மாணவர்கள் நடப்போகும் மரக்கன்றுகள்


மாணவர்கள் நடப்போகும் மரக்கன்றுகள்
x
தினத்தந்தி 9 Jan 2018 9:30 PM GMT (Updated: 9 Jan 2018 12:06 PM GMT)

தமிழ்நாட்டில் மழைவளம் குறைந்துகொண்டே போகிறது. இதற்கு முக்கிய காரணம் வனவளம், மரவளம் இல்லாததுதான். மரவளம் இருந்தால்தான் நாட்டில் மழைவளம் நன்றாக இருக்கும்.

மிழ்நாட்டில் மழைவளம் குறைந்துகொண்டே போகிறது. இதற்கு முக்கிய காரணம் வனவளம், மரவளம் இல்லாததுதான். மரவளம் இருந்தால்தான் நாட்டில் மழைவளம் நன்றாக இருக்கும். தேசிய வனக்கொள்கையின்படி ஒரு மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் 33 சதவீதம் வனப்பரப்பாகவும், மரஅடர்த்தி பசுமை பரப்பாகவும் இருக்கவேண்டும். ஆனால், தமிழ்நாட்டிலுள்ள மொத்த வனப்பரப்பை கணக்கில் கொண்டால் 17.59 சதவீதம்தான் இருக்கிறது. மொத்த வன மற்றும் மரஅடர்த்தி பரப்பை கணக்கில் கொண்டால் 23.72 சதவீதம்தான் இருக்கிறது. ஆக, வனம் மற்றும் மரஅடர்த்தி பரப்பை அதிகரிப்பதில் மிகவும் முன்னுரிமை வழங்கப்படவேண்டும்.

2012–ம் ஆண்டு ஜெயலலிதாவின் 64–வது பிறந்தநாளையொட்டி, 64 லட்சம் மரக்கன்றுகள் நடும்பணி தொடங்கியது. அதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் அவருடைய வயதை குறிக்கும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த ஆண்டு 69 லட்சம் மரக்கன்றுகள் நடும்பணிக்காக வனத்துறைக்கு ரூ.65 கோடியே 85 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல, அரசு மட்டுமல்லாமல், எல்லோரும் மரக்கன்றுகளை நடுகிறார்கள். இந்த மரக்கன்றுகள் எல்லாம் நன்கு பராமரிக்கப்பட்டு மரமாக வளர்ந்திருந்தால், தமிழ்நாட்டில் இப்போது 6 கோடிக்கும் அதிகமான மரங்கள் வளர்ந்து எங்குபார்த்தாலும் அடர்ந்த மரச்செறிவுகளாக இருந்திருக்கவேண்டும். ஆனால், அப்படியில்லை. அதற்கு காரணம் நடப்படும் மரக்கன்றுகள் எல்லாம் சரியாக பராமரிக்கப்படுவதில்லை. விழாக்களில் மரக்கன்றுகளை நடுவதோடு வேலைமுடிந்துவிடுகிறது. மரக்கன்றுகளும் தண்ணீர் இல்லாமல் பட்டுப்போய்விடுகின்றன.

இந்தநிலையில், ஒரு அருமையான திட்டத்தை கல்வித்துறை பரிசீலிக்கிறது. கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், முதல்–அமைச்சரிடம் இந்தத்திட்டத்தை தாக்கல்செய்து, அவர் பரிசீலித்து அவருடைய ஒப்புதல் கிடைத்தபிறகு, மாணவர்கள் மரம்நடும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார். 9–ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 5 மரக்கன்றுகளை தங்கள் வீட்டின் அருகிலோ, தங்களுக்கு சொந்தமான நிலங்களிலோ, தோட்டங்களிலோ வளர்க்கவேண்டும். அத்தகைய வசதியில்லாத மாணவர்கள் அரசாங்கத்தின் புறம்போக்கு நிலங்களிலோ, நெடுஞ்சாலைகளிலோ, அரசு அலுவலக அதிகாரிகளின் அனுமதிப்பெற்று அரசு அலுவலகங்களின் வளாகங்களிலோ, பள்ளிக்கூட வளாகங்களிலோ நடலாம். மரக்கன்றுகளை நடுவதோடு அவர்கள் கடமை முடிந்து விடுவதில்லை. ஒரு ஆண்டுக்கும் மேலாக பராமரித்து, அந்தமரங்கள் தானாக வளரும் பருவம்வரை வளர்க்கவேண்டும். அப்படி வளர்க்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்திலும் 2 மதிப்பெண்கள் வீதம், 6 பாடங்களிலும் 12 மதிப்பெண்கள்வரை கூடுதலாக போடலாமா? என்ற திட்டமும் கல்வித்துறையிடம் உள்ளது. இது ஒரு வரவேற்கத்தகுந்த திட்டமாகும். நிச்சயமாக முதல்–அமைச்சர் ஒப்புதல் கொடுத்து நல்ல முடிவுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத்திட்டத்தில் மாணவர்களுக்கு மரக்கன்றுகளை கொடுத்து தண்ணீர்விடுவதற்கும், உரம் இடுவதற்கும் அரசே உதவவேண்டும். 40 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக்கூடங்களில் கைத்தொழில் ஆசிரியர், சில பள்ளிக்கூடங்களில் தோட்டவேலை ஆசிரியர்கள் இருந்தனர். அவர்கள் மாணவர்களுக்கு தோட்டப்பயிர்கள் சாகுபடி செய்வதை கற்றுக்கொடுத்தனர். இடமுள்ள பள்ளிக்கூடங்களில் ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு பாத்தி கொடுத்து கீரை, காய்கறிகளை பயிரிட செய்தனர். அதுபோன்று, விவசாய ஆசிரியர்களை பள்ளிக்கூடங்களில் நியமிக்கலாமா என்பதையும் அரசு பரிசீலிக்கவேண்டும்.

Next Story