ஊழலுக்கு எதிராக போர் முரசு


ஊழலுக்கு எதிராக போர் முரசு
x
தினத்தந்தி 4 Feb 2018 9:30 PM GMT (Updated: 4 Feb 2018 12:10 PM GMT)

உதவி பேராசிரியர் பணிக்காக ரூ.30 லட்சம் வாங்கியதாக கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது செய்யப்பட்டுள்ள செய்தி தமிழ்நாட்டையே உலுக்கிவிட்டது. ஊழல் உடனடியாக ஒழிக்கப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகி விட்டது.

ஊழல் என்பது சமுதாயத்தில் ஒரு புற்றுநோயை போன்றது. சமுதாயத்தில் புரையோடி சீர்கெடுத்துவிடும். நிர்வாகத்தையும் சீர்குலைத்துவிடும். இப்போது சமுதாயத்தின் முக்கிய 3 தூண்கள் ஊழலுக்கு எதிராக போர்முரசை ஒரேநேரத்தில் கொட்டிவிட்டது. கடந்தமாதம் 28–ந்தேதி தேசிய மாணவர் படையினரிடம் டெல்லியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திரமோடி, ‘முதல்–அமைச்சர்களாக பணியாற்றிய சிலர் ஊழல்காரணமாக சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள். ஊழலுக்கு எதிரான மத்திய அரசாங்கத்தின் போர் இனி தீவிரமாகும். பணக்காரர்களையும், அதிகாரமிக்கவர்களையும் தொடமுடியாது என்று பொதுவாக மக்கள் நினைக்கிறார்கள். இப்போது அப்படியல்ல. அவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். ஊழல் என்ற கரையான் அரிப்பிலிருந்து விடுபடுவதன்மூலம் ஏழைகள் பெரிதும் பயனடைவார்கள். ஊழலுக்கு எதிரான போர் நிற்காது. இந்திய இளைஞர்களின் எதிர்காலத்திற்கான போர் இது’ என்று முழங்கினார்.

அடுத்த இரண்டு நாட்களில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பட்டதாரிகள் உறுதிமொழியை வாசித்தவுடன், கவர்னர் ஒரு ஆச்சரியத்தை அளித்தார். பட்டமளிப்பு விழாவில் கவர்னர் பேசுவது வழக்கத்தில் இல்லாதது. ஆனால், ஒரு செய்தியை கூற விரும்புகிறேன். இந்தசெய்தி இங்குள்ள பத்திரிகையாளர்கள் உள்பட எல்லோருக்கும் கூறுகிறேன். எல்லோருக்கும் தெரிந்த ஜூனியர் மார்டின் லூதர்கிங் ஒரு நன்மொழியை கூறுகிறார். ‘‘உண்மையைப் பார்த்துவிட்டு, அதை பேசத்தயங்கினால் அந்த நாள்தான் நாம் சாகத்தொடங்கும் நாளாகும். எங்கேயாவது ஊழல் நடந்தால் அதை உடனே தட்டிக்கேட்கவேண்டும். அநீதியும், ஊழலும் சகித்துக்கொள்ளக்கூடாத ஒன்றாகும்’’ என்றார். அண்ணா பல்கலைக்கழகத்தில் பேசும்போதும் இந்த கருத்தை வலியுறுத்தினார்.

பிரதமர் பறைசாற்றியதும், கவர்னர் எடுத்துச்சொன்னதும் ஒரேதொனியில் இருக்கிறதே! என்று எல்லோரும் ஆச்சரியப்பட்ட நிலையில், ‘சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர்.தாரணி ஆகியோர் யாரும் தாக்கல்செய்யாமல் தாங்களாகவே ஊழலுக்கு எதிரான ஒருவழக்கை தொடர்ந்தனர். அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்து அரசு பணியில் சேருபவர்கள் பொதுமக்களுக்கு என்னசேவை ஆற்றமுடியும்?. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் மீதான ஊழல் புகார்குறித்து அதிர்ச்சியடைந்தோம். அரசியல்வாதிகள் 5 ஆண்டுகள்தான் பதவியில் இருப்பார்கள், பிறகு போய்விடுவார்கள். ஆனால், அதிகாரிகள் அரசியல்வாதிகள் போல அல்ல. ஊழல் அதிகாரிகள் எல்லாவற்றையும் பாழ்படுத்திவிடுகிறார்கள் என்று கூறிய நீதிபதிகள், இதுதொடர்பாக அரசு ஒரு விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். ராணுவத்தில் ராணுவ அதிகாரிகள் ‘பயர்’ என்றவுடன் படைவீரர்கள் சரமாரியாக தாக்குதலை தொடங்குவார்கள். அதுபோல பிரதமரும், கவர்னரும், நீதிபதிகளும் ஊழலுக்கு எதிரான முரசைக்கொட்டிவிட்டார்கள். இனி அரசும், அதிகாரிகளும் ஊழலை அடியோடு ஒழிக்கும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். பொதுமக்களும் ஊழலைப்பார்த்து கொண்டிருக்கும் பார்வையாளர்களாக மட்டும் நிற்கக்கூடாது. அவர்களும், தாங்களும் சமுதாயத்தில் பாதிக்கப்பட்ட ஒருவராக நினைத்து அதை எதிர்த்து போராடவேண்டும். சம்பந்தப்பட்ட துறையினரிடம் புகார் செய்ய வேண்டும்.

Next Story