வேலைவாய்ப்புகளை பெருக்க முயற்சிகள் வேண்டும்


வேலைவாய்ப்புகளை பெருக்க முயற்சிகள் வேண்டும்
x
தினத்தந்தி 17 Jan 2018 9:30 PM GMT (Updated: 17 Jan 2018 6:12 PM GMT)

தமிழ்நாடு வளர்ச்சிமிகுந்த மாநிலமாக வேகமாக நடைபோட வேண்டுமென்றால், பொருளாதார வளர்ச்சி உச்சநிலையில் இருக்கவேண்டுமென்றால், நிச்சயமாக தொழில்வளர்ச்சி அபரிமிதமாக இருக்கவேண்டும்.

மிழ்நாடு வளர்ச்சிமிகுந்த மாநிலமாக வேகமாக நடைபோட வேண்டுமென்றால், பொருளாதார வளர்ச்சி உச்சநிலையில் இருக்கவேண்டுமென்றால், நிச்சயமாக தொழில்வளர்ச்சி அபரிமிதமாக இருக்கவேண்டும். தொழில்வளர்ச்சி அதிகமாக இருக்கும் நேரத்தில்தான் வேலைவாய்ப்பு பெருகும். இதன்மூலம் தனிநபர் வருமானம் உயர்ந்து, அதன் எதிரொலியாக வர்த்தகமும் தழைக்கும். ஆனால், தமிழ்நாட்டில் சமீபகாலங்களாக வேலைவாய்ப்பு குறைந்துகொண்டே இருக்கிறது. கல்விவளர்ச்சி மேம்பட்டு இருக்கும்நிலையில், பெரும்பாலானோர் இடைநிற்றல் இல்லாமல் பள்ளிப்படிப்பையும், கல்லூரி படிப்பையும் முடித்துவிடுகிறார்கள். படித்துமுடித்து வெளியே வரும்போது வேலையில்லாத திண்டாட்டத்தால் தாங்கள் படித்த படிப்புக்கேற்ற வேலைகிடைக்காவிட்டாலும், ஏதாவது சிறிய வேலை கிடைக்குமா? என்ற ஏக்கத்தில் தேடி அலைகிறார்கள். இதன் காரணமாகத்தான் பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர்கள், பட்டதாரிகள், முதுகலை பட்டப்படிப்பு படித்தவர்கள்கூட மிகச்சாதாரண வேலையில் சொற்பசம்பளத்தில் சேருவதற்குகூட தயாராக இருக்கிறார்கள்.

பாராளுமன்றத்தில் மத்திய தொழிலாளர் நல அமைச்சகம், தாக்கல் செய்த ஒரு அறிக்கையில் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகள் குறைந்திருக்கும் ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியேவந்துள்ளது. 2013–14 முதல் 2015–16–ம் வரையிலான காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை 0.5 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இந்த கணக்கு எப்படி எடுக்கப்படுகிறது என்றால், 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு ஆண்டில் பெரும்பாலான மாதங்களில் வேலையில்லாமல் இருக்கும்நிலையை வைத்து மதிப்பிடப்படுகிறது. தேசியஅளவில் வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை சராசரியாக 3.7 சதவீதம். ஆனால் தமிழ்நாட்டில் 3.8 சதவீதம் இருக்கிறது. கர்நாடகத்தில் 1.4 சதவீதமும், தெலுங்கானாவில் 2.7 சதவீதமும், ஆந்திராவில் 3.5 சதவீதமும், குஜராத்தில் 0.6 சதவீதமும், மராட்டியத்தில் 1.5 சதவீதமும் இருக்கிறது. ஆக, வேலையில்லாதவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு இப்போது கணக்கிட்டால் இந்த சதவீதத்தைவிட நிச்சயம் உயர்ந்திருக்கும். இது மாநிலத்தின் வளர்ச்சிக்கு நிச்சயமாக நல்லதல்ல. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலைதேடி பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை தற்போது 80 லட்சத்து 676 ஆகும். வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை இப்படி உயர்ந்துகொண்டே போவதற்கு காரணம் மாநிலத்தில் தொழில்வளர்ச்சி மிகவும் குறைவாக இருப்பதுதான் என்பது நிபுணர்களின் கருத்தாகும். படித்து வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போவதைப் பார்க்கும்போது புதிய தொழில்கள் உருவாகவில்லை அல்லது ஏற்கனவே இருக்கும் தொழிற்சாலைகளில் விரிவாக்கப்பணிகள் நடைபெறவில்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

அரசாங்க பணிகளில், படித்துமுடித்த அனைவருக்கும் இடமளிப்பது என்பது நிச்சயம் முடியாதகாரியம் ஆகும். தனியார் தொடங்கும் புதிய தொழிற்சாலைகள் மூலமாகத்தான் வேலைவாய்ப்புகளை பெருக்கமுடியும். இந்தநிலையில், வேலைவாய்ப்புகளை பெருக்கும்வகையில் தனியார் தொழில் தொடங்க ஒரு முனைப்பான முயற்சிகளை அரசாங்கம் எடுக்கவேண்டும். உற்பத்தித்துறையில் ஒரு அசுர வளர்ச்சி இருந்தால்தான் இந்த வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடமுடியும். புதிய தொழில் தொடங்க வேண்டுமென்றால், ஒருபக்கம் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவேண்டும். மற்றொருபக்கம் தொழில்கள் தொடங்குவதற்கான சலுகைகளை அளிப்பதோடு, அதற்கான உரிமங்களை வழங்குவதில் ஒரு வெளிப்படைத்தன்மையும், வேகமான செயல்பாடுகளும் இருக்கவேண்டும். தமிழக அரசு இதில் தீவிர கவனம் செலுத்தவேண்டும் என்பது வல்லுனர்களின் கருத்தாக இருக்கிறது.

Next Story