தமிழ்நாட்டில் முதலீட்டாளர்கள் மாநாடு


தமிழ்நாட்டில் முதலீட்டாளர்கள் மாநாடு
x
தினத்தந்தி 20 Feb 2018 9:30 PM GMT (Updated: 2018-02-20T18:09:01+05:30)

உத்தரபிரதேச மாநில முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத் தொழில் வளர்ச்சியில் அதிக முயற்சி எடுத்து வருகிறார்.

த்தரபிரதேச மாநில முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத் தொழில் வளர்ச்சியில் அதிக முயற்சி எடுத்து வருகிறார். அதன் ஒருபகுதியாக இன்று, முதல்முறையாக உத்தரபிரதேச முதலீட்டாளர்கள் மாநாடு லக்னோவில் தொடங்குகிறது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கிவைக்கிறார். 16 மத்திய மந்திரிகள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னணி தொழில் நிறுவனங்கள் எல்லாம் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதாக ஒப்புதல் அளித்துள்ளன. 4 நாட்களுக்கு முன்பு மராட்டிய மாநில முதலீட்டாளர் மாநாட்டையும் பிரதமர் நரேந்திரமோடி தொடங்கிவைத்தார். 3 நாட்கள் நடந்த இந்த மாநாட்டில் ரூ.12 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. விமானத்தொழில், ராணுவம், உள்கட்டமைப்பு வசதிகள், விலைஉயர்ந்த கற்கள் மற்றும் நகைதொழில்கள் போன்ற பல பெரியதொழில்கள் தொடங்கப்படுவதற்கு தொழில் அதிபர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

அடுத்த 2 நாட்களில் 30 பெரிய கம்பெனிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்று மராட்டிய முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார். விமானம் மற்றும் ராணுவ தொழிற்சாலைகளில் பணிபுரிவதற்கு திறன்வாய்ந்த தொழிலாளர்களை தயார் செய்ய ஒரு சீர்மிகு மையம் தொடங்கப்படும் என்றும் முதல்–மந்திரி அறிவித்துள்ளார். ராணுவம் தொடர்பான நிறுவனங்கள் நாக்பூர், அகமதுநகர், புனே, நாசிக் மற்றும் அவுரங்காபாத் போன்ற இடங்களில் தொடங்கப்பட இருக்கின்றன. இதுதவிர, பல வெளிநாட்டு கம்பெனி நிறுவனங்களும் மராட்டிய மாநிலத்தில் தங்கள் தொழிலை தொடங்க இருக்கின்றன. இதேபோல குஜராத், ஆந்திரா, கர்நாடகம் போன்ற பல மாநிலங்கள் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்திமுடித்து பல தொழில்களை தங்கள் பக்கம் ஈர்த்துள்ளன.

தமிழ்நாட்டில் 2015–ம் ஆண்டு செப்டம்பர் 9, 10 ஆகிய நாட்களில் அப்போது முதல்–அமைச்சராக இருந்த மறைந்த ஜெயலலிதா தலைமையில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் அதிபர்கள், தலைமை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 9 நாடுகள் பங்குதாரர் நாடுகளாக பங்கேற்றனர். ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடி மதிப்பிலான, 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானாலும், இப்போது செயலாக்கத்தில் உள்ளது ரூ.62 ஆயிரத்து 738 கோடி மதிப்பிலான முதலீடுகள்தான். 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கும் என்று ஜெயலலிதா அறிவித்திருந்த நிலையில், இப்போது 3 ஆண்டுகளையும் கடந்து, அடுத்த மாநாடு 2019–ம் ஆண்டு ஜனவரி 23, 24–ந் தேதிகளில்தான் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களும் வேகவேகமாக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி, பெரிய பெரிய தொழில்நிறுவனங்களில் உள்ள முதலீடுகளை எல்லாம் ஈர்த்தபிறகு, தமிழ்நாட்டிற்கு மிச்சம் மீதியிருக்கும் முதலீடுகள்தான் வரும். ஒவ்வொரு நிறுவனமும் புதிதாக தொழில் தொடங்கவும், தங்கள் நிறுவனங்களை விஸ்தரிக்கவும், ஒருதொகையை, ஒரு திட்டத்தை நிர்ணயித்திருப்பார்கள். அதையெல்லாம் இதுபோல் மற்ற மாநிலங்கள் பங்கிட்டபிறகு, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய என்ன இருக்கப்போகிறது? என்று சமூகஆர்வலர்கள் கவலைப்படுகிறார்கள். எனவே, தமிழக அரசு இந்த ஆண்டே எவ்வளவு விரைவில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த முடியுமோ?, அவ்வளவு வேகமாக நடத்தவேண்டும் என்பதுதான் பரவலான கருத்தாக இருக்கிறது.

Next Story