கவர்னர்தான் தூய்மைப்படுத்த வேண்டும்


கவர்னர்தான் தூய்மைப்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 11 Feb 2018 9:30 PM GMT (Updated: 2018-02-11T17:12:18+05:30)

1952–ம் ஆண்டு வெளிவந்த ‘பராசக்தி’ திரைப்படத்திற்கு கலைஞர் கருணாநிதி அனல் தெறிக்க எழுதிய வசனங்கள் இன்றும் உணர்ச்சிப்பிழம்பாக இருக்கின்றன.

1952–ம் ஆண்டு வெளிவந்த ‘பராசக்தி’ திரைப்படத்திற்கு கலைஞர் கருணாநிதி அனல் தெறிக்க எழுதிய வசனங்கள் இன்றும் உணர்ச்சிப்பிழம்பாக இருக்கின்றன. ‘‘கோவிலில் குழப்பம் விளைவித்தேன், கோவில் கூடாது என்பதற்காக அல்ல, கோவில் கொடியவர்களின் கூடாரமாய் ஆகிவிடக்கூடாது’’ என்பதற்காகத்தான் என்று எழுதியிருந்தார். நிச்சயமாக இது கல்விக்கோவில்களாம் பல்கலைக்கழகங்களுக்கு பெரிதும் பொருந்தும். பல்கலைக்கழகங்கள் கல்விக்கோவில்கள் என்றால், அதில் பணியாற்றும் துணைவேந்தர்கள், அதிகாரிகள், கல்வி கற்று கொடுக்கும் பேராசிரியர்கள் உள்பட அனைவருமே இறை பணியாளர்களுக்கு நிகரானவர்கள்தான். பழைய காலங்களில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தூய்மையின் சின்னங்களாக, ஞானப்பிழம்பாக, அறிவாற்றலின் சிகரமாக விளங்கினார்கள்.

அதனால்தான் ஏ.லட்சுமணசுவாமி முதலியார், சென்னை பல்கலைக்கழகத்தில் 1942–ம் ஆண்டு முதல் 1969–ம் ஆண்டு வரை 27 ஆண்டுகள் துணைவேந்தராக பணியாற்றி, ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு இணையாக ஒரு பெயரை மெட்ராஸ் யுனிவர்சிட்டி என்று அழைக்கப்படும் சென்னை பல்கலைக்கழகத்திற்கு அப்போது வாங்கிக்கொடுத்தார். அந்த நாளெல்லாம் கனவாகி போய்விட்ட நிலையில், இப்போது லஞ்சம்–ஊழல் குற்றச்சாட்டிலேயே பல்கலைக்கழக துணைவேந்தர்களும், பேராசிரியர்களும் கைது செய்யப்படுவது, அவர்கள்மீது வழக்கு தொடரப்படுவது வெட்கத்தால் தலைகுனிய வைக்கிறது. கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி ரூ.30 லட்சம் லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும், களவுமாக பிடிபட்டுள்ளார். துணைவேந்தருக்கு துணையாக இருந்ததாக அந்த பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்குனர் ஆர்.மதிவாணன், பேராசிரியர் என்.தர்மராஜ் ஆகியோர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த துணைவேந்தர் நியமனம் செய்த 62 பேர் குறித்தும் இப்போது தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது. இவருக்கு முன்பாக இருந்த பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதுபோல, பெரியார் பல்கலைக்கழக முன்னாள் அதிகாரிகள், திருவள்ளுவர் பல்கலைக்கழக அதிகாரிகள் மீதும் வழக்கு நிலுவையில் இருக்கிறது.

பல்கலைக்கழக வேந்தர் கவர்னர்தான். அந்த வகையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவியேற்றபிறகு, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கும், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கும் துணைவேந்தர்களை எந்தவித புகாருக்கும் இடமின்றி, திறமையை மட்டும் அளவுகோலாக கொண்டு நியமித்தார். தேர்வுக்குழு பரிந்துரை செய்த ஒவ்வொருவரிடமும் கவர்னர் நேர்முகத்தேர்வு நடத்தினார். அவருக்கு உறுதுணையாக நேர்மைக்கு எடுத்துக்காட்டான கவர்னரின் கூடுதல் செயலாளர் ராஜகோபால் இருந்தார். இப்போது அண்ணா பல்கலைக்கழக தேர்வுக்குழுவுக்கு சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி சிர்புர்கரை நியமித்துள்ளார். இந்த இரண்டு பல்கலைக்கழகங்களிலும் நேர்மையையும், தூய்மையையும் கொண்டு வந்த கவர்னர் மற்ற பல்கலைக்கழகங்களிலும் தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது. அந்த காலங்களில் தேடல் குழுவிடம் துணைவேந்தர் பதவிக்காக யாரும் விண்ணப்பிப்பதில்லை. அவர்களே தகுதி உள்ளவர்களை தேடிப்போய் இந்த பதவிக்கு அழைத்து வந்தார்கள். அதுபோன்ற நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இதுவரை நடந்த நியமனங்கள், பேராசிரியர் தேர்வுகள் என அனைத்தும் குறித்து லஞ்ச ஒழிப்பு துறையினர் தீவிர விசாரணை நடத்த ஊழலுக்கு எதிரான கவர்னர் உத்தரவிடவேண்டும் என்பதும் கல்வியாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது. இழந்த பெருமையை தமிழக பல்கலைக்கழகங்கள் மீண்டும் பெற வேண்டும்.

Next Story