லஞ்சம் வாங்க மாட்டோம்


லஞ்சம் வாங்க மாட்டோம்
x
தினத்தந்தி 21 Jan 2018 9:30 PM GMT (Updated: 22 Jan 2018 8:29 AM GMT)

மத்திய அரசாங்கத்தின் பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. நாட்டில் உள்ள 5,004 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் இந்த மாதம் 31–ந் தேதிக்குள் தங்கள் சொத்துக்கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

த்திய அரசாங்கத்தின் பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. நாட்டில் உள்ள 5,004 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் இந்த மாதம் 31–ந் தேதிக்குள் தங்கள் சொத்துக்கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். அப்படி அவர்கள் தாக்கல் செய்யாவிட்டால், அவர்களுடைய பதவி உயர்வின்போதும், வெளிநாட்டு பணிக்காக அனுப்பப்படும்போதும் லஞ்ச ஒழிப்புத்துறை கொடுக்க வேண்டிய ஒப்புதல் வழங்கப்படமாட்டாது. இதுதொடர்பாக அந்தத்துறை மத்திய அரசாங்கத்தில் உள்ள அனைத்து துறைகளுக்கும், மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், நிர்வாகத்தில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களிடம் உள்ள அசையா சொத்துகள் பற்றிய விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். ஏற்கனவே 2011–ம் ஆண்டே 1–1–2018–ல் அதிகாரிகள் தங்களுடைய அசையா சொத்துகள் பற்றிய விவரங்களை தெரிவிக்காவிட்டால் அவர்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை ஒப்புதல் கிடையாது. அவர்கள் பதவி உயர்வுக்காக மத்திய அரசாங்கத்தில் உள்ள முதல்நிலை பணிகளுக்கான பட்டியலில் சேர்த்துக்கொள்ளமாட்டார்கள் என்று ஒரு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு தமிழ்நாட்டில் பணிபுரியும் 376 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும் பொருந்தும். நிச்சயமாக இதுபோன்ற உத்தரவுகள் வரவேற்கத்தக்கவையாகும். ஏனெனில், ஊழல் என்பது ஒரு புற்றுநோய் போன்றது. சமுதாயத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் ஊழல் புறையோடி போயிருப்பதால்தான் பல முன்னேற்றங்கள் தடைபட்டுள்ளன. திறமைகள் மங்கிப்போய் விடுகின்றன. ஊழல் ஒழிக்கப்பட்டு, வெளிப்படையான நிர்வாகம் இருக்கவேண்டுமென்றால் நிச்சயமாக அதில் அதிகாரிகள், அரசு ஊழியர்களின் பங்கு இன்றியமையாதது.

அரசு ஊழியர்கள் கை சுத்தமாக இருந்தால், ஆட்சியில் உள்ளவர்களால் எந்த ஊழல் நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியாது. ஏனெனில், ஆட்சியில் உள்ளவர்கள் ஏதாவது ஊழல் செய்து முறைகேட்டில் ஈடுபடவேண்டுமென்றால், அதற்கான உத்தரவுகளை அரசு அதிகாரிகள்தான் பிறப்பிக்க வேண்டும். அரசு அதிகாரிகள் உத்தரவை பிறப்பித்தாலும், கீழ்மட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் அந்த முறைகேடுகளுக்கு ஏற்ற வகையில் கோப்புகளை தயார் செய்தால்தான் அதிகாரிகளும் உத்தரவு பிறப்பிக்க முடியும். ஆட்சியில் உள்ளவர்களும் ஊழல் செய்ய முடியும். அந்த வகையில், அரசு ஊழியர்கள் நேர்மையாக திறம்பட செயல்பட்டால் நிர்வாகம் செம்மைப்படும். நிர்வாகத்தில் தூய்மை ஏற்பட ஆட்சியில் உள்ளவர்களும், அதை தங்கள் முக்கிய குறிக்கோளாக ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆட்சியில் உள்ளவர்கள் ஊழல்செய்ய அதிகாரிகளும், அரசு ஊழியர்களும் துணைபோகக்கூடாது. அதுபோல, அதிகாரிகளும், அரசு ஊழியர்களும் ஊழல்செய்ய, ஆட்சியில் உள்ளவர்கள் உறுதுணையாக இருக்கக்கூடாது. இவையெல்லாம் நடக்கவேண்டுமென்றால், எல்லோருடைய மனப்பக்குவமும் மாற வேண்டும். ஊழலை கண்டுபிடிக்கும் ஊழல் கண்காணிப்புத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை மிகத்தீவிரமாக செயல்பட வேண்டும். தூய்மையான, வெளிப்படையான நிர்வாகம் இருந்தால் நிச்சயமாக அங்கு ஊழலுக்கு இடம் இருக்காது. நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் குறிப்பாக தமிழக அரசில் உள்ள ஊழியர்கள் அனைவரும் ஒரு உறுதிப்பாட்டை எடுத்துக்கொள்ள வேண்டும். நாங்களும் லஞ்சம் வாங்க மாட்டோம், லஞ்சம் தலையெடுக்கவும் விடவே மாட்டோம் என்ற உறுதியோடு செயல்பட்டால், ஒரு தூய்மையான, வேகமாக செயல்படும் அரசாக திகழ முடியும்.

Next Story