ரெயிலில் சுத்தமான படுக்கை விரிப்புகள்


ரெயிலில் சுத்தமான படுக்கை விரிப்புகள்
x
தினத்தந்தி 22 Jan 2018 9:30 PM GMT (Updated: 22 Jan 2018 12:17 PM GMT)

ஒருமுறை பயன்படுத்திவிட்டு கழித்துவிடும் படுக்கைவிரிப்புகளை உடனடியாக அனைத்து ரெயில்களிலும் வழங்க ரெயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்யவேண்டும்.

தொலைதூர பயணத்திற்கு மக்கள் ரெயில்களையே பெரிதும் விரும்புகிறார்கள். அதிலும் இரவு பயணம் என்றால் ரெயில் பயணம்தான் பாதுகாப்பானது. தூங்கும் வசதிகொண்ட ரெயில்பெட்டியில் முன்பதிவு செய்து பயணம்செய்தால் புறப்பட்டவுடன் சற்றுநேரத்தில் தூங்கிவிழித்தவுடன், காலையில் போய்ச்சேரவேண்டிய இடத்திற்கு சென்றுவிடமுடியும் என்பது மக்களின் எண்ணமாகும். குளுமைவசதி செய்யப்பட்ட ரெயில் பெட்டிகளிலும், முதல்வகுப்பு ரெயில் பெட்டிகளிலும் பயணிகளுக்கு தலையணை, படுக்கைவிரிப்புகள், கம்பளி ஆகியவை வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு படுக்கைக்கும் ரெயில் நிர்வாகம் 55 ரூபாய் செலவழிக்கிறது. ஆனால் பயணிகளிடம் இருந்து 22 ரூபாய்தான் வசூலிக்கப்படுகிறது. இந்த படுக்கைவிரிப்புகள், தலையணைகளெல்லாம் அழுக்காக இருக்கின்றன. சரியாக சலவை செய்யப்படுவதில்லை. தலையணை உறைகள் கிழிந்திருக்கின்றன என்று பொதுவான புகார்கள் பயணிகளிடம் இருந்து வருகின்றன. பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை அதிகாரியின் அறிக்கையிலும் இது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. படுக்கைவிரிப்புகளும், கம்பளியும் அதற்காக வகுக்கப்பட்ட விதிகளின்படி, சலவை செய்யப்படாதநிலை பல ரெயில்களில் இருக்கிறது. குறிப்பாக கம்பளியை சலவை செய்து 6 முதல் 26 மாதங்கள் வரை ஆகியிருப்பது பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கம்பளியைத்தவிர மற்ற படுக்கைவிரிப்புகள் ஒவ்வொருமுறை பயன்படுத்தப்பட்டப்பிறகும் சலவை செய்யப்படவேண்டும்.

கம்பளியை பொறுத்தமட்டில், 2 மாதங்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக சலவை செய்யப்படவேண்டும் என்று விதி இருக்கிறது. ஆனால் ஒருவர் பயன்படுத்தியதை மற்றவர்களும் பயன்படுத்தும் நிலை இருக்கிறது. இந்தநிலையை தவிர்க்க, ரெயில்வே நிர்வாகம் ஒரு தலையணை, 2 படுக்கைவிரிப்புகள் 140 ரூபாய்க்கும், கம்பளி வேண்டுமென்றால் 110 ரூபாய்க்கு தனியாக விலைக்கு கொடுக்கும் முறையைக்கொண்டுவந்திருக்கிறது. ஆனால் இது எல்லா ரெயில்களிலும் கிடைப்பதில்லை. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், ஆன்லைனில் பதிவுசெய்தால் சென்னை சென்டிரல் ரெயில்நிலையத்தில் கிடைக்கிறது. எல்லா ரெயில்நிலையங்களிலும் கிடைத்தால் இந்தத்திட்டத்திற்கு முழு வெற்றிகிடைக்கும். இப்போது ரெயில்வே நிர்வாகம் ஒரு புதியமுறையை சோதனை முறையில் அறிமுகப்படுத்தி உள்ளது. ஒருமுறை பயன்படுத்தி கழித்துவிடும் சுற்றுச்சூழலுக்கு உகந்தபடுக்கைவிரிப்புகளை குளுமை வசதி செய்யப்பட்ட ரெயில்பெட்டிகளில் வழங்க திட்டமிட்டுள்ளது. வடமாநிலத்தில் புதிதாக தொடங்கப்பட்ட பந்த்ரா–நிஜாமுதின் ரெயிலில் ஒருமுறை பயன்படுத்திவிட்டு கழித்துக்கொள்ளும் வகையிலான தலையணை உறை, துண்டு மற்றும் கம்பளிக்கு பதிலாக, காட்டன் படுக்கைவிரிப்பு வழங்கப்படுகிறது. இது வெற்றிபெற்றால் இதேமுறையை அனைத்து ரெயில்களிலும் மட்கும் தன்மைகொண்ட, ரசாயனம் இல்லாத பருத்தியாலான படுக்கைவிரிப்பாகவும், தலையணை உறையாகவும் வழங்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. நிச்சயமாக இது நல்லமுறை. இது சுற்றுச்சூழலுக்கு உகந்தமுறை. ஒருமுறை பயன்படுத்திவிட்டு கழித்துவிடும் இத்தகைய படுக்கைவிரிப்புகளை உடனடியாக அனைத்து ரெயில்களிலும் வழங்க ரெயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்யவேண்டும். மொத்தத்தில், வசதியான பயணம், சுத்தமான படுக்கைவிரிப்புகள், தலையணை என்று வழங்கி, மகிழ்வான பயணமாக, சுகமான தூக்கம் கொண்ட பயணமாக மாற்றுவது மிகவும் வரவேற்புக்குரியது!, பாராட்டுக்குரியது!.

Next Story