தலைவர்கள் மக்களால்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்


தலைவர்கள் மக்களால்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்
x
தினத்தந்தி 19 Jan 2018 9:30 PM GMT (Updated: 2018-01-20T00:03:19+05:30)

கிராம தலைவர்கள் என்றாலும் சரி, கிராம உறுப்பினர்கள் என்றாலும் சரி, பண்டையகாலத்தில் இருந்தே தமிழ்நாட்டில் மக்கள்தான் நேரடியாக தேர்ந்தெடுத்துக்கொண்டு வந்திருக்கிறார்கள்.

கிராம தலைவர்கள் என்றாலும் சரி, கிராம உறுப்பினர்கள் என்றாலும் சரி, பண்டையகாலத்தில் இருந்தே தமிழ்நாட்டில் மக்கள்தான் நேரடியாக தேர்ந்தெடுத்துக்கொண்டு வந்திருக்கிறார்கள். பிற்காலங்களில் அவரவருக்கு வரையறுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்களை மட்டும் மக்கள் நேரடியாக தேர்ந்தெடுப்பது என்றும், அவர்கள் தேர்ந்தெடுத்த வார்டு உறுப்பினர்கள், தலைவர்களை தேர்ந்தெடுப்பது என்றும் முறைவந்தது. சர்க்கசில் உயரே உள்ள ‘பார்’களில் ஆடும் வீரர் ஒரு ‘பாரை’ விட்டு மற்றொரு ‘பாருக்கு’ தாண்டுவதுபோல, தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளில் சில காலம் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முறையும், சிலகாலம் கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கும் முறையும் மாறி மாறி வந்தது.

கடந்த 2011-ம் ஆண்டு மாநகராட்சி, நகராட்சி தலைவர்களை மக்கள்தான் தேர்ந்தெடுத்தார்கள். 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஜெயலலிதா அரசில் இந்த முறையை மாற்றி, கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கும்முறை தொடர்பாக சட்டம் நடைமுறைக்கு வந்தது. இப்போது கடந்த 11-ந்தேதி தமிழக சட்டசபையில் தமிழக அரசு, மாநகராட்சி, நகராட்சி தலைவர்களை 2016-ம் ஆண்டு சட்டப்படி கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்காமல், மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறையை அமலுக்கு கொண்டு வர ஒரு மசோதாவை தாக்கல் செய்து அதுவும் நிறைவேற்றப்பட்டுவிட்டது. நிச்சயமாக இந்தமுறை வரவேற்கத்தகுந்தது. கவுன்சிலர்கள் மட்டும் மாநகராட்சி, நகராட்சி தலைவர்களை தேர்ந்தெடுத்தால் இப்போது தேர்தலில் பணம் விளையாடுவது போல, கவுன்சிலர்களை விலைகொடுத்து வாங்கும் வழக்கமும் வரவாய்ப்பு இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டைக்கு அருகில் உள்ள ஒரு ஊரில் மொத்தம் 15 உறுப்பினர்கள் கொண்ட பேரூராட்சியில், ஒரு கட்சியைச் சேர்ந்த ஒருவர் மட்டும் வெற்றி பெற்றார். அவர் மீதமுள்ள வார்டு உறுப்பினர்களில் 7 பேரை விலைக்கு வாங்கி இவரையும் சேர்த்து 8 பேர் தலைவர் தேர்தலில் ஓட்டு போட்டதால், மக்கள் எதிர்ப்புக்கும் மீறி அவரே 5 ஆண்டுகள் தலைவராக இருந்தார். மக்கள் வார்டு உறுப்பினர்களாக சிலரை விரும்புவார்கள். ஆனால், தலைவராக வேறொருவரை விரும்புவார்கள்.

இதுமட்டுமல்லாமல், வார்டு உறுப்பினர்களே தேர்ந்தெடுப்பார்கள் என்றால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர் தன்னை தேர்ந்தெடுத்த வார்டு மக்களுக்கு மட்டும் எல்லாத்திட்டங்களையும் கொண்டு வருவார். மேலும், அவருக்கு ஓட்டு போடாத கவுன்சிலரின் வார்டுகள் புறக்கணிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. மக்கள் நேரடியாக தேர்ந்தெடுத்தால் இந்த தலைவர்கள் ஒட்டுமொத்த மக்களுக்கும் பதில் சொல்ல வேண்டிய கடமைக்கு உள்ளாவார்கள். அவர்கள் கவனமெல்லாம் ஒட்டுமொத்த மக்கள் மீது இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதுமட்டுமல்லாமல், தலைவருக்கு பிடிக்காத கவுன்சிலர்கள் பாதிக்குமேல் ஒன்றாக இணைந்து தலைவருக்கு எதிரானால் அவருடைய பதவியை காவு வாங்கிவிட முடியும். தமிழ்நாட்டில் தற்போது 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள், 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகள் இருக்கின்றன. இவற்றின் உறுப்பினர்கள் பதவிகளை மக்கள் நேரடியாக ஓட்டுபோட்டு தேர்ந்தெடுக்கிறார்கள். அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் தலைவர்களை மாநகராட்சி, நகராட்சி தலைவர்களைப் போல, மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதுதான் பொதுவான கோரிக்கையாக இருக்கிறது.

Next Story