பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தலா?


பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தலா?
x
தினத்தந்தி 8 Feb 2018 9:30 PM GMT (Updated: 2018-02-08T22:42:12+05:30)

கடந்த 1–ந்தேதி பாராளுமன்றத்தில் மத்திய அரசாங்க பட்ஜெட் நிதிமந்திரியால் தாக்கல் செய்யப்பட்டது. அதே நாளில் ராஜஸ்தான், மேற்கு வங்காளம் மாநிலத்தில் நடந்த இடைத்தேர்தல் முடிவுவந்தது.

டந்த 1–ந்தேதி பாராளுமன்றத்தில் மத்திய அரசாங்க பட்ஜெட் நிதிமந்திரியால் தாக்கல் செய்யப்பட்டது. அதே நாளில் ராஜஸ்தான், மேற்கு வங்காளம் மாநிலத்தில் நடந்த இடைத்தேர்தல் முடிவுவந்தது. எப்படி ஒரு பெரிய அலைக்கு மத்தியில் நீர்க்குமிழிகள் யாராலும் கவனிக்கப்படாதோ? அதுபோல, மத்திய அரசாங்க பட்ஜெட் பரபரப்பில் இந்த இருமாநில இடைத்தேர்தல் முடிவுகள் யாராலும் பெரிய அளவில் கவனிக்கப்படவில்லை. ராகுல்காந்தி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்றபிறகு காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளில் முன்னேற்றம் தெரிகிறது. கடந்த டிசம்பர் மாதம் 18–ந்தேதி குஜராத், இமாசலபிரதேச மாநில தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. குஜராத் மாநிலத்தில் ராகுல்காந்தி மிகத்தீவிரமான பிரசாரத்தை மேற்கொண்டார். இமாசலபிரதேசத்தில் காங்கிரசிடமிருந்து, பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றிக்கொண்டாலும், குஜராத் மாநிலத்தில் வெற்றிபெற முடியாத சூழ்நிலை இருந்தாலும், 2012–ம் ஆண்டு தேர்தலைவிட, அதிக இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. 2012–ம் ஆண்டு குஜராத் தேர்தலில் 115 இடங்களில் வெற்றிபெற்ற பா.ஜ.க. 99 இடங்களிலும், 61 இடங்களில் வெற்றிபெற்றிருந்த காங்கிரஸ் 77 இடங்களிலும் வெற்றிபெற்று, ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியது.

2014–ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க. 25–க்கு 25 இடங்களிலும் வெற்றிபெற்றது. இப்போது இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கின்ற நேரத்தில், இரண்டு பாராளுமன்ற தொகுதிகளிலும், ஒரு சட்டசபை தொகுதியிலும் இடைத்தேர்தல் நடந்தது. இந்த 3 தொகுதிகளிலும் ஏற்கனவே பா.ஜ.க. வெற்றிபெற்றிருந்த நிலையில், இந்த இடைத்தேர்தல் நடந்த 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுவிட்டது. காங்கிரஸ் கட்சி இந்த வெற்றியை பெரிய அளவில் ராகுல்காந்தி தலைமைக்கு கிடைத்த பரிசாக கருதுகிறது. இந்த இடைத்தேர்தல் முடிவுதான், வரப்போகும் சட்டசபை தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று பறைசாற்றுகிறது.

இந்த ஆண்டு கர்நாடகம், ராஜஸ்தான், சத்தீஸ்கார், மத்தியபிரதேசம், மேகாலயா, திரிபுரா, மிசோரம், நாகலாந்து ஆகிய 8 மாநிலங்களில் சட்டசபைதேர்தல் நடக்க இருக்கிறது. திரிபுராவில் வருகிற 18–ந் தேதியும், மேகாலயா, நாகலாந்து மாநிலங்களில் 27–ந்தேதியும் தேர்தல் நடக்க இருக்கிறது. ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கார் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியில் இருக்கிறது. இந்த 3 மாநிலங்களிலும் தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டால் அது பாராளுமன்ற தேர்தலில் பெரியவிளைவுகளை ஏற்படுத்தும் என்றநோக்கில், பாராளுமன்றதேர்தலை இந்த ஆண்டு இறுதியில் அதாவது, இந்த 3 மாநில சட்டசபை தேர்தல்கள் நடக்கும் சூழ்நிலையில் அதோடு சேர்த்து நடத்தலாமா? என்று மத்திய அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அரசியல்நோக்கர்கள் கருதுகிறார்கள். இதே சந்தேகம் காங்கிரஸ் கட்சிக்கும் மற்றும் பல எதிர்க்கட்சிகளுக்கும் ஏற்பட்டு, அவர்களும் முன்கூட்டியே தேர்தல் வர இருக்கிறது, தயாராகுங்கள் என்று கூறிவருகிறார்கள். மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு பல நன்மைகளும், 50 கோடி மக்களுக்கு மருத்துவக்காப்பீடும் வழங்கியுள்ளநிலையில், இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் வைத்தால், தனக்கு லாபம் என்று பா.ஜ.க. நினைப்பதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. எல்லாவற்றையும் கூட்டிக்கழித்து பார்த்தால், பாராளுமன்றத்துக்கு இந்த ஆண்டே தேர்தல் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Next Story