தயக்கம் காட்டும் ஜப்பான்


தயக்கம் காட்டும் ஜப்பான்
x
தினத்தந்தி 6 Feb 2018 9:30 PM GMT (Updated: 2018-02-06T18:02:59+05:30)

இந்தியாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே ஆழ்ந்த நல்லுறவு நிலவிவருகிறது. ஜப்பான் நாட்டு தொழில்நிறுவனங்களும், வர்த்தக நிறுவனங்களும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தங்களின் தடம்பதித்து இருக்கின்றன.

ந்தியாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே ஆழ்ந்த நல்லுறவு நிலவிவருகிறது. ஜப்பான் நாட்டு தொழில்நிறுவனங்களும், வர்த்தக நிறுவனங்களும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தங்களின் தடம்பதித்து இருக்கின்றன. ஜப்பான் கம்பெனிகளை எடுத்துக்கொண்டால், அரியானாவில் 305, மராட்டியத்தில் 203, தமிழ்நாட்டில் 192, கர்நாடகத்தில் 190 என பல்வேறு நிறுவனங்களை தொடங்கியிருக்கிறது. ஜப்பானிய வர்த்தக நிறுவனங்களை எடுத்துக்கொண்டால், மராட்டியத்திற்கு அடுத்தாற்போல தமிழ்நாட்டில்தான் 577 வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னை மெட்ரோ ரெயில் உள்பட பல தமிழக திட்டங்களுக்கு ஜப்பான் நாட்டு நிறுவனங்கள் நிதியுதவி அளித்துள்ளன.

தமிழகத்தின் தொழில்வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் ஜப்பான் நாட்டு முதலீடுகள் இன்னும் அதிகமாக ஈர்க்கப்படவேண்டிய நிலையில், ஜப்பான் இப்போது சற்று தயக்கம் காட்டுவது மிகவும் கவலையளிக்கத்தக்க ஒன்றாகும். ஜப்பான் நாட்டு தூதர் செய்ஜி பாபா சமீபத்தில் இந்த தயக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் சில கருத்துகளை வெளியிட்டுள்ளார். ‘‘தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலையைக் கண்டு, ஜப்பான் நாட்டு தொழிலதிபர்கள் கவலையடைந்துள்ளனர். மிகவிரைவில் இத்தகைய அரசியல் சூழ்நிலைகள் ஸ்திரமான நிலையை அடையவேண்டும் என்று விரும்புகிறார்கள். குஜராத், அரியானா போன்ற சில மாநிலங்கள், ஜப்பான் நாட்டு முதலீட்டாளர்கள் மட்டுமல்லாமல், பல வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க சலுகைகளை வாரிவழங்குகிறது. நல்ல உள்கட்டமைப்பு வசதி, திறமைவாய்ந்த பணியாளர்கள், துறைமுகவசதி, விமான வசதி, நல்ல தகவல்தொடர்பு வசதிகள் தமிழ்நாட்டில்தான் இருக்கின்றன. ஆனால், அண்டைமாநிலங்கள் சில சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கி அதிகமான சலுகைகளை வழங்குகிறது’’ என்று கூறியுள்ளார்.

‘‘வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க மற்ற மாநிலங்கள் தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில், தமிழ்நாடு நிலைமையை புரிந்துகொள்ளவேண்டும்’’ என்று அவர் கூறியுள்ளார். என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால், மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, புதிய கொள்கையையோ, வேறுசில பொருளாதார கொள்கையையோ அறிவிப்பதற்கு தமிழக அரசு அதிககாலம் எடுத்துக்கொள்கிறது’’ என்றும் கூறியிருக்கிறார். ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பதைப்போல, ஜப்பான் நாட்டு தூதர் வெளியிட்டுள்ள இந்த கருத்துகளை மெய்ப்பிக்கும் வகையில், தமிழ்நாட்டில் தொடங்கப்படவேண்டிய கியா மோட்டார்ஸ், அப்பல்லோ டயர்ஸ் போன்ற நிறுவனங்கள் ஆந்திராவுக்கு சென்றுவிட்டன. ஆந்திர மாநில முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு, தமிழகத்தின் எல்லையில் உள்ள ஆந்திரப்பகுதிகளில் நிறைய தொழிற்சாலைகளை தொடங்கி, தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளையும் பயன்படுத்திக்கொள்கிறார். குஜராத்தில் நரேந்திரமோடி முதல்–மந்திரியாக இருந்தபோதும் இதுபோல அடிக்கடி தொழில் அதிபர்களை சந்தித்ததால்தான் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. தமிழக முதல்–அமைச்சரும் இப்போது தொழில் அதிபர்களை சந்திக்க தொடங்கிவிட்டார். உடனடியாக ஜப்பான் நாட்டு தூதர் மூலம் ஜப்பானிய தொழில் அதிபர்களை சந்தித்து பேசி புதிய தொழில்களை ஈர்க்கவேண்டும். இப்படி தமிழ்நாட்டிலுள்ள அனைத்து வசதிகளும் அண்டை மாநிலத்துக்கு செல்லாமல், தமிழ்நாட்டிலேயே அனைத்து புதிய தொழில்களை தொடங்கும் வகையிலும், இங்கிருந்து எந்தத்தொழிலும் ஆந்திராவுக்கு போகாத வகையிலும், தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Next Story