சரக்கு சேவை வரியில் பெட்ரோல்–டீசல்


சரக்கு சேவை வரியில் பெட்ரோல்–டீசல்
x
தினத்தந்தி 18 Jan 2018 9:30 PM GMT (Updated: 18 Jan 2018 12:31 PM GMT)

அன்றாட வாழ்க்கையில் பெட்ரோல், டீசல் விலை என்பது மத்திய–மாநில அரசுகளின் செலவுகளில் மட்டுமல்லாமல், தனி மனிதர்களுடைய தினசரி செலவிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

பெட்ரோல், டீசல் விலை சமீபகாலங்களாக அதிகமாக உயர்ந்துகொண்டு இருப்பது எல்லோருக்கும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. நேற்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.74.13 ஆகவும், டீசல் விலை ரூ.65.55 ஆகவும் இருந்தன. தமிழ்நாட்டில் மற்ற இடங்களிலும் இந்த விலைக்கு சற்றே அதிகமாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

கடந்த 2014–ம் ஆண்டு ஆகஸ்டு 1–ந் தேதிக்குப்பிறகு நேற்றைய விலைதான் மிக அதிகமான விலையாகும். கச்சா எண்ணெய் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில்தான் தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. என்றாலும், நேற்றைய பிரென்ட் ரக கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு ரூ.69.48 அமெரிக்க டாலராகும். பொதுவாக பெட்ரோல், டீசல் அடிப்படை விலை எவ்வளவு இருக்கிறதோ, அதற்கு அதிகமாக மத்திய அரசாங்கத்தின் கலால்வரியும், மாநில அரசின் மதிப்புக்கூட்டு வரியும் சேர்த்துவரும் தொகைதான் விலையை இந்த அளவுக்கு உயர்த்திக்கொண்டு போகிறது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதும் சரி, மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோதும் சரி, கச்சா எண்ணெயின் விலை இதைவிட அதிகமாக இருந்த நேரத்தில்கூட, பெட்ரோல், டீசல் விலை இதைவிட குறைவாகத்தான் இருந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய அரசாங்கம் கலால்வரியை லிட்டருக்கு ரூ.2 குறைத்தது. சமீபத்தில் மத்திய பெட்ரோலிய மந்திரியிடம் இதற்கு மேலும் கலால்வரி குறைக்கப்படுமா? என்று கேட்டதற்கு, ‘முதலில் மாநில அரசுகள் மதிப்புக்கூட்டு வரியை குறைக்க வேண்டும்’ என்று கூறியிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு குஜராத் மாநிலத்தில் மதிப்புக் கூட்டுவரி 4 சதவீதம் குறைக்கப்பட்டதால், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.93 காசும், டீசல் விலை ரூ.2.72 காசும் குறைந்தது. மராட்டிய மாநிலத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1–ம், டீசலுக்கு ரூ.2–ம் குறைக்கின்ற அளவுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், தற்போது பெட்ரோலுக்கு 34 சதவீதமும், டீசலுக்கு 25 சதவீதமும் மதிப்புக் கூட்டுவரி விதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கிறது. தனிநபர் மாதாந்திர பட்ஜெட்டிலும் துண்டு விழுகிறது. மாநிலத்தில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படவேண்டுமென்றால், பணவீக்கம் கட்டுக்குள் இருக்கவேண்டும். அதற்கு விலைவாசி குறைய வேண்டும். விலைவாசி குறையவேண்டுமென்றால், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட வேண்டும். இதற்கு மத்திய அரசு கலால்வரியை குறைக்க வேண்டும். தமிழக அரசு மதிப்பு கூட்டுவரியை குறைக்க வேண்டும். இதை எல்லாவற்றையும்விட பெட்ரோல், டீசல் விலையை சரக்கு சேவைவரி வளையத்துக்குள் கொண்டுவந்தால் அதிகபட்சம் 28 சதவீதம்தான் வரிவிதிக்க முடியும். அந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறையும். விலைவாசியும் குறையும். மத்திய–மாநில அரசுகள் தங்கள் பட்ஜெட்டுகளிலோ அல்லது அதற்கு முன்போ இதுதொடர்பான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்பதுதான் மக்களின் பொதுவான கோரிக்கையாகும்.

Next Story