குரல் எழுப்பினால்தான் நிதி கிடைக்கும்


குரல் எழுப்பினால்தான் நிதி கிடைக்கும்
x
தினத்தந்தி 12 Feb 2018 9:30 PM GMT (Updated: 12 Feb 2018 6:16 PM GMT)

பாராளுமன்றத்தில் கட்சி வேறுபாடின்றி அனைத்துகட்சிகளும் ஒன்றாக இணைந்து குரல் எழுப்பி, தமிழ்நாட்டிற்கு உரிய நிதியை பெற்றுத்தரவேண்டும்.

ந்த ஆண்டு மத்திய பட்ஜெட் வெகுவாக எதிர்பார்க்கப்பட்டது. இந்த பட்ஜெட்டில் மும்பை–ஆமதாபாத் ‘புல்லட் ரெயில்’ திட்டத்திற்கு ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. இதுமட்டுமல்லாமல், மும்பையில் ஓடும் அனைத்து மின்சார ரெயில்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கு ரூ.356 கோடியே 51 லட்சம் ஒதுக்கப்பட்டது. ‘புல்லட் ரெயில்’ திட்டம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடியிலான திட்டம். இதற்காக ரூ.88 ஆயிரம் கோடி கடன் உதவி, 0.1 சதவீத வட்டியில் ஜப்பான் நாட்டிடம் இருந்து கிடைக்கிறது. ஏப்ரல், மே மாதங்களில் சட்டமன்றதேர்தலை சந்திக்க இருக்கும் கர்நாடக மாநிலத்திற்கு, கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையைவிட, 19.17 சதவீதம் கூடுதலாக ரெயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டிற்கு மொத்தம் ஒதுக்கப்பட்ட தொகை ரூ.2 ஆயிரத்து 448 கோடிதான். இதில், ரூ.960 கோடி வழக்கமாக நடந்துவரும் தண்டவாளங்களை மாற்றி அமைக்கும் பணிகளுக்காகச் சென்றுவிடும். இரட்டை ரெயில்பாதை திட்டத்திற்காக ரூ.55 கோடியே 40 லட்சம்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. ரெயில்பாதைகளை அகல ரெயில் பாதைகளாக மாற்றும் திட்டத்திற்கு ரூ.239 கோடியே 28 லட்சம்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ள தொகையை பார்த்தால், எப்போதுதான் இந்த திட்டங்களெல்லாம் முடியுமோ! என்ற ஐயம் வெகுவாக எழுகிறது. 

சென்னை–கடலூர் புதிய ரெயில்பாதை திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை எவ்வளவு தெரியுமா? ரூ.1 கோடிதான். இதுதவிர, எல்.ஐ.சி. போன்ற நிறுவனங்களிடமிருந்து மேலும் ரூ.100 கோடி கடனாக பெற்றுக்கொள்ள அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஈரோடு–பழனி புதிய ரெயில்திட்டத்திற்கு ரூ.10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை–தூத்துக்குடி இரட்டை ரெயில்பாதை திட்டத்திற்கு ரூ.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத்திட்டத்திற்கு ஆகும் மொத்தசெலவு ரூ.1,182 கோடியே 23 லட்சமாகும். இதுமட்டுமல்லாமல், மணியாச்சி–நெல்லை–நாகர்கோவில் இரட்டை ரெயில்பாதை திட்டத்திற்கு ரூ.1,003 கோடியே 94 லட்சம் மதிப்பிட்டுள்ள நிலையில், ரூ.75 கோடிதான் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்படி தமிழ்நாட்டில் உள்ள எல்லா திட்டங்களுக்குமே ‘யானைப்பசிக்கு சோளப்பொறி’ என்பதுபோல, ‘தொட்டுக்கோ துடைத்துக்கோ’ என்ற கிராம பழமொழிக்கேற்ப கொஞ்சம் தொகைதான் ஒதுக்கப்பட்டுள்ளது. ‘நிர்பயா நிதி’யில் இருந்து பெண்கள் பாதுகாப்பிற்கான திட்டங்களுக்காக ரெயில்வேக்கு ரூ.2 ஆயிரம் மட்டும்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு குறைவான தொகை ஒதுக்கப்பட்டும், தமிழ்நாட்டில் இருந்து எந்தவித குரலும் எழும்பவில்லை என்பது வேதனை அளிக்கத்தக்க வகையில் உள்ளது. 

பொதுபட்ஜெட்டில் ஆந்திராவுக்கு போதுமானஅளவு நிதி ஒதுக்கவில்லை என்பதற்காக, பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான தெலுங்குதேசம் கட்சியும், அதற்கு எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் ஒன்றாக சேர்ந்து பாராளுமன்றமே ஸ்தம்பிக்கும்வகையில் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்ததின் எதிரொலியாக ஆந்திராவுக்கு சிறப்பு நிதியாக ரூ.1,269 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும், பாராளுமன்றத்திலும் கட்சி வேறுபாடின்றி அனைத்துகட்சிகளும் ஒன்றாக இணைந்து குரல் எழுப்பி, தமிழ்நாட்டிற்கு உரிய நிதியை பெற்றுத்தரவேண்டும். அரசும் அதிகமான அழுத்தம்கொடுக்க வேண்டும்’. வாய் உள்ள பிள்ளைதான் பிழைக்கும் என்பார்கள். இனிமேலாவது மாநிலத்தின் பொதுபிரச்சினைகளுக்காக இந்தியாவே வியக்கும்வகையில், ‘இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே’ என்ற ஒற்றுமை உணர்வுடன் செயல்படவேண்டும்.

Next Story