொழில் இருக்கிறது.

வழக்கமாக தீபாவளி பட்டாசுக்காக நாடு முழுவதிலும் விற்பனையாளர்கள் அட்வான்ஸ் தொகை கொடுப்பார்கள். அந்த அட்வான்ஸ் தொகையை வைத்து உற்பத்திக்கான கணிசமான உற்பத்தி செலவை பட்டாசு உற்பத்தியாளர்கள் கையாள்வார்கள். தற்போது உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணை முடிவு என்னவாகும் என்பது தெரியாத நிலையில் விற்பனையாளர்கள் அந்த அட்வான்ஸ் தொகையை கொடுக்கவில்லை. இதனால் பட்டாசு உற்பத்தியை தொடங்கவில்லை. மேலும் அட்வான்ஸ் தொகை இல்லாமல் கடன் வாங்கியோ, கையில் உள்ள பணத்தை வைத்தோ உற்பத்தியை தொடங்கி, ஒருவேளை உச்ச நீதிமன்றம் நாடு முழுமைக்கும் பட்டாசு பயன்பாட்டை தடை செய்துவிட்டால் நொடித்துபோய் விடுவோமோ என்ற கவலையில் பட்டாசு உற்பத்தியாளர்களும் உற்பத்தியை தொடங்காமல் கடந்த 26–ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 8 லட்சம் தொழிலாளர்களும் வேலையிழந்து நிற்கின்றனர்.

உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை விரைவில் முடிக்கப்பட்டு, பட்டாசு தொழில் பற்றி ஒரு உறுதியான தீர்ப்பை வழங்க வேண்டும் என்பதுதான் அனைத்து இந்திய பட்டாசு சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கையாகும். மத்திய, மாநில அரசுகளும் இந்த தொழிலை காப்பாற்ற தங்களையும் ஒரு வாதியாக இணைத்துக்கொண்டு பட்டாசு தொழிலுக்கு சாதகமாக விரைவில் இந்த வழக்கை முடிக்க உச்ச நீதிமன்றத்தை கோர வேண்டும். இதுபோன்ற தடை அபாயம் இல்லாமிலிருக்க பட்டாசுக்கு சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) விதிகளில் உள்ள விதி 3பி–யிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

Next Story