உடனடித்தீர்வு காவிரி மேலாண்மை வாரியம்


உடனடித்தீர்வு காவிரி மேலாண்மை வாரியம்
x
தினத்தந்தி 16 Feb 2018 9:30 PM GMT (Updated: 2018-02-17T00:13:26+05:30)

அண்ணன், தம்பிகளாய் பழகிவந்த தமிழ்நாடும், கர்நாடக மாநிலமும் காவிரி பிரச்சினையால் பாசம் குறைந்து, புகைச்சல் வளர்ந்த நிலையில், வெகுகாலமாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு நேற்று வெளியாகிவிட்டது.

ண்ணன், தம்பிகளாய் பழகிவந்த தமிழ்நாடும், கர்நாடக மாநிலமும் காவிரி பிரச்சினையால் பாசம் குறைந்து, புகைச்சல் வளர்ந்த நிலையில், வெகுகாலமாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு நேற்று வெளியாகிவிட்டது. காவிரி தண்ணீருக்காக தமிழ்நாட்டுக்கும், கர்நாடகத்துக்கும் இடையே நீண்ட நெடுங்காலமாகவே தாவா இருந்து வந்திருக்கிறது. 1892-ம் ஆண்டே சென்னை மற்றும் மைசூரு மாகாணத்திற்கு இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. மீண்டும் 1924-ம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. தொடர்ந்து இருமாநிலங்களுக்கும் இடையே தண்ணீர் பங்கீடு தொடர்பாக தகராறு இருந்ததால், 1990-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. 2007-ல் நடுவர்மன்றம் தீர்ப்பளித்தது. இதன்படி, தமிழகத்திற்கு கர்நாடகம் 192 டி.எம்.சி. தண்ணீர் தரவேண்டும். கேரளாவுக்கு 30 டி.எம்.சி., புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி. தண்ணீர் தரவேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. தமிழகத்தின் கோரிக்கை 192 டி.எம்.சி. போதாது, கூடுதலாக கொடுக்கவேண்டும் என்பதுதான். கர்நாடகம், தமிழகத்திற்கு 192 டி.எம்.சி. கொடுக்க முடியாது. 132 டி.எம்.சி.யாக இந்த அளவை குறைக்கவேண்டும் என்று கோரியது. கடந்த ஆண்டு இறுதி விசாரணை தொடங்கியது. செப்டம்பர் மாதம் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது. 4 மாநிலங்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவே பரபரப்போடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த இந்த தீர்ப்பு விவரத்தில், தமிழகத்துக்கு நடுவர்மன்ற தீர்ப்புபடி 192 டி.எம்.சி. கொடுக்கவேண்டும் என்ற நிலையை மாற்றி, 177.25 டி.எம்.சி. கொடுத்தால்போதும் என்று 14.75 டி.எம்.சி. தண்ணீரை குறைத்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்திற்கு 270 டி.எம்.சி. நடுவர்மன்ற தீர்ப்புப்படி கிடைத்துள்ள நிலையில், இப்போது கூடுதலாக 14.75 டி.எம்.சி. வழங்கப்பட்டு, 284.75 டி.எம்.சி. என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு வழங்கப்படும் தண்ணீரில் மாற்றம் இல்லை. இந்த தீர்ப்பு தமிழ்நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பதில் யாருக்கும் எள்ளளவுகூட சந்தேகம் இல்லை. நிச்சயமாக தமிழக மக்களுக்கு ஏமாற்றம்தான். ஆனால் கிடைத்துள்ள ஒரு சிறிய ஆறுதல், காவிரி நதிநீரை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்பதுதான். இந்த தீர்ப்பை எதிர்த்து யாரும் மேல்முறையீடு செய்யமுடியாது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளும் முடிவுக்கு வந்தது என்றும் கூறிவிட்டது. இனி வேறு எதுவும் செய்யமுடியாது. ஆனால் இந்த தீர்ப்புப்படியாவது, இனிமேல் 177.25 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் திறந்துவிடுவதை மத்திய அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்றால், ‘காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம்’ உடனே அமைத்தாக வேண்டும். உச்சநீதிமன்றமே, நடுவர்மன்ற தீர்ப்புப்படி 6 வாரங்களுக்குள் ‘காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம்’ அமைக்கவேண்டும் என்பதை தெளிவாக தீர்ப்பில் கூறிவிட்டது. இனி 177.25 டி.எம்.சி. தண்ணீர்தான் கிடைக்கும். எனவே, கிடைப்பதை பயன்படுத்துவதற்கு தமிழக அரசு நீர்மேலாண்மை திட்டங்களை வகுக்கவேண்டும். பிரச்சினை முடிந்துவிட்டது. இனி தமிழ்நாட்டுக்கும், கர்நாடகத்துக்கும் இடையே நட்புறவு தழைக்கட்டும்.

Next Story