அரசியல் வாசலுக்கு வந்துவிட்ட ரஜினிகாந்த்


அரசியல் வாசலுக்கு வந்துவிட்ட ரஜினிகாந்த்
x
தினத்தந்தி 25 Feb 2018 9:30 PM GMT (Updated: 25 Feb 2018 11:52 AM GMT)

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றிலும், ஒரு பஞ்ச் டயலாக் சொல்வது வழக்கம். அதுபோல ஒரு படத்தில், ‘நான் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வருவேன்’ என்று சொல்லியது இன்றளவும் பரபரப்பாக பேசப்படுகிறது.

டிகர் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றிலும், ஒரு பஞ்ச் டயலாக் சொல்வது வழக்கம். அதுபோல ஒரு படத்தில், ‘நான் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வருவேன்’ என்று சொல்லியது இன்றளவும் பரபரப்பாக பேசப்படுகிறது. படத்தில் சொன்னதை கடந்த வெள்ளிக்கிழமை நெல்லை மாவட்ட ஒன்றிய, நகர ரசிகர்மன்ற நிர்வாகிகளிடையே பேசியபோது கூறிய கருத்துகள் நிரூபித்துவிட்டது. அரசியலுக்குள் நடிகர் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அடியெடுத்து வைக்கப்போகிறார்கள் என்று தொடர்ந்து பேசப்பட்டுவந்தது. யார் முதலில் அரசியலுக்குள் வருவார்கள் என்று எல்லோருமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், கமல்ஹாசன் கடந்த 21–ந் தேதி மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் தன் கட்சியின் பெயர் ‘மக்கள் நீதி மய்யம்’ என்று அறிவித்ததோடு இல்லாமல், கட்சிக்கொடியையும் அறிமுகப்படுத்தினார். தேர்தல் கமி‌ஷனில் தன் கட்சியை பதிவுசெய்ய விண்ணப்பமும் கொடுத்துவிட்டார்.

இந்தநிலையில், தமிழக மக்களின் பார்வையெல்லாம் ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்குள் வரும் செய்தியை அதாவது, தன் கட்சி பெயரை, கொடியை அறிவிக்கப்போகிறார்? என்பதில்தான் இருந்தது. இதற்கு பதில் சொல்லும்வகையில்தான், நெல்லை மாவட்ட ரசிகர்மன்ற நிர்வாகிகளிடம் பேசும்போது தன் பாதையை தெளிவாக காட்டிவிட்டார். அரசியலுக்கு கட்டமைப்பு மிக மிக முக்கியம். தமிழ்நாடு மட்டுமல்ல, மற்ற மாநிலங்களிலும் பெரிய கட்சிகள் சில தேர்தல்களில் தோற்றாலும்கூட, நீடித்து நிலைக்கிறார்கள் என்று சொன்னால் அவர்களுக்கு என்று வாக்குவங்கி வைத்திருக்கிறார்கள். அதற்கு முக்கியகாரணம், அவர்கள் அமைத்து வைத்திருக்கின்ற கட்டமைப்புதான். அதைத்தான் நாம் முதலில் தொடங்கவேண்டும். இது சாதாரண கட்டிடம் அல்ல, 32 தளம் கொண்ட கட்டிடம். (அவர் 32 என்று சொன்னது தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்கள்). எனவே, அதற்கு அடித்தளம் ரொம்ப ரொம்ப வலிமையாக போடவேண்டும். அதற்குத்தான் முதலில் நாம் அந்த பணிகளில் ஈடுபட்டு இருக்கிறோம். முதலில் நாம் சத்தமில்லாமல் இந்த வேலையை முடிக்கவேண்டும் என்று தெளிவாக கூறிவிட்டார்.

கட்டமைப்பு என்று அவர் சொன்ன வாக்குவங்கிகளை உருவாக்க ஒன்றிய, நகர, கிராம அளவில் இல்லாமல், அடிமட்டத்தில் பூத் அளவில் தன் கட்டமைப்புகளை தொடங்கத் திட்டமிட்டுவிட்டார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. தமிழ்நாட்டில் ஏறத்தாழ 66 ஆயிரம் வாக்குச்சாவடிகள் இருக்கின்றன. அத்தனை வாக்குச்சாவடிகளையும் அடிப்படையாக வைத்து, அந்த பகுதியிலிருந்து தன் கட்டமைப்பு வசதிகளை உருவாக்க ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார். அஸ்திவாரத்தை வலிமையாக போட்டுவிட்டு, அதிலிருந்து 32 மாவட்டங்களான 32 தளங்களையும் கட்ட நினைத்து இருக்கிறார். அந்த பணியின் ஒரு பகுதியாகத்தான் இப்போது ரசிகர்மன்ற நிர்வாகிகளை சந்தித்துவருகிறார். இதற்கு அடுத்தகட்டமாக சுற்றுப்பயணம் செய்யப்போகிறேன் என்று அறிவித்திருக்கிறார். தொடக்கத்திலிருந்தே ரஜினிகாந்த் தன் அரசியல் பிரவேச அறிவிப்புகளை படிப்படியாகத்தான் சொல்லிவருகிறார். ‘‘வருகிற சட்டமன்ற தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து, தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்’’ என்பதை புத்தாண்டு அன்று முத்தாய்ப்பாக அறிவித்தார். இப்படி ஒவ்வொரு படியாக ஏறிவந்த ரஜினிகாந்த், இப்போது அரசியலின் வாசலுக்கு வந்துவிட்டார். இனி கட்சிப்பெயரை அறிவித்து, கட்சியை தொடங்குவதைத்தான் எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.

Next Story