வரவேற்கத்தகுந்த அனைத்துகட்சி கூட்டம்


வரவேற்கத்தகுந்த அனைத்துகட்சி கூட்டம்
x
தினத்தந்தி 21 Feb 2018 9:30 PM GMT (Updated: 21 Feb 2018 1:22 PM GMT)

11 ஆண்டுகளுக்குப்பிறகு அனைத்துகட்சி கூட்டத்தை இன்று தமிழக அரசு கூட்டியுள்ளது. இதற்கு முன்பு 19–2–2007 அன்றும் 15–4–2007 அன்றும் தமிழக அரசால் அனைத்துகட்சி கூட்டம் கூட்டப்பட்டது.

11 ஆண்டுகளுக்குப்பிறகு அனைத்துகட்சி கூட்டத்தை இன்று தமிழக அரசு கூட்டியுள்ளது. இதற்கு முன்பு 19–2–2007 அன்றும் 15–4–2007 அன்றும் தமிழக அரசால் அனைத்துகட்சி கூட்டம் கூட்டப்பட்டது. எப்படி காவிரி பிரச்சினைக்காக இப்போது அனைத்துகட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளதோ?, அதேபோலத்தான் காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு வந்தவுடனும் அப்போதும் அனைத்துகட்சி கூட்டம் கூட்டப்பட்டது. இப்போது அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கிறது. ஆனால், அப்போது தி.மு.க. ஆட்சியில் இருந்தது. 5–2–2007 அன்று காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு வெளியிடப்பட்டது. 19–2–2007 அன்று முதல்–அமைச்சர் கருணாநிதி தலைமையில் நடந்த அனைத்துகட்சி கூட்டத்தில் சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளுக்கேற்ப ஒரு மனுவை காவிரி நடுவர்மன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்த தீர்மானத்தின் அடிப்படையில், நடுவர்மன்றத்திடம் தாக்கல் செய்ய இருக்கிற மனுவில் எவற்றையெல்லாம் சேர்க்கலாம் என்பதுபற்றி அனைத்துகட்சி உறுப்பினர்களின் ஆலோசனையையும் கேட்பதற்காக 15–4–2007 அன்று மீண்டும் ஒரு அனைத்துகட்சி கூட்டம் நடந்தது. இந்தக்கூட்டத்தில் அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., தே.மு.தி.க., தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள், பா.ஜ.க., திராவிடர் கழகம் உள்பட அனைத்துகட்சிகளும் கலந்துகொண்டன. அ.தி.மு.க. சார்பில் ஓ.பன்னீர்செல்வமும், அமைப்புச்செயலாளர் என்.ஜோதியும் கலந்துகொண்டனர். இதுபோல காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மன்னார்குடி எஸ்.ரங்கநாதன் கலந்துகொண்டார். இந்தக்கூட்டத்தில் அ.தி.மு.க சார்பில் காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்மீது உச்சநீதிமன்றம் செல்லவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்தக்கூட்டத்தில் காவிரி நடுவர்மன்றத்தில் மறு ஆய்வுமனு தாக்கல்செய்வது என்றும், தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவுசெய்யப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு கடந்த 16–ந்தேதி வெளியிடப்பட்டது. இந்தத்தீர்ப்பில் தமிழ்நாட்டிற்கு சாதகமான அம்சங்களும், பாதகமான அம்சங்களும் இருக்கின்றன. இந்தநிலையில், தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும், காவிரி நதிநீரைக்கொண்டு விவசாயம் செய்துவரும் தமிழ்நாடு விவசாயிகளின் நலனை தொடர்ந்து பேணிகாப்பதற்காகவும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்மீது எடுக்கப்படவேண்டிய மேல்நடவடிக்கைகள் குறித்து கலந்து ஆலோசிப்பது குறித்தும் இன்று அனைத்துகட்சி கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது. மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்ததுபோல, விவசாய சங்க பிரதிநிதிகளையும் அழைத்திருப்பது பாராட்டுக்குரியது. அனைத்துகட்சி தலைவர்களும் ஒருமனதாக இன்று நடக்கும் கூட்டத்தில் தமிழக விவசாயிகளின் நலன்காக்க தீர்மானம் நிறைவேற்றவேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். தேவைப்பட்டால் முதல்–அமைச்சர் தலைமையில் அனைத்துகட்சி தலைவர்களும் டெல்லிக்கு சென்று பிரதமரை நேரில் சந்தித்து நமது கோரிக்கைகளை வலியுறுத்தவேண்டும் என்பதுதான் விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது. அண்டை மாநிலங்களில் எல்லாம் அவர்கள் பிரச்சினைக்காக அனைத்துகட்சிகளும் ஓரணியில் நின்று குரல்கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், 11 ஆண்டுகளுக்குப்பிறகு இப்போது அனைத்துகட்சிகளும் காவிரி பிரச்சினைக்காக ஓரணியில் நிற்பதை பார்க்கும்போது விவசாயிகளின் மனதில் மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அரசியலில் ஆயிரம் கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், பொது பிரச்சினைகளில் இதுபோல ஓரணியில் நின்று ஆலோசனை நடத்தி முடிவுகளை மேற்கொள்வது தொடரவேண்டும்.

Next Story