கோவில் சொத்துகளின் குத்தகை பாக்கி வசூல்


கோவில் சொத்துகளின் குத்தகை பாக்கி வசூல்
x
தினத்தந்தி 19 Feb 2018 11:30 PM GMT (Updated: 19 Feb 2018 6:43 PM GMT)

தமிழ்நாட்டில் 38 ஆயிரத்து 635 இந்து சமய மற்றும் சமண சமய திருக்கோவில்கள் உள்ளன.

தமிழ்நாட்டில் 38 ஆயிரத்து 635 இந்து சமய மற்றும் சமண சமய திருக்கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கெல்லாம் 2 லட்சத்து 4 ஆயிரம் ஏக்கர் நன்செய் நிலங்களும், 2 லட்சத்து 53 ஆயிரம் ஏக்கர் புன்செய் நிலங்களும், 21 ஆயிரம் ஏக்கர் மானாவாரி நிலங்களும், ஆக மொத்தம் 4 லட்சத்து 78 ஆயிரத்து 283 ஏக்கர் மற்றும் 59 சென்ட் நிலங்கள் உள்ளன. இதுமட்டுமல்லாமல், 22 ஆயிரத்து 600 கட்டிடங்களும், 33 ஆயிரத்து 665 மனைகளும் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. இவையெல்லாம் முன்னோர்கள் கோவில்களுக்கு தானமாக எழுதிவைத்துவிட்டு சென்ற சொத்துகளாகும். விவசாய நிலங்களை ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 729 குத்தகைதாரர்கள் பயிர்செய்து வருகிறார்கள்.

ஏராளமான நிலங்களும், கட்டிடங்களும், மனைகளும் திருக்கோவில்களுக்கு சொந்தமாக இருந்தாலும், பல கோவில்களில் ஒருகால பூஜைகூட நடத்த முடியாதநிலையில், நிலைமை மோசமாக இருக்கிறது. இவ்வளவு சொத்துக்களுக்கும் வரவேண்டிய வருமானம் முறையாக கிடைக்காமல் இருக்கிறது. காரணம் பல கட்டிடங்களுக்கு நியாயமான வாடகை நிர்ணயிக்கப்படவில்லை. விவசாய நிலங்களுக்கு வரவேண்டிய குத்தகை பாக்கி ஏராளமாக இருக்கிறது. ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருக்கிறது. பலர் கோவில் நிலங்களை தங்கள் பெயரில் மோசடியாக பட்டா மாற்றிக்கொண்டுள்ளனர். நீண்டகால குத்தகை என்றபெயரில் ஆட்சியாளர்களின் தயவாலும், அதிகாரிகளின் தயவாலும் ஏராளமான நிலங்களை பலர் பெற்று குறைந்த குத்தகையையே கொடுத்துவருகிறார்கள். வெகுகாலமாகவே இவ்வாறு குத்தகை பாக்கி, வாடகை பாக்கி, நியாயமான வாடகை செலுத்தாதவர்களிடமிருந்து கோவில் நிலங்கள் கட்டிடங்களை மீட்கவேண்டும் என்ற கோரிக்கை பக்தர்களிடம் வெகுவாக வலுத்து வருகிறது. ஆனால், பல்வேறு காரணங்களால் அவர்களை தொடமுடியவில்லை.

இந்தநிலையில், சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்டுள்ள ஒரு வழக்கில் நீதிபதி ஆர்.மகாதேவன் ஓர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். கோவில் சொத்துகளை குத்தகைக்கு எடுத்திருப்பவர்கள் கட்டிடங்கள், மனைகளை வாடகைக்கு எடுத்திருப்பவர்கள் பாக்கி வைத்திருந்தால் இதுவரையில் உள்ள பாக்கித்தொகையை 4 வாரத்திற்குள் செலுத்திவிடவேண்டும். இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை பத்திரிகைகளில் விளம்பரம் செய்யவேண்டும். 4 வாரத்திற்குள் வாடகை பாக்கியையும், குத்தகை பாக்கியையும் யாரும் செலுத்தாவிட்டால் அவர்களிடம் உள்ள கோவில் நிலங்களையும், கட்டிடங்களையும் பறிமுதல் செய்யவேண்டும்.

இதுமட்டுமல்லாமல், இந்த கோவில் நிலங்களுக்கு மற்றும் கட்டிடங்களுக்கு இப்போதுள்ள மார்க்கெட் மதிப்பில் குத்தகை மற்றும் வாடகை நிர்ணயம் செய்யப்பட இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுதொடர்பாக வாடகை நிர்ணயம் செய்வது, மற்றும் சொத்துகளை ஆய்வு செய்வதற்காக ஒரு குழு அமைக்கப்படவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெகுகாலமாகவே குத்தகை பாக்கி மற்றும் வாடகை பாக்கியை வசூலிக்கமுடியாமல் திணறிக்கொண்டிருக்கும் இந்து சமய அறநிலையத்துறைக்கு, இந்த தீர்ப்பு ஒரு நல்ல ஆயுதம்போல் கிடைத்துள்ளது. இதை பயன்படுத்தி கோவில்களில் அறகாரியங்கள் நடத்துவதற்காக வருமானத்தை பெருக்க பாக்கி வசூலில் அரசு தீவிரமாக இருக்கவேண்டும்.


Next Story