குறைந்து வரும் வெளிநாட்டு நேரடி முதலீடு


குறைந்து வரும் வெளிநாட்டு நேரடி முதலீடு
x
தினத்தந்தி 10 Jan 2018 9:30 PM GMT (Updated: 2018-01-10T17:36:34+05:30)

இந்தியா முழுவதிலும் இப்போது ஒரு ஆரோக்கியமான போட்டி நிலவி வருகிறது. வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களை, தங்கள் மாநிலத்தில் தொழில் தொடங்க ஈர்ப்பதில் அனைத்து மாநிலங்களுக்கும் இடையே ஒரு பெரியபோட்டி நிலவி வருகிறது.

ந்தியா முழுவதிலும் இப்போது ஒரு ஆரோக்கியமான போட்டி நிலவி வருகிறது. வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களை, தங்கள் மாநிலத்தில் தொழில் தொடங்க ஈர்ப்பதில் அனைத்து மாநிலங்களுக்கும் இடையே ஒரு பெரியபோட்டி நிலவி வருகிறது. வெளிநாடுகளை மட்டுமல்லாமல், அடுத்த மாநிலங்களில் உள்ள தொழில்முனைவோரையும் தங்கள் மாநிலத்திற்கு வந்து தொழில் தொடங்க அழைப்பதில் எல்லா மாநிலங்களும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. அசாம் மாநில முதல்–மந்திரி சர்பானந்த சோனோவால் கடந்த திங்கட்கிழமை சென்னைக்கு வந்து, எங்கள் மாநிலத்தில் பிப்ரவரி 3, 4–ந்தேதிகளில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது. எங்கள் மாநிலம் தொழில் தொடங்க உகந்த மாநிலமாக இருக்கிறது என்றெல்லாம் சொல்லி தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்நாட்டில் தொழில் தொடங்கதான் சர்வதேச முதலீட்டாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு வந்தார்கள். அதனால்தான் இந்தியாவின் டெட்ராயிட் என்று அழைக்கத் தகுந்த வகையில், அனைத்து மோட்டார் வாகன தொழில்களும் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது.

ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘கியா மோட்டார்ஸ்’ நிறுவனம் சென்னையில் தொழில் தொடங்காமல், ஆந்திராவிற்கு சென்றிருக்கிறது. கொரிய நாட்டு நிறுவனமான ‘கியா மோட்டார்ஸ்’ நிறுவனம் ஆந்திராவில் ரூ.10,300 கோடி முதலீட்டில் ஒரு பெரிய கார் தொழிற்சாலை தொடங்க திட்டமிட்டு, முதல் கட்டமாக ஏறத்தாழ ரூ.7ஆயிரம் கோடி முதலீட்டில் அங்குள்ள அனந்தபூரில் பிரமாண்டமான ஒரு தொழிற்சாலை அமைக்க கட்டுமானப்பணிகளை தொடங்கிவிட்டது. இந்தநிறுவனத்தின் மூலம் 10 ஆயிரம் பேருக்கு கூடுதலாக வேலைவாய்ப்பு கிடைக்கப்போகிறது. இதுமட்டுமல்லாமல், நேற்றுமுன்தினம் சித்தூர் மாவட்டத்தில் அப்பல்லோ டயர்ஸ் நிறுவனத்தின் புதிய தொழிற்சாலைக்காக ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டியிருக்கிறார். புதிய தொழிற்சாலைகள் ஆந்திராவுக்கு செல்வது உடனடியாக கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும். பொதுவாக இதுபோன்ற பிரமாண்டமான தொழிற்சாலைகள் தொடங்கும்போது அதை சார்ந்து நிறைய சிறுதொழில்கள் தொடங்கப்படும். அந்த பகுதியில் வேலைவாய்ப்பும், வர்த்தகமும் பெருகும். உள்கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கும். அரசுக்கும் வரி வருவாய் கிடைக்கும்.

இந்தநிலையில், பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு அறிக்கையில், 2015– 2016–ம் ஆண்டு தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அன்னியநாட்டு முதலீடு 2016–2017–ல் 50 சதவீதம் குறைந்துவிட்டது என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்துள்ளது. 2015–2016–ம் ஆண்டில் ரூ.28 ஆயிரத்து 608 கோடியாக இருந்த வெளிநாட்டு நேரடி முதலீடு, 2016–2017–ல் ரூ.13 ஆயிரத்து 987 கோடியாக குறைந்துவிட்டது. 2017–2018–ல் இன்னும் அதைவிட குறைவாகத்தான் இருக்கும். அதேநேரத்தில் அண்டை மாநிலங்களிலும் மற்றும் மராட்டியம், குஜராத் போன்ற மாநிலங்களிலும் வெளிநாட்டு முதலீடுகள் மிகஅதிகமாக உயர்ந்திருக்கின்றன. தமிழ்நாட்டை விட்டுவிட்டு, பிறமாநிலங்களுக்கு எதற்காக வெளிநாட்டு நிறுவனங்கள் ஓடுகின்றன என்ற காரணத்தை அரசு ஆராய்ந்து அந்த குறைகளை எல்லாம் உடனடியாக நீக்கவேண்டும். ஏராளமான புதிய தொழில்களை ஈர்த்து தமிழ்நாடுதான் தொழில் முதலீட்டிற்கு உகந்த மாநிலம் என்ற பெயர் வர வேண்டும்.

Next Story