பெண் குழந்தைகள் கருக்கலைப்பு


பெண் குழந்தைகள் கருக்கலைப்பு
x
தினத்தந்தி 8 Feb 2018 12:19 AM GMT (Updated: 2018-02-08T05:49:06+05:30)

மாதத்திற்கு ஒருமுறை ‘மன் கி பாத்’ அதாவது, ‘மனதின் குரல்’ என்ற பெயரில் பிரதமர் நரேந்திரமோடி அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

மாதத்திற்கு ஒருமுறை ‘மன் கி பாத்’ அதாவது, ‘மனதின் குரல்’ என்ற பெயரில் பிரதமர் நரேந்திரமோடி அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். ‘‘கடந்த 28–1–2018 அன்று ‘மனதின் குரல்’ உரையில், தொடக்கத்தில் இருந்தே பெண் குழந்தைகள் காப்பாற்றப்பட வேண்டும் என்பது உள்பட பெண்ணின் பெருமைப்பற்றி உரையாற்றி இருக்கிறார். நாம் இன்று ‘‘பெண் குழந்தைகளைக் காப்போம். பெண் குழந்தைகளுக்கு கல்வியளிப்போம்’’ என்று பேசுகிறோம். ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக நமது சாத்திரங்கள் கந்தபுராணத்தில், ‘‘ஒரு மகள், பத்து மகன்களுக்குச் சமமானவள். பத்து மகன்கள் வாயிலாக எத்தனை புண்ணியம் கிடைக்குமோ, அவையனைத்தும் ஒரு மகள் அளிக்கும் புண்ணியத்துக்கு சமமாகும் என்று கூறியுள்ளது. இதனால்தானே நமது சமுதாயத்தில் பெண்களுக்கு ‘சக்தி’ என்ற அந்தஸ்தைக் கொடுத்திருக்கிறார்கள். பெண்–சக்தி என்பது தேசத்தின் மாண்பிற்குப் பெருமை சேர்த்து வந்திருக்கிறது’’ என்று பேசியிருக்கிறார்.

தமிழ்நாட்டிலும் இப்போது ஏழை பெண்களுக்கு உதவ மானிய விலையில் ‘ஸ்கூட்டி’ வழங்குவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில், திருவண்ணாமலையில் ஒரு பெண் டாக்டர் நடத்தும் மருத்துவமனையில் அனுமதியில்லாமல் ஏராளமான பெண் கருக்கலைப்புகள் நடந்துள்ளதாக கூறப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. அதுவும் கடந்த சில மாதங்களில் மட்டும் நூற்றுக்கணக்கான கருக்கலைப்புகள் என்றால், அதற்கு முன்பு எவ்வளவு கருக்கலைப்புகள் நடந்திருக்குமோ? என்பது வேதனையளிக்கும் வகையில் இருக்கிறது. இவ்வளவுக்கும் அந்த பெண் டாக்டர் போலி டாக்டர் அல்ல, சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்து, கடந்த சில ஆண்டுகளாக இந்த மருத்துவமனையையும், அதோடு இணைக்கப்பட்டுள்ள ‘ஸ்கேன்’ சென்டரையும் நடத்தி வந்திருக்கிறார். அவருக்கு, அங்குள்ள மேலும் பல ‘ஸ்கேன்’ சென்டர்களோடும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த அதிர்ச்சியூட்டும் கருக்கலைப்பை கண்டுபிடிக்க மத்திய அரசாங்கத்தில் இருந்து ஒரு மருத்துவ நிபுணர்குழு அனுப்பப்பட்டு இருந்தது. கருவில் இருக்கும் சிசு ஆணா?, பெண்ணா? என்று கண்டறிந்து தெரிவிக்கக்கூடாது என்று சட்டமே இருக்கிறது. ஆனால், அதையும்மீறி இதுபோன்ற சம்பவம் நடந்திருக்கிறது என்றால் ஆணா?, பெண்ணா? என்று சோதனை செய்து தெரிவிக்கும் ‘ஸ்கேன்’ சென்டர்கள் மீதும், இதுபோன்ற கருக்கலைப்பு செய்யும் டாக்டர்கள் மீதும் இன்னும் கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். இதுமட்டுமல்லாமல், இதுகுறித்த விழிப்புணர்வை மக்களுக்கு நன்றாக தெரிவிக்க வேண்டும்.

பெண் குழந்தை என்றால் போற்றுதலுக்குரியது, அரசு எவ்வளவோ உதவிகளை செய்கிறது. அப்படியே வேண்டாம் என்றால் கருக்கலைப்பு செய்ய வேண்டியதில்லை. ‘தொட்டில் குழந்தை’ திட்டத்தில் குழந்தைகளை ஒப்படைத்து விடலாம் என்பது குறித்த விழிப்புணர்வை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். 1992–ல் ‘தினத்தந்தி’–யில் வந்த ஒரு செய்தியைப்பார்த்து, ‘‘மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், அப்போது சமூக நலத்துறை அமைச்சராக இருந்த இந்திரகுமாரி அறிவித்த திட்டம்தான் இந்த தொட்டில் குழந்தை திட்டம்’’. எனவே, ‘தொட்டில் குழந்தை திட்டம்’ குறித்த விழிப்புணர்வு தற்போது தொய்வு அடைந்திருக்கும் நிலையைமாற்றி, இதுதொடர்பான பிரசாரங்களை அரசு தீவிரப்படுத்த வேண்டும்.

Next Story