ஆற்று மணல் இறக்குமதிக்கு கட்டுப்பாடா?


ஆற்று மணல் இறக்குமதிக்கு கட்டுப்பாடா?
x
தினத்தந்தி 8 Jan 2018 11:30 PM GMT (Updated: 2018-01-08T22:38:52+05:30)

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆற்று மணலுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் குறித்து அரசு பிறப்பித்துள்ள உத்தரவு.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆற்று மணலுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் குறித்து அரசு பிறப்பித்துள்ள உத்தரவு தமிழ்நாடு முழுவதும் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆற்று மணல் என்பது இயற்கை அள்ளித்தரும் ‘இலவச தங்கம்’ என்று கிராமப்புறங்களில் கூறுவார்கள். அப்படிப்பட்ட ஆற்றுமணல் இப்போது கொள்ளையடிக்கப்பட்டு ஆறுகளெல்லாம் கட்டாந்தரையாகிவிட்டது. இவ்வாறு ஆற்றுமணல் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு மக்களெல்லாம் மனம்வெதும்பி இருக்கிறார்கள்.

கடந்த நவம்பர் மாதம் சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை பிறப்பித்த ஒரு உத்தரவில், ‘6 மாதங்களுக்குள் ஆற்றில் மணல் எடுப்பதை தடை செய்யவேண்டும். மாற்றுவழியாக வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்வதை அரசு தீவிரமாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது. மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 54 ஆயிரம் டன் ஆற்றுமணலை தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து வெளியே கொண்டுவர தமிழக அரசு தடைவிதித்த நேரத்தில், அதை எதிர்த்து ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் ஐகோர்ட்டு இதற்கு அனுமதி அளித்தது. இப்போது மீண்டும் மலேசியாவில் இருந்து கொண்டு வந்த 58 ஆயிரத்து 616 டன் மணலை கப்பலில் இருந்து இறக்குமதி செய்ய தமிழகஅரசு அனுமதி கொடுக்காததால், அந்த கப்பல் மங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. இந்தநிலையில், கட்டுமானத்திற்காக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டோ அல்லது வெளிமாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் மணலை தமிழகத்தில் கிடங்குகளில் சேமித்து வைப்பதற்கோ, விற்பனை செய்வதற்கோ யாருக்கும் உரிமை இல்லை என்றும், அந்த உரிமை தமிழக அரசின் பொதுப்பணித்துறைக்கு மட்டும்தான் உள்ளது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த உத்தரவில், இறக்குமதி செய்யப்படும் மணல் எப்படிப்பட்ட தன்மை கொண்டதாய் இருக்கவேண்டும் என்பதையும் பொதுப்பணித்துறைதான் முடிவுசெய்யும் என்றும், அந்ததன்மைக்கு குறைவாக காணப்படும் மணலை நிராகரிக்கவும் பொதுப்பணித்துறைக்கு அதிகாரம் அளித்து அந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனியார் இறக்குமதி செய்யும் மணலையும் பொதுப்பணித்துறைக்குத்தான் விற்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆக, ஆற்றுமணல் விற்பனை பொதுப்பணித்துறையிடம் இருப்பதுபோல, இறக்குமதி மணல் விற்பனையும் பொதுப்பணித்துறையிடம்தான் போகும். இந்த ஆணை மணல் இறக்குமதியை பெரிதளவும் பாதிக்கும்.

அரசாங்கம்தான் கிட்டங்கியில் சேமித்து வைக்கவேண்டும், விற்பனை செய்யவேண்டும் என்றால், மொத்தத்தில் மணலை அரசாங்கமே இறக்குமதி செய்துவிடலாமே! என்ற ஒரு கருத்தும் இருக்கிறது. கட்டுமான தொழிலுக்கு மணலைப்போல் பயன்படும் இரும்பு, சிமெண்ட் போன்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசாங்க விதிகள் மட்டும் உள்ள நிலையில், மணலுக்கு மட்டும் தமிழக அரசு கட்டுப்பாடு விதிப்பது தேவையில்லையே என்று கட்டுமான தொழிலில் இருப்பவர்கள் கருதுகிறார்கள். தனியார் மணலை இறக்குமதி செய்ய அனுமதிக்கும்போது மணலின் தரத்தை பரிசோதிப்பது நிச்சயமாக சரியானதுதான். ஆனால் சேமிப்பதையும், எடுத்துச் செல்வதையும், விற்பதையும் கட்டுப்படுத்துவது என்பது நிச்சயமாக தனியார் இவ்வாறு இறக்குமதி செய்வதற்கு தடைசெய்யும் முயற்சி என்பது அவர்கள் கூற்று. ஐகோர்ட்டின் உத்தரவின்படி, மணல் குவாரிகளை தடைசெய்ய வேண்டுமென்றால், தாராளமாக மணலை இறக்குமதி செய்து விற்க அனுமதிப்பதுதான் சாலச்சிறந்ததாகும்.

Next Story