நஷ்டத்தில் இயங்கும் பஸ் ரூட்டுகள்


நஷ்டத்தில் இயங்கும் பஸ் ரூட்டுகள்
x
தினத்தந்தி 15 Jan 2018 9:30 PM GMT (Updated: 2018-01-15T22:36:34+05:30)

அரசு போக்குவரத்துக்கழகங்கள் தொடர்ந்து நஷ்டத்தில்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன.

டந்த 4–ந்தேதி இரவிலிருந்து 11–ந் தேதி வரை 8 நாட்களாக போக்குவரத்துக்கழக ஊழியர்கள் நடத்திய வேலைநிறுத்த போராட்டத்தால் தமிழக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அரசும் தீவிரமாக நடவடிக்கை எடுத்து ஓரளவு நிலைமையை சமாளித்தது. வழக்கமாகவே தினமும் ஒரு கோடியே 80 லட்சம் மக்கள் அரசு போக்குவரத்துக்கழக பஸ்களையே பயன்படுத்தி வருகிறார்கள். பொங்கல் நேரம் என்பதால் மேலும் ஏராளமான மக்கள் பொருட்கள் வாங்குவதற்கும், சொந்த ஊர்களுக்கு செல்வதற்கும் அரசு பஸ்களையே நம்பியிருந்ததால், அன்றாட வாழ்க்கையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. தொழிலாளர்கள் தரப்பில் ஊதிய உயர்வு கேட்டது ஒரு கோரிக்கை என்றாலும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பிராவிடண்ட் பண்டு, பணிக்கொடை, ஓய்வூதியம், ஓய்வூதிய ஒப்படைப்புத்தொகை, விடுப்புசம்பளம் போன்ற ஓய்வுகால பலன்களை 10 ஆண்டுகளுக்கும் மேலாக தரவில்லை என்பதுதான் பெரிய கோரிக்கையாக இருந்தது. தொழிலாளர்கள் தரப்பில் எங்களிடமிருந்து மாதம் மாதம் வசூலித்த பணத்தை அதற்குரிய கணக்குகளில் செலுத்தாமல், நிர்வாகசெலவுக்கு மாற்றியதால்தான் ஓய்வுபெற்றவர்களுக்கு ஓய்வுகால ஊதியத்தை கொடுக்கவில்லை என்றார்கள். 

சட்டசபையில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கலுக்கு முன்பு ரூ.750 கோடி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என அறிவித்தார். பேச்சுவார்த்தையில் முடியாத வேலைநிறுத்தம், சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் எதிரொலியாக முடிவுக்கு வந்தது. ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை மத்தியஸ்தராக நியமித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அரசு போக்குவரத்துக்கழகங்கள் தொடர்ந்து நஷ்டத்தில்தான்  இயங்கிக்கொண்டிருக்கின்றன. தினமும் ரூ.9 கோடி நஷ்டத்தில் இயங்குகிறது. போக்குவரத்துக்கழகங்கள் கடந்த ஜூன் மாதம் 30–ந்தேதி கணக்குப்படி, ரூ.17 ஆயிரத்து 64 கோடியே 88 லட்சம் நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஏராளமான பஸ் டெப்போக்களும், பஸ்களும், வங்கியிலும், நிதிநிறுவனத்திலும்தான் அடகுவைக்கப்பட்டுள்ளது. இது ஒரு சேவைத்துறை என்றாலும், நஷ்டத்தில் இயங்கும்போது அது பொதுமக்களிடமிருந்து வாங்கும் வரிப்பணத்தில்தான் ஈடுகட்டப்படுகிறது. 

முன்னதாக இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ‘‘போக்குவரத்துக்கழகங்களை சரியாக நிர்வகிக்க முடியாவிட்டால் அதை தனியார் மயமாக்கிவிடலாம். ஆனால், இப்போது வேலைபார்க்கும் தொழிலாளர்கள் ஓய்வுபெறும்வரை எந்த பாதிப்பையும் அடையக்கூடாது’’ என்று கூறியிருக்கிறார். போக்குவரத்துக்கழகங்களை முழுமையாக தனியார் மயமாக்க தேவையில்லை. ஆனால், தொடர்ந்து மீளமுடியாமல் நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் பஸ் ரூட்டுகளை மட்டும் தனியாரிடம் ஒப்படைக்கலாமா? என்பதைப்பற்றி பரிசீலிக்கவேண்டும். மத்திய அரசாங்கம் சார்பில் நலிவடைந்த தொழிற்சாலைகளை இதுபோலத்தான் தனியாருக்கு ஒப்படைக்கிறார்கள். தனியாருக்கு ஒப்படைக்கும் நேரத்தில், வேலையில்லாத இளைஞர்கள் ஒரு குழுவாக சேர்ந்து கூட்டுறவு சங்கங்கள் அமைத்து, இத்தகைய ரூட்டுகளுக்கு விண்ணப்பித்தால் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து கடன் உதவியும், மானியமும் வழங்க ஏற்பாடு செய்யலாம். அத்தகைய ரூட்டுகளில் இலவச பஸ் பாஸ் வைத்துக்கொண்டு பயணம் செய்யும் மாணவர்களுக்கான கட்டணத்தையும் அரசே கொடுத்துவிடலாம்.

Next Story