மகிழ்வூட்டும் மானியவிலை ஸ்கூட்டர்


மகிழ்வூட்டும் மானியவிலை ஸ்கூட்டர்
x
தினத்தந்தி 13 Feb 2018 9:30 PM GMT (Updated: 2018-02-13T23:44:07+05:30)

இருசக்கர வாகனங்கள் (மொபட், ஸ்கூட்டர்) வாங்க 50 சதவீத மானியம் வழங்கப்படும்’’ என்று அறிவித்திருந்தது, பெண்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

2016–ம் ஆண்டு மே மாதம் நடந்த தேர்தலின்போது, மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ‘‘மகளிர் பணியிடங்களுக்கும், பிற வேலைகளுக்கும் எளிதில் செல்லும்வகையில், இருசக்கர வாகனங்கள் (மொபட், ஸ்கூட்டர்) வாங்க 50 சதவீத மானியம் வழங்கப்படும்’’ என்று அறிவித்திருந்தது, பெண்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. சாதாரண ஏழை–எளிய வீட்டுப் பெண்கள் அதிலும் குறிப்பாக, வேலைக்கு செல்லும் பெண்கள் இதுபோல மொபட் அல்லது ஸ்கூட்டரில் பயணம் செய்யவேண்டும் என்பதை ஒரு கனவாகவே வைத்திருக்கிறார்கள். அவர்கள் கனவு நனவாகும் வகையில், இந்தத்திட்டத்தை அறிவித்திருந்தது நிச்சயமாக பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம்தான்.

முதலில் இந்தத்திட்டம் தொடர்பான அறிவிப்பு வரும்போது, ஒரு ஸ்கூட்டருக்கு ரூ.20 ஆயிரம் அல்லது ஸ்கூட்டரின் பாதிதொகை, இதில் எது குறைவோ அந்தத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஆண்டு இந்தத்தொகை ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் இந்தத்திட்டத்தை ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24–ந்தேதி தொடங்கிவிடவேண்டும் என்பதில் மிக தீவிரம்காட்டி வருகிறார்கள். ஆண்டுக்கு ஒரு லட்சம் பெண்களுக்கு இந்த ஸ்கூட்டர் மானியம் வழங்க ரூ.200 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. கியர் இல்லாத அல்லது தானியங்கி கியருடன் கூடிய 125 சிசி எந்திர திறன்கொண்ட புதிய ஸ்கூட்டரை ஒரு லட்சம் பேர் வாங்குவார்கள் என்பது உறுதியாகிவிட்டதால், பல நிறுவனங்கள் ஏறத்தாழ இந்த விலையில் புதிய ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளன. ஆக, ஒருபக்கம் பணிபுரியும் ஏழை மகளிருக்கு ஸ்கூட்டருக்கு மானியம் கொடுக்கும் அரசு, மற்றொருபக்கம் உற்பத்தியையும் பெருக்கியிருக்கிறது. இதில் பாராட்டத்தக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், ‘இந்த ஸ்கூட்டரைத்தான் வாங்கவேண்டும் என்று அரசு வற்புறுத்தவில்லை. அவர்கள் விருப்பப்பட்ட எந்த ஸ்கூட்டரையும் வாங்கிக்கொள்ளலாம்’ என்று அறிவித்திருக்கிறது.

கடந்த 10–ந்தேதி வரை 3 லட்சத்து 36 ஆயிரத்து 103 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் ஒரு லட்சம் பேருக்கு ஸ்கூட்டர் வாங்க தலா ரூ.25 ஆயிரத்தை அரசு வழங்க இருக்கிறது. ஸ்கூட்டர் வாங்குவதற்காக இந்த மானியத்தொகையில் ரூ.25 ஆயிரம் போக மீதமுள்ள தொகையையும் வங்கியிலிருந்து கடனாகப்பெற உதவி செய்யப்படும் என்பது நிச்சயமாக வரவேற்புக்குரியது. குடும்பத்தலைவராக உள்ள பெண்கள், ஆதரவற்ற மகளிர், விதவைகள், மாற்றுத்திறனாளிகள், திருமணமாகாத 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி பெண்கள், திருநங்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்த ஒரு லட்சம் பேர் தேர்வில் எந்தவித முறைகேட்டுக்கும் இடமில்லாமல், தகுதியுள்ளவர்களுக்கு மட்டும் வழங்குவதில் அரசு உறுதியாக இருக்கவேண்டும். பயனாளிகள் தேர்வை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இலவசங்கள் கொடுப்பதைவிட, இதுபோன்ற அத்தியாவசிய மானியங்கள் நிச்சயமாக வரவேற்புக்குரியதாகும். ஒருலட்சம் பேருக்கு கொடுக்கும் திட்டம் வெற்றிபெற்றால், விண்ணப்பம் செய்தவர்களில் தகுதியுள்ள அனைவருக்கும் இந்த மானியம் கொடுப்பதற்கு அரசு பரிசீலிக்கவேண்டும்.

Next Story