எம்.ஜி.ஆரின் நிறைவேறாத ஆசைகள்


எம்.ஜி.ஆரின் நிறைவேறாத ஆசைகள்
x
தினத்தந்தி 16 Jan 2018 9:30 PM GMT (Updated: 2018-01-16T23:39:06+05:30)

மறைந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவுநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இன்றுதான் அவரது பிறந்தநாள். சினிமாவிலும், அரசியலிலும் தோல்வியே காணாதவர் அவர்.

றைந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவுநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இன்றுதான் அவரது பிறந்தநாள். சினிமாவிலும், அரசியலிலும் தோல்வியே காணாதவர் அவர். 1967–ம் ஆண்டு தேர்தலின்போது துப்பாக்கியால் சுடப்பட்டு, ஆஸ்பத்திரியில் இருந்த நேரத்திலும், 1985–ம் ஆண்டு புரூக்லின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நேரத்திலும், மக்களை சந்திக்காமலேயே தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றவர். அவர் 3 முறை முதல்–அமைச்சராக இருந்த நேரத்திலும், நிறையத்திட்டங்களை நிறைவேற்றினார். ஆனாலும், அவர் ஆசைகள் பல இன்னும் நிறைவேறாமல் இருக்கின்றன. அவர் முதல்–அமைச்சராக இருந்த நேரத்தில், அவருடைய அன்புக்கு பாத்திரமான செயலாளர்களில் ஒருவராக இருந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பிச்சாண்டி, எம்.ஜி.ஆர். தனது ஆட்சியின்போது நிறைவேற்ற நினைத்து, நிறைவேறாமல்போன பல திட்டங்களை பட்டியலிட்டு காட்டினார்.

அரசியல் என்பது எதிரிகளையும் நண்பர்களாக்கும் கலை என்பதை நன்றாக தெரிந்துவைத்திருந்தவர் எம்.ஜி.ஆர்., அதனால்தான் மத்திய அரசாங்கத்தோடு நல்லிணக்கமாக இருந்து பல திட்டங்களை தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்தார். அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா முதல்–மந்திரிகளோடு மிகவும் நட்பு பாராட்டியதால், அந்த மாநிலங்களோடு உரசல் ஏற்படாமல் பார்த்துக்கொண்டார். சென்னையில் உள்ள தண்ணீர் பஞ்சத்தை போக்க ஆந்திர முதல்–மந்திரி என்.டி.ராமராவோடு அவர் கொண்ட நட்புதான், கிருஷ்ணா நதிநீர் திட்டத்தை கொண்டுவந்தது. தலைநகரத்தை தமிழ்நாட்டின் மையப்பகுதியான திருச்சிக்கும், தஞ்சைக்கும் இடையே கொண்டுபோகவேண்டும் என விரும்பி இடமெல்லாம் தேர்வு செய்தார். ஆனால், நிறைய எதிர்ப்புகள் கிளம்பியதால் அந்தத்திட்டத்தை கைவிட்டார். ஏழை குழந்தைகள் பசியாற சத்துணவுத் திட்டத்தை ஒரு முன்னோடி திட்டமாக கொண்டுவந்தார். பல புதிய சத்துணவு கூடங்களை உருவாக்கி, பழைய சத்துணவு கூடங்களை எல்லாம் நவீன முறைப்படி மாற்றியமைக்க விரும்பினார். பள்ளிக்கூடத்திற்கு செல்லும் குழந்தைகளுக்கு இலவச காலணித்திட்டம் கொண்டுவந்த அவர், விவசாய தொழில் செய்யும் பெண்களுக்கும் இலவச காலணி வழங்கும் திட்டத்தை கொண்டுவர பூர்வாங்க நடவடிக்கை எடுத்தார். ஆனால், அதை நிறைவேற்றும் முன்பு மறைந்துவிட்டார்.

இதேபோல, யூக்கலிப்டஸ் மரம் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி மழைவருவதை தடுக்கும் என்பதால், வனப்பகுதிகளில் யூக்கலிப்டஸ் மரம் சாகுபடி செய்ய தடைவிதிக்க விரும்பினார். அதற்காக வல்லுனர்களுடன் ஆலோசனையும் நடத்தினார். சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு கடலில் அதிவேகமாக செல்லும் ஹோவர் கிராப்டு எனப்படும் அதிவேக படகுபோக்குவரத்து தொடங்க முயற்சி எடுத்தார். மாவட்டவாரியான 5 ஆண்டு திட்டங்கள் வகுத்து, அதற்கு நிதியும் ஒதுக்கி, அந்த மாவட்டங்கள் பயன்பெற பல திட்டங்களை நிறைவேற்ற எண்ணம் கொண்டிருந்தார். உலக தமிழ்ச் சங்கத்தின் மூலம் தமிழ் வளர்ச்சிக்கு பல திட்டங்களை நிறைவேற்ற நினைத்தார். தொல்பொருள் ஆராய்ச்சியில் அதிக ஈடுபாடு கொண்ட அவர், இன்னும் நிறைய இடங்களில் அகழ்வாராய்ச்சிகளை தொடங்க திட்டமிட்டார். கல்வெட்டுகளை எல்லாம் தொகுத்து நூல்களாக்க விரும்பினார். இப்படி தமிழ்நாட்டில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நிறைவேற்றிய திட்டங்களோடு நிறைவேற்ற நினைத்து, நிறைவேற்றப்படாத ஏராளமான திட்டங்கள் அவருடைய கனவாகவே இருக்கின்றன.

Next Story