சிறுசேமிப்புகளுக்கு வட்டியை குறைப்பதா?


சிறுசேமிப்புகளுக்கு வட்டியை குறைப்பதா?
x
தினத்தந்தி 7 Jan 2018 9:30 PM GMT (Updated: 7 Jan 2018 6:10 PM GMT)

3 மாதங்களுக்கு ஒருமுறை சேமிப்புக்கணக்கில் மக்கள் ‘டெபாசிட்’ செய்யும் தொகைக்கு வழங்கும் வட்டி திருத்தியமைக்கப்படுகிறது.

3 மாதங்களுக்கு ஒருமுறை சேமிப்புக்கணக்கில் மக்கள் ‘டெபாசிட்’ செய்யும் தொகைக்கு வழங்கும் வட்டி திருத்தியமைக்கப்படுகிறது. அந்தவகையில், 2018–ம் ஆண்டு ஜனவரி 1–ந்தேதி முதல் மார்ச் 31–ந்தேதி வரையிலான சிறுசேமிப்புகளுக்கு வழங்கப்படும் வட்டித்தொகை அதிகம் இல்லையென்றாலும் குறைக்கப்பட்டுள்ளது. சேமிப்பு கணக்குக்கு வழங்கப்படும் 4 சதவீத வட்டியிலும், மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டு சேமிப்புக்கு வழங்கப்படும் 8.3 சதவீத வட்டியிலும் மாற்றம் இல்லை. மூத்த குடிமக்களுக்கு இது மகிழ்ச்சி அளிக்கும் செய்தியென்றாலும், ஒரு ஆண்டு ‘டெபாசிட்’க்கு வழங்கப்படும் 6.8 சதவீத வட்டி 6.6 சதவீதமாகவும், 2 ஆண்டுகளுக்கான வட்டி 6.9 சதவீதத்திலிருந்து 6.7 சதவீதமாகவும், 3 ஆண்டுகளுக்கான வட்டி 7.1 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாகவும், 5 ஆண்டுகளுக்கான டெபாசிட்டுக்கு 7.6 சதவீதத்திலிருந்து 7.4 சதவீதமாகவும், 5 ஆண்டுகளுக்கான ‘ரெக்கரிங் டெபாசிட்’டுக்கு (தொடர்வைப்பு) 7.1 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாகவும், 5 ஆண்டுகளுக்கான மாதாந்திர சேமிப்புக் கணக்குக்கான வட்டி 7.5 சதவீதத்திலிருந்து 7.3 சதவீதமாகவும், 5 ஆண்டு தேசிய சேமிப்பு பத்திரங்கள் மற்றும் ‘பப்ளிக் பிராவிடண்டு பண்டு’க்கான (வருங்கால வைப்புநிதி) வட்டி 7.8 சதவீதத்தில் இருந்து 7.6 சதவீதமாகவும், கிசான் விகாஸ் பத்திரத்துக்கான வட்டி 7.5 சதவீதத்திலிருந்து 7.3 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளுக்கான ‘செல்வ மகள்’ சேமிப்புத்திட்டம், ஆண் குழந்தைகளுக்கான ‘செல்வ மகன்’ சேமிப்புத்திட்டங்களுக்கு கூட 8.3 சதவீதத்தில் இருந்து 8.1 சதவீதமாக வட்டி குறைக்கப்பட்டுள்ளது.

2016–ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து ஒவ்வொரு காலாண்டிலும் தொடர்ந்து சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறைந்துகொண்டே வருவது அந்த நம்பிக்கைக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 2016–ம் ஆண்டு மார்ச் மாதத்தில் செல்வ மகள் சேமிப்புத்திட்டத்துக்கான வட்டி 9.2 சதவீதமாக இருந்தது. இனி அது 8.1 சதவீதம்தான். ஒரு ஆண்டு டெபாசிட் 8.4 சதவீதமாக இருந்தது, இப்போது 6.6 சதவீதமாக குறைந்துவிட்டது. இப்படி எல்லா சேமிப்புகளுக்குமான வட்டி ஒரு சதவீதத்துக்கும்மேல் குறைந்துவிட்டது. சிறுசேமிப்பு திட்டங்களில் பொதுமக்கள் முதலீடு செய்யும் தொகை மத்திய–மாநில அரசுகள் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை நிறைவேற்ற துணையாக இருக்கிறது.

மக்கள் சிறுசேமிப்பு திட்டங்களில் சேமிக்க ஆர்வமாக வருவதற்கு காரணம், இது பாதுகாப்பானது, உறுதியான வட்டிக்கிடைக்கும் என்பதால்தான். மியூச்சுவல் பண்டு போன்ற முதலீடுகள் அதிகவருவாய் தருகிறது என்று மக்களை கவர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில், இவ்வாறு வட்டியை குறைத்து அவர்கள் சிறுசேமிப்புகளை நாடிவருவதற்கு தடைவிதிக்கக்கூடாது. ஒருபக்கம் சேமிப்பு என்றாலும், ‘பப்ளிக் பிராவிடண்டு பண்டு’ சேமிப்பு ஓய்வுகாலத்தில் பலனளிக்கும் திட்டம். அதுபோல சிறு குழந்தைகளுக்கான சேமிப்புத்திட்டம் அவர்கள் எதிர்காலத்துக்கு பாதுகாப்பு அளிக்கும் திட்டமாகும். நம்பகத்தன்மை வாய்ந்த சேமிப்பாகவே எப்போதும் இருப்பது தபால் அலுவலகங்களில் முதலீடு செய்யப்படும் சிறுசேமிப்புதான் என்று மக்கள் நம்புகிறார்கள். இவ்வாறு தபால் அலுவலகங்களில் உள்ள சிறுசேமிப்புகளுக்கான வட்டியை தொடர்ந்து குறைத்துவந்தால், அதிக வட்டி தருவதாகக்கூறும் தனியார் நிதிநிறுவனங்கள் பக்கம் மக்கள் பார்வை போய்விடும்.

Next Story