தாங்க முடியாத பஸ் கட்டணம்


தாங்க முடியாத பஸ் கட்டணம்
x
தினத்தந்தி 23 Jan 2018 9:30 PM GMT (Updated: 23 Jan 2018 1:17 PM GMT)

தமிழ்நாட்டில் கடந்த 19–ந்தேதி இரவில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த உயர்வும் சாதாரணமாக உயர்த்தப்படவில்லை.

மிழ்நாட்டில் கடந்த 19–ந்தேதி இரவில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த உயர்வும் சாதாரணமாக உயர்த்தப்படவில்லை. அதிகபட்சமாக இருமடங்கு அளவுக்கு ஒரேநேரத்தில் கட்டணம் உயர்த்தப்பட்டது. நகரபஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.3–ல் இருந்து ரூ.6 ஆக அதிகரித்தது. மாநகர், புறநகர் கட்டணம் மட்டுமல்லாமல், அனைத்து பஸ்களிலும் கட்டணம் அபரிமிதமாக உயர்த்தப்பட்டது. 19–ந்தேதி இரவு உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு, 20–ந்தேதி அதிகாலை முதல் அமலுக்கு வந்ததால், இந்த விவரமே தெரியாமல் பழைய கட்டண தொகையை பையில் வைத்துக்கொண்டு ஏறிய பயணிகள் பஸ்சில் செல்ல முடியாமலும், புறப்பட்டு சிறிதுநேரம் கழித்து இடையில் இறக்கிவிடப்பட்ட நிலையில், பெரிதும் பாதிப்பு அடைந்தனர். கூடுதல் கட்டணத்தினால் ஒவ்வொருவருக்கும் மாதாந்திர பட்ஜெட்டில் துண்டுவிழுகிறது. சென்னை முகப்பேரில் இருந்து எழும்பூருக்கு தினமும் வந்து செல்கிறவர்கள்கூட மாதம் ரூ.600 கூடுதலாக செலவழிக்க வேண்டியதிருக்கிறது. இப்போதுள்ள புதிய கட்டண விகிதத்தை ரெயில்வே கட்டணத்துடன் ஒப்பிடும்போது நிறைய வித்தியாசம் இருக்கிறது. தென்மாவட்டமான திருநெல்வேலி மாவட்டத்தில், அம்பாசமுத்திரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு உயர்த்தப்பட்ட பஸ் கட்டணம் ரூ.48 ஆகும். ஆனால், பயணிகள் ரெயில் கட்டணம் ரூ.10 தான்.

இதுபோல, சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு அரசு டீலக்ஸ் பஸ் கட்டணம் ரூ.571. ஆனால், படுக்கை வசதி ரெயில் கட்டணம் ரூ.315 தான். மதுரைக்கு பஸ் கட்டணம் ரூ.515. ரெயில் கட்டணம் படுக்கைவசதியோடு ரூ.315 தான். கன்னியாகுமரிக்கு பஸ் கட்டணம் ரூ.778. ரெயில் கட்டணம் ரூ.415 தான். இதனால், மக்கள் பஸ்சில் செல்லவிரும்பாததால், ரெயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. சென்னையில் மின்சார ரெயிலில் செல்வதற்காக ரெயில் நிலையங்களில் திருவிழா கூட்டம்போல மக்கள் நிற்கிறார்கள். தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியதற்கான காரணத்தை சொல்லும்போது, 18–11–2011 அன்று பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டப்பிறகு, தமிழ்நாட்டில் பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் அடிக்கடி பஸ் கட்டணத்தை உயர்த்தியது. ஆனால், தமிழ்நாட்டில் அப்படி உயர்த்தவில்லை என்று கூறியுள்ளது. இது நிச்சயமாக ஏற்புடையதல்ல. அவ்வப்போது புதிய பஸ்கள் விலை உயர்வு, உதிரிபாகங்கள் விலை உயர்வு, பராமரிப்பு செலவு அதிகரிப்பு, பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு போன்ற செலவு அதிகமாகும்போது, அதை ஈடுகட்ட கொஞ்சம் கொஞ்சமாக பஸ் கட்டணத்தை ஏற்றியிருந்தால், இவ்வளவு பெரிய சுமையை ஒரேநேரத்தில் சுமத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.

இவ்வளவு கட்டணத்தை கொடுத்து பஸ்சில் ஏறும்போது, அதற்கு ஏற்றவகையில் நமது பஸ்கள் இல்லை. தமிழக போக்குவரத்துக்கழக 22 ஆயிரம் பஸ்களில், 15 ஆயிரம் பஸ்கள் வாங்கி 6½ ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது என்று போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டேவிதார் கூறியிருக்கிறார். தினமும் 2 கோடியே 2 லட்சம் மக்கள் பயணம் செய்யும்நிலையில், அந்த எண்ணிக்கை குறையாமல் தொடர்ந்து பயணம் செய்யவேண்டும் என்றால் நேரம் தவறாமை, கூடுதல் வசதிகளுடன் பஸ்களை இயக்கவேண்டும்.

Next Story