அரசியல் களத்தில் ரஜினிகாந்த்


அரசியல் களத்தில் ரஜினிகாந்த்
x
தினத்தந்தி 1 Jan 2018 11:30 PM GMT (Updated: 2018-01-01T23:48:46+05:30)

புலி வருது!, புலி வருது! என்று கடந்த பல ஆண்டுகளாக எல்லோரும் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

புலி வருது!, புலி வருது! என்று கடந்த பல ஆண்டுகளாக எல்லோரும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது புலி, தான் வருவதை உறுதி செய்துவிட்டது. அதுதான் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம். 1996-ம் ஆண்டு முதல் ரஜினிகாந்த் அரசியலுக்கு இப்போது வருகிறார்!, அப்போது வருகிறார்! என்று பல கருத்துகள் உலாவந்து கொண்டிருந்தன. மற்றவர்கள்தான் அவர் அரசியலில் நுழையப்போகிறார் என்று கூறினார்களே தவிர, ரஜினிகாந்த் வெளிப்படையாக எதையும் சொல்லவில்லை.

கடந்த மே மாதம் அவருடைய ரசிகர்களை 5 நாட்கள் சந்தித்து அவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொண்ட நேரத்தில், ‘நாட்டை காப்பாற்ற போருக்கு தயாராக இருங்கள்’ என்று அரசியலுக்கு வருவதுபற்றி சூசகமாக அறிவித்தாரே தவிர, அப்போதும் வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை. ஆனால், அதன்பிறகு பலரிடம் டெலிபோனிலும், நேரடியாகவும் அரசியலுக்கு வருவதுபற்றி கருத்து கேட்டாரே தவிர, யாரிடமும் தன்முடிவு எதையும் சொல்லவில்லை. இந்தநிலையில், 2-வது கட்டமாக மீண்டும் 6 நாட்கள் தன் ரசிகர்களை சந்தித்து அவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொண்ட நிகழ்ச்சியின் இறுதிநாளில், “நான் அரசியலுக்குள் வருவது உறுதி!.

நான் அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம், வருகிற சட்டமன்றதேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து, தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நிற்போம், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. பாராளுமன்ற தேர்தலின்போது அந்தநேரத்தில் முடிவெடுப்பேன். உண்மையான, நேர்மையான, நாணயமான, வெளிப்படையான சாதி-மத சார்பற்ற ஒரு ஆன்மிக அரசியலை கொண்டுவரவேண்டும். அதுதான் என்னுடைய நோக்கம். முதலில் அனைத்து ரசிகர்களையும் ஒருங்கிணைத்து மன்றங்களை பதிவுசெய்ய வேண்டும். அதுதான் நமக்கு முக்கியமான முதல்வேலை. அதுவரையில் நான் உள்பட யாரும் அரசியல் பேசவேண்டாம். அரசியல்வாதிகளை திட்டவேண்டாம். அவர்களை விமர்சனம் செய்யவேண்டாம். குறைசொல்லவும் வேண்டாம். அறிக்கைவிடுவது, போராட்டம் நடத்துவதும் வேண்டாம்” என்று பட்டவர்த்தனமாக கூறிவிட்டார்.

234 தொகுதிகளிலும் நிற்போம் என்று கூறியிருக்கிறார். அதை பார்க்கும்போது, நிச்சயமாக எந்த கட்சியுடனும் கூட்டணி அவர் வைக்கப்போவதில்லை என்று தெரிகிறது. ஆனால் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், பா.ஜ.க.வை ஆதரிப்பார் என்று கூறியிருக்கிறார். ரசிகர்கள் பலம்தான் அவரது அரசியல் கட்சியின் அடிப்படை பலம். அவரது ரசிகர்களெல்லாம் பல கட்சிகளை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களெல்லாம் ரஜினிகாந்த் தொடங்கும் அரசியல் கட்சியில் சேருவார்களா அல்லது நாங்கள் ரசிகர்களாக மட்டும் இருக்கிறோம் என்று தங்கிவிடுவார்களா? என்பதும் அவர் அரசியல் கட்சியை தொடங்கிய பிறகுதான் தெரியும். தன்னுடைய நோக்கமாக அவர் சில கருத்துகளை கூறியிருக்கிறார்.

அதுதான் அவரது கட்சியின் கொள்கையாக இருக்கும் என்று அரசியல்நோக்கர்கள் கருதுகிறார்கள். ரஜினிகாந்த் அரசியல் களத்தில் ஜொலிப்பாரா? என்பது குறித்து அவர் கட்சியின் பெயர், கொள்கைகள், நிர்வாகிகளின் பட்டியல், தனித்து நிற்கப்போகிறாரா?, கூட்டணி வைத்து நிற்கப்போகிறாரா?, மக்களோடு அவருடைய அணுகுமுறை எப்படி இருக்கப்போகிறது?, அரசியல் ரீதியிலான கருத்துகளை எப்படி சொல்லப்போகிறார்? என்பதையெல்லாம் அடிப்படையாக வைத்து காலம்தான் முடிவுசெய்யும்.

Next Story