தண்ணீர் சிக்கனத்தில் கவனம்


தண்ணீர் சிக்கனத்தில் கவனம்
x
தினத்தந்தி 23 Feb 2018 10:00 PM GMT (Updated: 23 Feb 2018 12:24 PM GMT)

தண்ணீரின் தேவையை குறைப்பதற்காக குறைந்தளவில் தண்ணீரை பயன்படுத்துவதற்கு தேவைப்படும் பயிர்களை பயிரிடவேண்டும்.

காவிரி பிரச்சினையில் இப்போது உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழ்நாட்டிற்கு 14.75 டி.எம்.சி. தண்ணீர் குறைக்கப்பட்டு 177.25 டி.எம்.சி. தண்ணீர்தான் வழங்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு பங்கில் குறைக்கப்பட்ட தண்ணீர், கர்நாடக மாநிலத்திற்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் காவிரி டெல்டா பிரதேசங்களில் குறுவை, தாளடி, சம்பா என்று முப்போகம் விளைந்தது. ஆனால், இப்போது கடந்த சில ஆண்டுகளாக காவிரியில் கர்நாடக மாநிலம் போதியளவு தண்ணீர் திறந்துவிடாத தால் ஒருபோக சாகுபடி, அதாவது சம்பா சாகுபடி மட்டும் நடந்துவருகிறது. 

ஒரு டி.எம்.சி. தண்ணீரை பயன்படுத்தி 6321.13 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்யமுடியும். அந்த கணக்குப்படி 14.75 டி.எம்.சி. தண்ணீரை இனி இழக்கும் பட்சத்தில் 93,236.67 ஏக்கர் நிலத்தில் சாகுபடி குறைந்துவிடும். ஆக, இந்தநிலையை தவிர்க்க வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கூறும் பரிந்துரைகளை, தமிழக அரசு முழுமையாக நிறை வேற்றினால்தான் இப்போது வழங்கப்பட்டுள்ள 177.25 டி.எம்.சி. தண்ணீரைக் கொண்டு ஒரு போகத்திற்குமேல் சாகுபடி செய்வதற்கான வாய்ப்புகளை பெறமுடியும். காவிரி மேலாண்மை வாரியத்தை விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கூறிய எம்.எஸ்.சுவாமிநாதன், இந்த வாரியத்தில் நீர் தொழில்நுட்ப வல்லுனர்களும், வேளாண் நிபுணர்களும் இருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். இதுமட்டுமல்லாமல், தண்ணீரின் தேவையை குறைப்பதற்காக குறைந்தளவில் தண்ணீரை பயன்படுத்துவதற்கு தேவைப்படும் பயிர்களை பயிரிடவேண்டும். சொட்டுநீர் பாசனம் மற்றும் பிறநீர் சேமிப்பு நுட்பங்களையும், யுக்திகளையும் பயன்படுத்தவேண்டும்.

சந்தையில் எந்தப்பயிர்களுக்கு அதிக விலை இருக்கிறதோ?, அத்தகைய பயிர்களை பயிரிட விவசாயி களுக்கு ஆலோசனை வழங்கவேண்டும். பெருகிவரும் மழைநீரை சேமித்து அதை பயன்படுத்த வேண்டும் என்று கட்டாயமாக்கவேண்டும். வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிகளவில் கிடைக்கும் மழைநீரை முறையாக சேமிக்கவேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தின் பலன்களை அடைய நீர்வள பாதுகாப்பு வாரியத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று தன் பரிந்துரையில் கூறியுள்ளார். எம்.எஸ்.சுவாமிநாதனின்

கருத்துக்கு வலுசேர்ப்பது போல இந்தியாவின் நீர்மனிதர் என்று அழைக்கப்படும் ராஜேந்திரசிங், ‘‘தமிழகத்தில் நீர்மேலாண்மை மிகவும் கீழ்நிலையில் இருக்கிறது. மழைநீர் சேகரிப்பு அடியோடு இல்லை. மழைநீர் சேகரிப்பு என்ற பெயரில் இங்குள்ள திட்டங்கள் பெயரளவுக்கே செயல்படுத்தப் படுகின்றன. அண்டை மாநிலங்களுடன் உள்ள நீர்ச்சிக்கல்களை சட்டரீதி யாகவும், அரசியல் ரீதியாகவும் தீர்த்துக் கொள்வது ஒருபக்கம். அதற்கு முன்பாக முதலில் உங்கள் மாநிலத்துக்குள்ளேயே கிடைக்கும் தண்ணீர் வளத்தை முறையாக முழுமையாக சேகரிக்கும் முயற்சிகளில் கவனம் செலுத்துங்கள். அதில் மக்களை ஈடுபடுத் துங்கள். அது பெரிய வெற்றி யைத்தரும் என்பது ராஜஸ்தான் அனுபவத்தில் நாங்கள் கண்ட உண்மை’’ என்று கூறியிருக்கிறார். இதையும் அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழக அரசு எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையில், ஒரு விவசாய நிபுணர்கள் குழுவை அமைத்து உடனடியாக அவர் களின் ஆலோசனையை பெறவேண்டும். அதை நிறை வேற்றவேண்டும். தமிழ்நாட்டிலுள்ள வேளாண் பல்கலைக்கழகங்களும், வேளாண்நிபுணர்களும் குறைந்தளவு தண்ணீரை பயன்படுத்தி, நிறைவான விளைச்சலை காணும் நெல்பயிர் ரகங்களை கண்டு பிடிக்கும் வகையிலான ஆராய்ச்சிகளை மேம்படுத்த வேண்டும். இஸ்ரேல் நாட்டு தொழில்நுட்பங்களை தமிழ்நாட்டில் பயன்படுத்துவதுதான் சிறந்த வழியாகும். இப்போது தேவை தண்ணீர் சிக்கனம்– விளைச்சல் அமோகம். 

Next Story