கமல்ஹாசனின் புதிய பயணம்


கமல்ஹாசனின் புதிய பயணம்
x
தினத்தந்தி 22 Feb 2018 9:30 PM GMT (Updated: 2018-02-22T18:58:55+05:30)

தற்போது தமிழ்நாட்டில் தேர்தல் கமி‌ஷன் கணக்கில் 7 தேசிய கட்சிகள் இருக்கின்றன.

ற்போது தமிழ்நாட்டில் தேர்தல் கமி‌ஷன் கணக்கில் 7 தேசிய கட்சிகள் இருக்கின்றன. பா.ஜ.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய 7 தேசிய கட்சிகளும், அ.இ.அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க. ஆகிய 3 மாநில கட்சிகளும், இந்த கணக்குகளில் வராத 155 பதிவுசெய்யப்பட்ட பிறகட்சிகளும் இருக்கின்றன. 156–வது பதிவு செய்யப்பட்ட கட்சியாக கமல்ஹாசனின் ‘மக்கள் நீதி மய்யம்’ உதயமாகியுள்ளது. தேர்தல் கமி‌ஷனில் தன்கட்சியை பதிவு செய்ய கமல்ஹாசன் விண்ணப்பித்துவிட்டார்.

ஜெயலலிதா மறைவுக்குப்பிறகும், கருணாநிதி உடல்நலக்குறைவால் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும் நிலையிலும், தமிழக அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. நடிகர்கள் கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் அரசியலுக்குள் அடியெடுத்து வைக்கப்போகிறோம் என்பதை பகிரங்கமாக அறிவித்தனர். கமல்ஹாசன் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைத்துக்கொண்டே வந்து, இப்போது இறுதியாக ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற கட்சியைத் தொடங்கியிருக்கிறார். இதன்மூலம் அவரது அரசியல் பயணம் அதிகாரபூர்வமாக தொடங்கியிருக்கிறது. இந்த தொடக்கவிழாவை மிகபுதுமையான முறையில் நடத்தி முடித்துவிட்டார். ‘நாளை நமதே’ என்ற பெயரில் அரசியல் பயணத்தை தொடங்கியிருக்கும் கமல்ஹாசன், முதலில் ராமேசுவரம் சென்று அங்கு எளிமையின் உருவமாக, ஆற்றலின் சிகரமாக, மிகச்சிறந்த பண்பாளராக, தலைசிறந்த விஞ்ஞானியாக, எல்லோருக்கும் இனியவராக வாழ்ந்து, மறைந்த அப்துல்கலாம் வீட்டிற்குச் சென்றார். அங்கு அப்துல்கலாமின் அண்ணன் முகம்மது முத்து மீரான் லெப்பை மரைக்காயரை சந்தித்து பேசிவிட்டு, மீனவர்களுடன் உரையாடல் நடத்தினார். பின்பு அப்துல்கலாமின் நினைவிடத்திற்குச் சென்றுவிட்டு, தன் அரசியல் பயணத்தை தொடங்கினார்.

மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில், டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுடன் கலந்து தனது அரசியல் பயணத்தை மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே தொடங்கினார். முதலில் தன்கட்சி கொடியை ஏற்றிவைத்தார். தன்கட்சி கொடியின் சின்னத்திலேயே அவர் அண்டை மாநிலங்களோடு சுமூக உறவு கொள்ளப்போவதை தெளிவாக காட்டிவிட்டார். தன்கட்சி சின்னத்தில் 6 கைகள் கோர்த்து இருப்பது போன்ற படம் இடம்பெற்றிருக்கிறது. அதன் நடுவில் ஒரு நட்சத்திரம் வரையப்பட்டுள்ளது. கொடியிலேயே ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற கட்சியின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. உற்றுநோக்கினால் தென் இந்தியாவின் வரைபடம் தெரிகிறது. 6 கைகள் என்பது, 6 தென் இந்திய மாநிலங்களை குறிப்பதாகும். 6 முனை நட்சத்திரங்கள் என்பது மக்களை குறிப்பதாகும் என்று கூட்டத்திலேயே விளக்கம் சொன்னார். சாதி, மதத்தைச் சொல்லி, சொல்லி விளையாடிய விளையாட்டுகள் நிறுத்தப்படவேண்டும். ஊழலை இனிமேல் வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமுடியாது. ஓட்டுக்கு பணம் கொடுக்கமாட்டேன், வேலையில்லா திண்டாட்டத்தை போக்குவேன் என்பது உள்பட தன்கட்சியின் அனைத்து கொள்கைகளையும் தெரிவித்தார். கமல்ஹாசன் தன்கட்சியை தொடங்கிவிட்டார். அவர் கட்சியின் தாக்கம் எப்படி இருக்கும்?, எந்த கட்சிக்கு பாதிப்பு இருக்கும்?, 156–வது பதிவு செய்யப்பட்ட கட்சியாக இருக்கப்போகிறதா?, அங்கீகாரம் பெற்ற 4–வது மாநில கட்சியாக உருவெடுக்கப்போகிறதா? என்பது தொடர்ந்து கிடைக்கும் மக்கள் ஆதரவையும், அடுத்துவரும் தேர்தல்களில் பெறப்போகும் வெற்றியிலும்தான் இருக்கிறது.

Next Story