‘நீட்’ பயிற்சி மையங்கள் என்ன ஆனது?


‘நீட்’ பயிற்சி மையங்கள் என்ன ஆனது?
x
தினத்தந்தி 10 Jan 2018 11:30 PM GMT (Updated: 11 Jan 2018 6:33 PM GMT)

2016-ம் ஆண்டுவரை தமிழ்நாட்டில் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை பிளஸ்-2 தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தான் நடந்தது.

2016-ம் ஆண்டுவரை தமிழ்நாட்டில் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை பிளஸ்-2 தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில்தான் நடந்தது. கடந்த ஆண்டு முதல் கட்டாயம் ‘நீட்’ தேர்வின் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், இதை ரத்து செய்ய தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் குரல் எழுப்பினர். தமிழக அரசும் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டது. ஆனால் எதுவும் நடக்கவில்லை. ‘நீட்’ தேர்வின் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. ‘நீட்’ தேர்வு மத்திய கல்வித்திட்டம் (சி.பி.எஸ்.இ) அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வினாக்களைக் கொண்டது. மாநில கல்வித்திட்டத்தின்கீழ் படித்த மாணவர்களால் நிச்சயம் இந்த தேர்வை எதிர்கொள்ளமுடியாது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகும். மேலும், நகர்ப்புறங்களில் உள்ள மாணவர்கள் தனியார் நடத்தும் ‘நீட்’ தேர்வு பயிற்சிமையங்களில் சேர்ந்து தங்களை தகுதி படைத்தவர்களாக்கிக்கொள்கிறார்கள். ஆனால், கிராமப்புறங்களில் படிக்கும் மாணவர்களுக்கு அத்தகைய வாய்ப்பும் இல்லை, அதற்கான பணவசதியும் இல்லை.

எதிர்காலத்தில் ‘நீட்’ தேர்வின் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடக்கும். தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூட மாணவர்களுக்காக 412 ‘நீட்’ தேர்வு பயிற்சிமையங்கள் தொடங்கப்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு, கடந்த 13-11-2017 அன்று 100 பயிற்சி மையங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். மீதமுள்ள 312 மையங்களும் விரைவில் தொடங்கப்படும், மாணவர்களிடம் இருந்து எந்தவித கட்டணத்தையும் பெறாமல் 12-ம் வகுப்பிற்குப்பின் தொழில்சார் பட்டப்படிப்புகளில் சேர விருப்பம் உள்ள மாணவர்களுக்கு முற்றிலும் இந்த பயிற்சி இலவசமாக வழங்கப்படும். சனி மற்றும் ஞாயிறு ஆகிய பள்ளி விடுமுறை நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், பொதுத்தேர்வு முடிந்தபிறகு தினமும் இதேநேரத்தில் நடத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது. தொடங்கப்பட்ட பல மையங்களில் பதிவு செய்த மாணவர்கள் அனைவரும் வருவதில்லை என்ற குறை இருந்தாலும், எங்கெங்கு தேவை இருக்கிறது என்று பார்த்து 312 மையங்களை தொடங்கலாம் என்பதுதான் மாணவர்களின் கோரிக்கை.

மே மாதம் ‘நீட்’ தேர்வு நடக்க இருக்கிறது. மார்ச் மாதத்தில் பிளஸ்-2 தேர்வுக்கான இறுதிதேர்வு நடக்க இருக்கிறது. இந்தநிலையில், கிராமப்புறங்களில் இன்னமும் ‘நீட்’ பயிற்சிமையங்கள் அமைக்காமல் இருப்பது மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இனி ‘நீட்’ தேர்வுமையத்தை தொடங்கினால் மே மாதத்திற்குள் மாணவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வசதியாக இருக்குமா?, இந்த ஆண்டு மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் பழைய நிலைபோல சி.பி.எஸ்.இ. படித்தவர்களுக்கும், நகர்ப்புறங்களில் படித்த மாணவர்களுக்கும் மட்டுமே இடம் கிடைக்குமோ?, நமக்கெல்லாம் கிடைக்காமல் போய்விடுமோ? என்ற கவலையில் இருக்கும் மாணவர்களின் குறையைப்போக்கும் வகையில், தேவையிருக்கும் 312 இடங்களிலும் ‘நீட்’ பயிற்சி மையங்களை உடனடியாக தமிழக அரசு தொடங்கவேண்டும். புதிய பாடத்திட்டத்தை வகுக்கும்போது, ‘நீட்’ தேர்வை எளிதில் எதிர்கொள்ளும் வகையில் பாடங்களின் தரம் உயர்த்தப்படவேண்டும்.

Next Story