பள்ளிக்கூட மாணவர்கள் தற்கொலை


பள்ளிக்கூட மாணவர்கள் தற்கொலை
x
தினத்தந்தி 4 Jan 2018 9:30 PM GMT (Updated: 2018-01-04T23:52:19+05:30)

தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் ஆகியவை, அரசு பள்ளிக்கூடங்கள், அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்கள், தனியார் பள்ளிக்கூடங்கள் என்றவகையில் 58 ஆயிரத்து 33 பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன.

மிழ்நாட்டில் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் ஆகியவை, அரசு பள்ளிக்கூடங்கள், அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்கள், தனியார் பள்ளிக்கூடங்கள் என்றவகையில் 58 ஆயிரத்து 33 பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. இந்த பள்ளிக்கூடங்களில் 5 லட்சத்து 67 ஆயிரத்து 162 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். ஒரு கோடியே 31 லட்சத்து 85 ஆயிரத்து 526 மாணவர்கள் படிக்கிறார்கள். சமீபகாலங்களாக பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் திட்டுவதாலும், பெற்றோர் கண்டிப்பதாலும் பல மாணவ–மாணவிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வதற்காக தற்கொலை செய்யும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இன்றைய காலக்கட்ட மாணவர்கள் மிகவும் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாகவும், எதையும் தாங்கும் மனவலிமை இல்லாதவர்களாகவும் இருக்கிறார்கள். ஒரு சிறுகண்டிப்பு வார்த்தையைக்கூட தாங்கிக்கொள்ள முடியவில்லை. கடந்த சிலமாதங்களாக ஆசிரியர்கள் திட்டியதால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட செய்திகள் பத்திரிகைகளில் வந்ததைப் பார்த்து தமிழகமே கண்ணீர் வடிக்கிறது. 6 மாணவிகள் இவ்வாறு தற்கொலை செய்திருக்கிறார்கள்.

இதுபோன்ற தற்கொலைகளை தடுக்க, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எம்.வி.முரளிதரன் ஒரு வழக்கில் அளித்த தீர்ப்பில் நல்ல பல ஆலோசனைகளை வழங்கியுள்ளார். பழைய காலங்களில் சரியாக படிக்காவிட்டால் அல்லது சரியாக நடந்து கொள்ளாவிட்டால், ஆசிரியர்கள் அடிப்பார்கள் என்ற ஒருபயம் மாணவர்களுக்கு இருந்தது. ஆசிரியர்கள் அடித்தாலும், அதை அப்போது மாணவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. நமக்கு நல்லதுக்குத்தானே ஆசிரியர்கள் கடுமையாக நடந்துகொள்கிறார்கள் என்று நினைப்பார்கள். ஆனால், இப்போதைய மாணவர்கள் அப்படி அல்ல. எளிதில் உணர்ச்சிவசப்பட்டுவிடுகிறார்கள். இதன்காரணமாக, தங்கள் உயிரையே மாய்த்துக் கொள்கிறார்கள். இன்றைய மாணவர்கள் உலகத்தையே தங்கள் ‘ஸ்மார்ட்’ போனில் வைத்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் கம்ப்யூட்டரில் ஒருநொடியில் அறிந்து கொள்கிறார்கள். ஆசிரியர்கள் திட்டுவதை பெரிய அவமானமாக நினைத்து உடனடியாக தவறான முடிவை எடுத்து விடுகிறார்கள். இதற்கு ஒரு நல்ல தீர்வுகாண மாநில அரசு உடனடியாக ஒரு குழுவை அமைக்கவேண்டும். இந்த குழுவில் மனநல ஆலோசகர்களும், கல்வியாளர்களும் இடம்பெறவேண்டும். அந்தக்குழு பள்ளிக்கூட மாணவர்களின் மனரீதியான நிலையை தீவிரமாக ஆராயவேண்டும். அதன்பிறகு மனநல ஆலோசனைகளையும், புத்தாக்கப்பயிற்சிகளையும் மாணவர்கள்–ஆசிரியர்கள் இருவருக்கும் வழங்கவேண்டும். மாணவர்களை திட்டாமல் கையாளும் முறையை கற்றுக்கொடுக்க வேண்டும். ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், பெற்றோரும், மாணவர்களை திட்டுவதோ, அச்சுறுத்துவதோ, அடிப்பதோ கூடாது என்று அந்த தீர்ப்பில் நீதிபதி கூறியிருக்கிறார்.

இந்த தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தகுந்த தீர்ப்பாகும். அரசு இதை உடனடியாக செயல்படுத்த வேண்டும். இன்றைய மாணவர் சமுதாயத்தை மனவலிமை மிக்கவர்களாக மாற்ற என்னென்ன நடைமுறைகளை மேற்கொள்ளலாம்? என்று கல்வித்துறை ஆராயவேண்டும். பள்ளிக்கூடங்களில் இன்றைய கால இளைஞர்களை கையாளுவது என்பது ஒரு தனி கலையாகும். அவர்களை அன்பால் மட்டுமே திருத்தமுடியுமே தவிர, அதட்டியோ, உருட்டியோ பணிய வைக்க முடியாது. எப்படி மாணவர்களுக்கு பாடத்திட்டம் அவ்வப்போது மாற்றப்படுகிறதோ, அதுபோல மாணவர்களை கையாளுவதற்கான பயிற்சிகளைக் கொண்ட பாடத்திட்டமும் ஆசிரியர் பயிற்சி பள்ளிக்கூடங்களிலும் அப்போது மாற்றப்படவேண்டும். பிஞ்சு மலர்கள் கருகும் நிகழ்வு தமிழ்நாட்டில் இனி ஒரு போதும் நடக்கக் கூடாது.

Next Story