திருப்தி அளிக்குமா பஸ் கட்டண குறைப்பு?


திருப்தி அளிக்குமா பஸ் கட்டண குறைப்பு?
x
தினத்தந்தி 31 Jan 2018 9:30 PM GMT (Updated: 31 Jan 2018 4:26 PM GMT)

அரசு போக்குவரத்துக்கழகங்கள் இந்த ஆண்டு தொடக்கம் முதலே ஊழியர்களின் வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றன.

ரசு போக்குவரத்துக்கழகங்கள் இந்த ஆண்டு தொடக்கம் முதலே ஊழியர்களின் வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள 8 அரசு போக்குவரத்துக்கழகங்களில் 21,928 பஸ்கள் இயக்கப்படுகின்றன. 6 ஆயிரம் வழித்தடங்களில் இயக்கப்படும் அரசு பஸ்களில், ஒரு நாளைக்கு 2 கோடியே 2 ஆயிரம் மக்கள் பயணம் செய்து வந்தனர். கடந்த மாதம் 20–ந் தேதி முதல் பஸ் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டவுடன் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அனைத்து அரசியல் கட்சிகளும் இதை எதிர்த்து அறிக்கைகள், ஆர்ப்பாட்டங்கள், மறியல்கள் என பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றன. இவை எல்லாவற்றையும்விட, ஏறத்தாழ 25 லட்சம் பயணிகள் அரசு போக்குவரத்துக்கழக பஸ்களை புறக்கணித்ததால், பயணிகள் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துவிட்டன. பல வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ்களில் ஒரு சில பயணிகளே பயணம் மேற்கொண்டனர். பெரும்பாலான பஸ்கள் காலியாகவே செல்லும்நிலை இருந்தது.

ஒருபுறம் மக்களுடைய எதிர்ப்பு, மற்றொரு புறம் பயணிகள் எண்ணிக்கை குறைவு என்ற சங்கடமான நிலையில், வேறுவழியில்லாமல் அரசு போக்குவரத்துக்கழக பஸ்களில் தற்போது மிகக்குறைந்த அளவுக்கு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. மாநகர மற்றும் நகர பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5–லிருந்து ரூ.4 ஆக குறைக்கப்பட்டது. சாதாரண பஸ்களில் கட்டணம் ஒரு கி.மீட்டருக்கு 60 காசிலிருந்து 58 காசாகவும், எக்ஸ்பிரஸ் பஸ்களில் 80 காசிலிருந்து 75 காசாகவும், சொகுசு பஸ்களில் 90 காசிலிருந்து 85 காசாகவும், அல்ட்ரா டீலக்ஸ் என்று சொல்லப்படும் அதிநவீன சொகுசு பஸ்களில் ரூ.1.10 காசிலிருந்து ரூ.1 ஆகவும், ஏர் கண்டி‌ஷன் பஸ்களில் ரூ.1.40 காசிலிருந்து ரூ.1.30 காசாகவும் கட்டணம் குறைக்கப்பட்டது. ஆனால், இந்தக் கட்டணக்குறைப்பு பொதுமக்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. பாலைவனத்தில் ஒட்டகங்கள் மீது நிறைய சுமையை ஏற்றும்போது அது எழுந்து நடக்க மறுக்குமாம். பெயரளவுக்கு அந்த ஒட்டகங்கள் பார்க்கும் வகையில், முதலிலேயே கூடுதலாக ஏற்றப்பட்ட சரக்குகளிலிருந்து ஒரு சிறிய பையை கீழே இறக்கினால் அந்த ஒட்டகம் மனநிறைவடைந்து, பாரம் குறைந்துவிட்டதாக கருதி பயணத்தை தொடங்குமாம். அதுபோலத்தான், இந்த பஸ் கட்டண குறைப்பும் அமைந்திருக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

குறைந்த அளவு பஸ் கட்டண குறைப்பு என்பது மக்களுக்கு மனநிறைவை தராது. அவர்களை திருப்திபடுத்தாது. ‘‘பஸ் கட்டண குறைப்பு என்பது வெறும் கண்துடைப்பு நாடகம்’’ என்றுதான் அரசியல் கட்சிகள் மற்றும் பயணிகள் கருதுகின்றனர். எனவே, அரசு இன்னும் பஸ் கட்டணத்தை குறைக்க முடியுமா? என்று ஒரு பக்கம் சிந்தித்து பார்க்கவேண்டும். மேலும், இந்த கட்டணக்குறைப்பு குறுகிய கால தீர்வுதான். நீண்டகால தீர்வாக நிர்வாக, இயக்க செலவுகளை குறைக்க முடியுமா?, பஸ்களில் தனியார் பஸ்களுக்கு இணையாக வசதிகளை பெருக்க முடியுமா?, காலாவதியான 15 ஆயிரம் பஸ்களுக்கு பதிலாக புதிய பஸ்களை விடமுடியுமா? என்றும் பார்க்க வேண்டும். தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கும் நிலையை மாற்றி, லாபத்தில் இயங்க முயற்சிகளை தீவிரப்படுத்தவேண்டும்.

Next Story