முதல்-அமைச்சர் காப்பீட்டுத் திட்டம் இணைக்கப்படுமா?


முதல்-அமைச்சர் காப்பீட்டுத் திட்டம் இணைக்கப்படுமா?
x
தினத்தந்தி 5 Feb 2018 11:30 PM GMT (Updated: 2018-02-06T00:08:40+05:30)

கடந்த 1-ந்தேதி மத்திய நிதிமந்திரி அருண்ஜெட்லி பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில் விவசாயத்திற்கும், மருத்துவத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மருத்துவத்தில் நிதிமந்திரி வெளியிட்ட பெரிய அறிவிப்பு ‘தேசிய மருத்துவ காப்பீட்டுத்திட்டம்’ தான். இந்த திட்டத்தின் கீழ் 10 கோடி நலிந்த குடும்பத்தைச் சேர்ந்த 50 கோடி பேர் பயனாளிகளாக இருப்பார்கள். அவர்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் அளவில் மருத்துவ காப்பீடு கிடைக்கும். இந்தத்தொகை மூலம் நலிந்த பிரிவிலுள்ள ஏழைகள் பல்வேறு உயர்தர சிகிச்சைகளையும், ஆபரேஷன்களையும் அரசு மருத்துவமனைகளிலும், பட்டியலில் இணைக்கப்படும் தனியார் மருத்துவமனைகளிலும் பெற்றுக்கொள்ள முடியும். இது இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 40 சதவீத மக்களுக்கு உயர்ரக சிகிச்சைப் பெற வழிவகுக்கும் திட்டமாகும். அரசாங்கத்தின் நிதிஉதவியோடு செயல்படுத்தப்படும் மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களை கணக்கில் எடுத்துக்கொண்டால், உலகிலேயே இதுதான் மிகப்பெரிய திட்டமாகும்.

இந்தத் திட்டத்திற்காக தனியாக நிதி ஒதுக்கப்படவில்லையே என்ற ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால், வருமானவரியில் மருத்துவ மேல்வரியாக ஒரு சதவீதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதன்மூலம் ரூ.11 ஆயிரம் கோடி கிடைக்கும். ஆக, இந்த புதியதிட்டத்திற்கான பிரிமியம் தொகைக்கு மக்கள் அளிக்கும் வருமானவரியில் உள்ள மேல்வரியின் மூலமே பெரும்பகுதி கிடைத்துவிடும். மேலும் திட்டத்திற்கான செலவை மத்தியஅரசு 60 சதவீதமும், மாநிலஅரசு 40 சதவீதமும் பங்கிட்டுக்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்டு 15-ந்தேதி சுதந்திரதினத்தன்றோ அல்லது அக்டோபர் 2-ந்தேதி காந்திஜெயந்தி அன்றோ இந்தத்திட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் ஏற்கனவே ‘முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டுத்திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்டு குடும்ப வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு குறைவான, ஒரு கோடியே 47 லட்சம் குடும்பங்கள் இந்தத்திட்டத்தின் பலனை அடைய தகுதியுள்ளவர்களாக இருக்கிறார்கள்.

தமிழக அரசு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் வரை மருத்துவ காப்பீடு 1,027 வகையிலான நோய்களுக்கு சிகிச்சையளிக்கவும், 38 வகையிலான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளவும், 154 வகையிலான தொடர் சிகிச்சைகளைப்பெறவும் வழங்கப்படுகிறது. ஏறத்தாழ 6 லட்சம் பயனாளிகள் ஒவ்வொரு ஆண்டும் காப்பீட்டுத்திட்டத்தின் பலனை பெற்று பயனடைந்துள்ளனர். அரசுக்கு ஆண்டுக்கு ரூ.936 கோடி செலவாகிக் கொண்டிருக்கிறது. இப்போது மத்திய அரசாங்கம் அறிவித்த தேசிய மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தில் இதைவிட கூடுதல் பயனாளிகளுக்கு பலன் கிடைக்கும். எனவே, தமிழக அரசு நிறைவேற்றும் ‘முதல்-அமைச்சர் காப்பீட்டுத்திட்டத்தை, இந்த புதிய திட்டத்தோடு இணைத்து, மத்திய அரசாங்கம் ஒவ்வொரு மருத்துவ காப்பீட்டுக்கும் தரும் 60 சதவீதம் தொகையைப்பெற தமிழக அரசு முயற்சிக்க வேண்டும். மத்திய அரசாங்கமும் உதவிக்கரம் நீட்டவேண்டும். இப்போது இதுவரை தமிழக அரசே செலவழித்துக் கொண்டிருந்த இந்தத்திட்டத்தில் 60 சதவீத தொகை மத்திய அரசாங்கத்திடமிருந்து கிடைக்கப்பெறும் சூழ்நிலையில், தமிழக அரசு செலவழித்துக் கொண்டிருக்கும் ரூ.936 கோடியில் மீதமாகும் தொகையை, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுகா மருத்துவமனைகளை, சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருக்கும் வசதிகளுக்கு நிகராக தரம் உயர்த்துவதற்கான திட்டங்களுக்காக தமிழக அரசு செலவழிக்க வேண்டும்.

Next Story