விவசாய வருமானம் குறையும் அபாயம்


விவசாய வருமானம் குறையும் அபாயம்
x
தினத்தந்தி 30 Jan 2018 9:30 PM GMT (Updated: 2018-01-30T23:34:12+05:30)

பாராளுமன்றத்தில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், பொருளாதார ஆய்வறிக்கை நேற்று முன்தினமே தாக்கல் செய்யப்பட்டுவிட்டது.

பாராளுமன்றத்தில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், பொருளாதார ஆய்வறிக்கை நேற்று முன்தினமே தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் தயாரித்த இந்த ஆய்வறிக்கை ஒருபக்கம் மிகுந்த நம்பிக்கை ஊட்டுவதாகவும், மற்றொருபக்கம் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டிய பாதையையும் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த ஆண்டு ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 6.75 சதவீதமாகவும், வருகிற நிதிஆண்டில் 7 முதல் 7.5 சதவீதமாகவும் இருக்கும் என்று கணித்துள்ளது. பெட்ரோல், டீசல் தயாரிக்க பயன்படும் கச்சா எண்ணெய் விலை வருகிற நிதிஆண்டில் 10 முதல் 15 சதவீதம்வரை உயரும் அபாயம் இருக்கிறது. இதனால் பொருளாதார வளர்ச்சியிலும், பணவீக்கத்திலும் தாக்கம் ஏற்படலாம் என்று எச்சரித்துள்ளது. இந்த ஆண்டை பொறுத்தமட்டில், வேலைவாய்ப்பு, கல்வி, விவசாயம் ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

இந்தியாவில் 49 சதவீத தொழிலாளர்கள் விவசாயத்தையே நம்பியிருக்கிறார்கள். நாட்டின் பொருளாதாரத்தில் 16 சதவீதம் விவசாயத்தின் பங்கில்தான் இருக்கிறது. ஆனால், இத்தகைய விவசாயத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக விவசாயிகள் வருமானம் நீர்ப்பாசன வசதியில்லாத பகுதிகளில் சராசரியாக 15 முதல் 18 சதவீதமும், மேலும் உயர்ந்து 20 முதல் 25 சதவீதமாகவும் குறையும் என்று கூறியிருப்பது கவலை அளிக்கிறது. கடந்த 4 ஆண்டுகளாக விவசாய பொருளாதாரத்திலோ, விவசாய வருமானத்திலோ எந்தவித மாற்றமும் இல்லை என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், 2 ஆண்டுகள் பருவமழை தவறியதுதான் இதற்கு காரணம். இதுமட்டுமல்லாமல், சரக்கு சேவைவரி, உயர்ந்து கொண்டிருக்கும் வட்டிவிகிதம், உணவு பொருட்களின் விலை குறைவு ஆகியவையும் விவசாய வருமானத்தில் பாதிப்பு ஏற்படுத்துகிறது என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்கு ஆக்கப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி உறுதி அளித்திருக்கும் நிலையில், விவசாய வருமானம் குறையும் என்ற கணிப்பு அதிர்ச்சியளித்துள்ளது. மின்சாரம், உரம் போன்றவற்றுக்கு மானியங்கள் கொடுப்பதற்கு பதிலாக, விவசாயிகளின் நேரடி வருமானத்தை உயர்த்த ஏற்பாடு செய்யும் வகையில் திட்டங்களை வகுத்தால் அவர்களது வருமானம் பெருகும் என்று ஆய்வறிக்கை கூறுகிறது. நல்ல விவசாய மேலாண்மையையும், நல்ல நீர்ப்பாசன திட்டங்களையும், சாகுபடி திட்டங்களையும் வகுத்தாலே போதும். இப்போது தக்காளி ஒரு கிலோ ரூ.8-க்கு விற்கப்படுகிறது. தக்காளி ரூ.8-க்கு விற்றால் பயிரிட்ட விவசாயிகளுக்கு எப்படி லாபம் கிடைக்கும்?. ஒரே நேரத்தில் ஒரே பயிரை எல்லோரும் பயிரிடுவதை தவிர்த்தால் இந்த நிலை வராது. விவசாய வருமானம் பெருக வேண்டும் என்றால், “விளைபொருட்களுக்கு உரியவிலை, தரமான விதைகள், மலிவான இடுபொருட்கள், நீர்நிலைகளை மேம்படுத்த, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த தீவிரமான சிறப்புத் திட்டங்கள், உற்பத்தியோடு இணைந்த மானியம், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க தனிக்கொள்கை, விவசாயத்துக்கு தாராள கடன்உதவி, அழுகும் பொருட்களுக்கு உத்தரவாதவிலை, குளிர்பதனவசதி, கூட்டுப்பண்ணை முயற்சி, 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை விவசாயத்துக்கு விரிவுபடுத்துவது, தரிசுநில மேம்பாடு, நீர் மேலாண்மை போன்ற பல திட்டங்களை மத்திய-மாநில அரசுகள் வகுத்து செயல்படுத்தப்பட வேண்டும்” என்பது விவசாய நிபுணர்களின் ஆலோசனையாகும்.

Next Story