அதிர்ச்சியளிக்கும் என்ஜினீயரிங் கல்லூரி தேர்வு முடிவுகள்


அதிர்ச்சியளிக்கும் என்ஜினீயரிங் கல்லூரி தேர்வு முடிவுகள்
x
தினத்தந்தி 15 Feb 2018 9:30 PM GMT (Updated: 15 Feb 2018 6:02 PM GMT)

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினால் படிக்கும்போதே என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கு ‘கேம்பஸ் இண்டர்வியூ’ மூலம் உடனடியாக வேலை கிடைத்தது.

டந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினால் படிக்கும்போதே என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கு ‘கேம்பஸ் இண்டர்வியூ’ மூலம் உடனடியாக வேலை கிடைத்தது. ஆனால், இப்போது வேலைவாய்ப்பு குறைந்தநிலையில், ஏராளமான என்ஜினீயரிங் பட்டதாரிகள் வேலையில்லா திண்டாட்டத்தில் சிக்கி உள்ளனர். இதனால் என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பெருமளவில் குறைந்தது. மொத்தமுள்ள 586 என்ஜினீயரிங் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்கள் 2,64,651. ஆனால், மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக இருந்தது. முதல் செமஸ்டர் தேர்வு கடந்த நவம்பர்-டிசம்பர் மாதத்தில் நடந்தது. இந்த தேர்வை 1,13,298 மாணவர்கள் எழுதினார்கள்.

சில நாட்களுக்கு முன்பு இந்த முதல் செமஸ்டர் தேர்வுமுடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த தேர்வுமுடிவுகள் பெரும் அதிர்ச்சி அளிக்கத்தக்க வகையில், வேதனை தரத்தக்கவகையில் உள்ளது. ஆழ்ந்த யோசனை செய்யவேண்டிய வகையில் அமைந்தது. கடந்த ஆண்டு 60.6 சதவீத மாணவர்கள் வெற்றிபெற்ற நிலையில், இந்த ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்களில் 34.55 சதவீத பேர்தான் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொதுவாக வேலைவாய்ப்பில் அனைத்து செமஸ்டர்களிலும் தேர்வு பெற்றவர்களுக்குத்தான் பெரிய நிறுவனங்களில் முன்னுரிமை வழங்கப்படுகின்ற சூழ்நிலையில், இவ்வளவு மாணவர்கள் தேர்ச்சிபெறாதது அவர்களது ஒளிமயமான எதிர்காலத்திற்கு ஒரு பாதிப்பையும் ஏற்படுத்திவிடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. முன்பு கம்ப்யூட்டர் பாடத்தில் சி, சி+, பி+ பாடங்கள் இருந்தன. இப்போது அதை மாற்றிவிட்டு, ‘பைத்தான் புரோகிராம்’ என்ற புதியபாடம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதுபோல ‘டிபரன்சியல் கால்குலஸ்’, ‘இன்டகிரல் கால்குலஸ்’ பாடங்களும் புதிதாக சேர்க்கப்பட்டிருந்தன. இந்த பாடத்தை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க பல கல்லூரிகளில் அதில் நிபுணத்துவம்பெற்ற ஆசிரியர்கள் இல்லை. அதுவும் ஒருகாரணம். கணிதம், இயற்பியல், வேதியியல், பாடங்களிலும் நிறைய மாணவர்கள் தோல்வி அடைந்திருக்கிறார்கள்.

இந்த பாடங்களுக்கான கேள்விகள் 11-ம் வகுப்பு பாடத்திட்டத்தை அடிப்படையாக வைத்து கேட்கப்பட்ட கேள்விகளாகும். பெரும்பாலான பள்ளிக்கூடங்களில் 11-வது வகுப்பு பாடங்களை நடத்தாமல், நேரடியாக பிளஸ்-2 வகுப்பு பாடங்களை மட்டும் எடுத்ததினால் இந்த பாடங்கள் பற்றிய போதிய அளவு புரிதல் மாணவர்களுக்கு இல்லாதது மற்றொரு காரணமாகும். அடிப்படையில்லாமல் இந்த பாடங்களை படிக்க முடியவில்லை. மற்றொரு காரணமாக முதல் ஆண்டு பாடத்திட்டம் அண்ணா பல்கலைக்கழகத்தால் தாமதமாகத்தான் வெளியிடப்பட்டது என்றும், இந்த தேர்வு திருத்துவது கடுமையாக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தேர்வு மதிப்பீட்டில் தவறு செய்ததாக 1,176 பேராசிரியர்கள் மீது அண்ணா பல்கலைக்கழகம் கடுமையான நடவடிக்கை எடுத்ததால், இந்த ஆண்டு செமஸ்டர் தேர்வு விடைத்தாளை திருத்தியவர்கள் மிகவும் அச்சத்துடன் கடுமையான முறையில் திருத்திவிட்டார்கள். அதுவும் இவ்வளவு பேர் தோல்வி அடைந்ததற்கு ஒருகாரணம் என்கிறார்கள். உடனடியாக அண்ணா பல்கலைக்கழகம் ஒரு நிபுணர் குழுவை அமைத்து, இவ்வளவு பேர் தோல்வி அடைந்ததற்கான காரணத்தை ஆராய்ந்து அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Next Story