கர்நாடகத்தின் மீது கண் வைத்துவிட்டார்


கர்நாடகத்தின் மீது கண் வைத்துவிட்டார்
x
தினத்தந்தி 27 Feb 2018 9:30 PM GMT (Updated: 2018-02-27T23:40:36+05:30)

2014–ம் ஆண்டு பிரதமர் நரேந்திரமோடி பதவியேற்றநேரத்தில், குஜராத், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கர், அரியானா, நாகலாந்து, மராட்டியம் ஆகிய 7 மாநிலங்களில் மட்டும்தான் பா.ஜ.க. ஆட்சியில் இருந்தது.

2014–ம் ஆண்டு பிரதமர் நரேந்திரமோடி பதவியேற்றநேரத்தில், குஜராத், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கர், அரியானா, நாகலாந்து, மராட்டியம் ஆகிய 7 மாநிலங்களில் மட்டும்தான் பா.ஜ.க. ஆட்சியில் இருந்தது. ஆனால், 3 ஆண்டுகளில் பா.ஜ.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் 19 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறது. இந்த ஆண்டு கர்நாடகம், ராஜஸ்தான், சத்தீஷ்கர், மத்தியபிரதேசம், மேகாலயா, திரிபுரா, மிசோரம், நாகலாந்து ஆகிய 8 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவேண்டும். இதில், மேகாலயா, திரிபுரா, நாகலாந்து மாநிலங்களில் தேர்தல் முடிந்துவிட்டது. இந்த 3 மாநிலங்களிலும் மார்ச் 3–ந்தேதி தேர்தல் முடிவுகள் வெளிவரும். தற்போது காங்கிரஸ் பஞ்சாப், மேகாலயா, மிசோரம், கர்நாடகம் ஆகிய 4 மாநிலங்களில் மட்டும் ஆட்சியில் இருக்கிறது. இன்றைய சூழ்நிலையில், இந்திய மக்கள்தொகையில் 67.78 சதவீத மக்கள் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஆட்சிசெய்யும் மாநிலங்களில் இருக்கிறார்கள். 78.08 சதவீத யூனியன் பிரதேச மக்களை பா.ஜ.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் ஆட்சிசெய்து வருகிறது. கர்நாடகாவில் வருகிற மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது.

224 சட்டசபை தொகுதிகள் உள்ள கர்நாடகாவில், 2008–ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க. 110 இடங்களைப்பெற்று ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் 80 இடங்களையும், மதசார்பற்ற ஜனதாதளம் 28 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. அதன்பின் 2013–ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் 122 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. பா.ஜ.க.வும், மதசார்பற்ற ஜனதாதளமும் தலா 40 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இப்போது 4 மாநிலங்களில் மட்டும் காங்கிரஸ் ஆட்சிசெய்து கொண்டிருக்கும் நிலையில், இந்திராகாந்தி ஆட்சிக்காலத்தில் 18 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சிசெய்தது குறிப்பிடத்தக்கது. பிரதமர் நரேந்திரமோடியை பொறுத்தமட்டில், காங்கிரஸ் ஆட்சிசெய்யாத இந்தியாவை உருவாக்குவதைத்தான் தனது லட்சியமாக கொண்டிருக்கிறார்.

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு பதில் அளிக்கும்போது, இந்த கருத்தை அவர் குறிப்பிட்டுச்சொன்னார். ‘இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன், காங்கிரஸ் கட்சி கலைக்கப்படவேண்டும் என்பது மகாத்மா காந்தியின் கனவு’ என்று மோடி தெள்ளத்தெளிவாக தெரிவித்துவிட்டார். தனது உரை முழுவதையும் தேர்தலை மனதில் வைத்துதான் நிகழ்த்தினார். பாராளுமன்றத்தில்கூட, எதிர்க்கட்சி தலைவர் கார்கேவையும், கர்நாடகா மாநில முதல்–மந்திரி சித்தராமையாவையும் அரசியல் ரீதியாக தாக்கிப்பேசினார். ஆக, கர்நாடக மாநில தேர்தலை மனதில் வைத்து காரியம் ஆற்றத்தொடங்கிவிட்டார். மாநிலம் முழுவதும் எடியூரப்பா நடத்திய பரிவர்த்தனா யாத்திரை நிறைவு நாளில் பெங்களூருவில் உரையாற்றிய நரேந்திரமோடி, தற்போதைய காங்கிரஸ் அரசாங்கம் 10 சதவீத கமி‌ஷன் அரசாங்கம் என்று தாக்கிப்பேசினார். மைசூருவில் நடந்த பேரணியிலும் இதே கருத்தை கூறியிருக்கிறார். தாவணகெரேயில் நேற்று நடந்த பேரணியில் பேசியிருக்கிறார். பிஜாப்பூர், ராய்ச்சூர் ஆகிய இடங்களிலும் இத்தகைய பேரணிகளில் பேசப்போவதாக தெரிகிறது. கர்நாடகத்தை எப்படியும் கைப்பற்றிவிடவேண்டும். காங்கிரஸ் நினைத்துக்கூட பார்க்கமுடியாத அளவில் குறைவான இடங்களில்தான் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கில், கர்நாடகத்தின் மீது கண் வைத்துவிட்டார் பிரதமர். தேர்தல் முடிவுதான் இதற்கு பதில் சொல்லும்.

Next Story