நெல்லுக்கு கூடுதல் ஆதார விலை


நெல்லுக்கு கூடுதல் ஆதார விலை
x
தினத்தந்தி 3 Jan 2018 9:30 PM GMT (Updated: 2018-01-03T23:29:41+05:30)

தமிழ்நாட்டில் ஏறக்குறைய 81 லட்சத்து 18 ஆயிரம் விவசாயிகள் உள்ளனர். 2015–ம் ஆண்டு பெருமழை பெய்த பிறகு, தமிழ்நாட்டில் பருவமழை தொடர்ந்து பொய்த்து வருவதால் நெல் பயிரிடும் விவசாயிகள் பெரும்பாலும் நிலத்தடிநீரை நம்பித்தான் விவசாயம் செய்து வருகிறார்கள்.

மிழ்நாட்டில் ஏறக்குறைய 81 லட்சத்து 18 ஆயிரம் விவசாயிகள் உள்ளனர். 2015–ம் ஆண்டு பெருமழை பெய்த பிறகு, தமிழ்நாட்டில் பருவமழை தொடர்ந்து பொய்த்து வருவதால் நெல் பயிரிடும் விவசாயிகள் பெரும்பாலும் நிலத்தடிநீரை நம்பித்தான் விவசாயம் செய்து வருகிறார்கள். விவசாயிகளுக்கான இடுபொருட்களின் விலை மிக அதிகமாகிவிட்டது. விவசாயம் லாபகரமானதாக இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும் என்றாலும், பரம்பரையாக விவசாயத்தொழில் செய்பவர்கள் இதை விட்டுவிட்டு, வேறுதொழிலுக்கும் செல்லமாட்டார்கள். விவசாயிகளுக்கு உள்ள பெரிய ஒரு குறை தங்கள் விளைபொருட்களுக்கு உரியவிலை கிடைக்கவில்லை என்பதுதான்.

சென்னை, நீலகிரி மாவட்டங்களைத் தவிர்த்து, அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளுக்கு தேவையான இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்களை தமிழக அரசு திறந்து, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்து வருகிறது. இந்த ஆண்டு அந்தவகையில், தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்து 564 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து, 20 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது. ஆண்டு தோறும் மத்திய அரசாங்கம் நெல் கொள்முதல் விலையை நிர்ணயிக்கிறது. மாநில அரசாங்கம் அதற்கு அதிகமான விலையை நிர்ணயித்து வழங்குகிறது. அந்தவகையில், இந்த ஆண்டுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலையாக ஒரு குவிண்டாலுக்கு ‘சன்ன ரகத்துக்கு’ ரூ.1,590–ம், சாதாரண ரகத்துக்கு ரூ.1,550–ம்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்காக தமிழக அரசு ‘சன்ன ரகத்துக்கு’ 70 ரூபாயும், சாதாரண ரகத்துக்கு 50 ரூபாயும் கூடுதலாக வழங்க ஆணையிட்டுள்ளது. இதன்படி, குவிண்டாலுக்கு ‘சன்ன ரக’ நெல்லின் விலை ரூ.1,660–ஆகவும், சாதாரண ரக நெல்லின் விலை ரூ.1,600 ஆகவும் நிர்ணயித்துள்ளது. ஆனால், இப்போதுள்ள நிலையில் இந்த விலை போதாது என்று விவசாயிகள் கருதுகிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசாங்கத்தின் ஆதாரவிலையைவிட, மாநில அரசின் ஊக்கத்தொகை 100 ரூபாய் அளவுக்கு கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டதாக விவசாய சங்க தலைவர்கள் கூறுகிறார்கள். இதுமட்டுமல்லாமல், குறுவை பயிரை கடந்த அக்டோபர் மாதமே அறுவடை செய்துவிட்டநிலையில், செப்டம்பர் மாதத்திலேயே இந்த கொள்முதல் விலையை அறிவித்து, நேரடி கொள்முதல் நிலையங்களை அக்டோபர் 1–ந்தேதி திறந்திருந்தால் குறுவை நெல்லையும் எங்களால் இந்த விலைக்கு விற்றிருக்க முடியுமே என்பதையும் ஒரு குறையாக விவசாயிகள் கூறுகிறார்கள். ஆனால், இப்போது அறிவித்திருப்பது பொங்கலுக்குப்பிறகு அறுவடையாகப்போகும் சம்பா நெல்லை விற்கத்தான் பயனளிக்கும் என்பது விவசாயிகள் கருத்து. மொத்தத்தில், மத்திய அரசாங்கத்தை வற்புறுத்தி நெல்லுக்கு கூடுதல் ஆதார விலையை நிர்ணயிக்கவேண்டும். அதுபோல, மாநில அரசு தரும் ஊக்கத்தொகையும் கூடுதலாக தரவேண்டும் என்பதுதான் விவசாயிகளின் கோரிக்கையாகும். விவசாயிகளுக்கு குறைந்தவிலையில் இடுபொருட்கள் கிடைப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். மொத்தத்தில், விவசாயம் லாபகரமானதாக இருக்க வேண்டுமென்றால், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரை செய்ததுபோல, உற்பத்தி செலவோடு கூடுதலாக 50 சதவீத தொகையை சேர்த்து நெல்லுக்கான ஆதார விலையை மத்திய அரசாங்கம் நிர்ணயிக்க பரிசீலிக்கவேண்டும்.

Next Story