வேலை நியமனங்களில் முறைகேடா?


வேலை நியமனங்களில் முறைகேடா?
x
தினத்தந்தி 2 Jan 2018 9:30 PM GMT (Updated: 2 Jan 2018 5:36 PM GMT)

தமிழ்நாட்டில் வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருக்கிறது. தொழில்வளர்ச்சி அதிகம் இல்லாதநிலையில், தனியார்துறையில் வேலைவாய்ப்பு அதிகளவில் உருவாகவில்லை.

மிழ்நாட்டில் வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருக்கிறது. தொழில்வளர்ச்சி அதிகம் இல்லாதநிலையில், தனியார்துறையில் வேலைவாய்ப்பு அதிகளவில் உருவாகவில்லை. அதனால்தான் அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை 80 லட்சத்தை தாண்டிவிட்டது. இந்தவகையில், தமிழ்நாட்டில் உள்ள 46 அரசு பாலிடெக்னிக்குகளில் விரிவுரையாளர் பணிகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டன. 1,058 காலிப்பணியிடங்களுக்காக கோரப்பட்டதில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 500 பேர் விண்ணப்பம் செய்து எழுத்துதேர்வும் எழுதியிருந்தனர். இந்தத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 2 ஆயிரம் விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டனர். இந்தநேரத்தில் ஆசிரியர் தேர்வுவாரியத்துக்கு சில விண்ணப்பதாரர்கள் எடுத்த மதிப்பெண்கள் பற்றி புகார்கள் வந்தது. அதை சரிபார்த்தபோது, அவர்கள் உண்மையாக எடுத்த மதிப்பெண்களைவிட அதிகமாக போடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக ஆசிரியர் தேர்வுவாரியம் 2 ஆயிரம் பேர்களின் மதிப்பெண்களையும் சரிபார்த்தது. அதில் 226 பேரின் விடைத்தாள்களில் அவர்கள் பெற்ற மதிப்பெண்களில் 50 முதல் 100 மதிப்பெண்கள் வரை கூடுதலாக போட்டு சான்றிதழ் சரிபார்க்கும் பட்டியலுக்கு தகுதிபடைத்தவர்களாக்கும் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக இந்தத்தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டு, விடைத்தாள்களுடன் கூடிய புதியமதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது. முறைகேட்டுக்காக ஒவ்வொரு மாணவரிடமும் ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம்வரை வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் யார்–யார்? ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போலீசில் புகாரும் கொடுக்கப்பட்டு, இப்போது 156 பேர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மதிப்பெண்களை கூடுதலாக போட ஏஜெண்டாக செயல்பட்டதாக ஒரு கால்டாக்சி டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தேர்வு மதிப்பெண்களை பதிவிடும் பணிகளை செய்த நொய்டாவில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் கம்பெனி ஊழியர்கள் இந்த முறைகேட்டை செய்ததாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விரைவில் போலீசாரும், ஆசிரியர் தேர்வுவாரியமும் இந்த முறைகேட்டை முழுமையாக கண்டுபிடிப்பதோடு, ஊழல், தவறுகளுக்கு இடமளிக்கும் அத்தனை வழிகளையும் அடைத்து, இனிமேல் நடக்கும் அனைத்து தேர்வுகளும் எந்தவித முறைகேடுக்கும் இடம்இல்லாத வகையில் மிக கண்காணிப்போடு நடத்தப்பட வழிவகைகளை காணவேண்டும்.

அரசு பணிகளுக்கான தேர்வு என்பது தகுதியின் அடிப்படையில், திறமையின் அடிப்படையில் இருந்தால்தான் அரசு பணிகள் மீது இளைஞர்களுக்கு ஒரு நம்பிக்கை வரும். நாம், நமது தகுதியை வளர்த்துக்கொண்டோம் என்றால், திறமையை பெருக்கிக்கொண்டோம் என்றால், இத்தகைய தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்றோமென்றால் நிச்சயம் அரசுப்பணி தானாகக்கிடைக்கும் என்ற உணர்வு இளைஞர்கள் மனதில் விதைக்கப்படவேண்டும். தகுதி மட்டுமே அளவுகோலாக இருக்கவேண்டும். அதைவிடுத்து பணம் கொடுத்தால்போதும் தகுதியும், திறமையும் தேவையில்லை என்றநிலைமை ஏற்பட்டால், நிச்சயமாக அது நாட்டுக்கு நல்லதல்ல. அரசுப்பணி நியமனங்களில் ஊழலை ஒழித்தால்தான் திறமையானவர்கள், நேர்மையானவர்கள் அரசுப்பணிக்கு வரமுடியும். பணம் கொடுத்து வேலைக்கு வருபவர்கள், வேலைக்கு வந்தவுடனேயே லஞ்சம் வாங்குவதில்தான் குறியாக இருப்பார்கள். பணியிலும் அக்கறை காட்டமாட்டார்கள்.

Next Story