தமிழ்நாட்டுக்கு தாராளமாக நிதி தாருங்கள்


தமிழ்நாட்டுக்கு தாராளமாக நிதி தாருங்கள்
x
தினத்தந்தி 28 Feb 2018 9:30 PM GMT (Updated: 2018-03-01T01:54:12+05:30)

கடந்த நவம்பர் மாதம் 30-ந்தேதி கன்னியாகுமரி, கேரளா மாநிலங்களில், ‘ஒகி’புயல் வீசியது. கன்னியாகுமரி மாவட்டத்தையே இந்த புயல் புரட்டிப்போட்டுவிட்டது.

டந்த நவம்பர் மாதம் 30-ந்தேதி கன்னியாகுமரி, கேரளா மாநிலங்களில், ‘ஒகி’புயல் வீசியது. கன்னியாகுமரி மாவட்டத்தையே இந்த புயல் புரட்டிப்போட்டுவிட்டது. கடலில் மீன்பிடிக்கச்சென்ற ஏராளமான மீனவர்கள் உயிர் இழந்தனர், பலரை இன்னும் காணவில்லை, பலர் காயமடைந்தனர். அவர்கள் படகுகள் எல்லாம் பலத்த சேதத்திற்குள்ளாகியது. விவசாய பயிர்களும் பெருமளவில் சேதம் அடைந்துவிட்டன. தேக்கு, பலா, ரப்பர், தென்னை, வாழை மரங்கள் எல்லாம் அடியோடு சாய்ந்தன. அந்த மாவட்ட மக்கள் எல்லாம் தங்கள் வாழ்க்கையை இனி புதிதாகத்தான் தொடங்கவேண்டும் என்றநிலை ஏற்பட்டுள்ளது. இந்த புயல் வீசியவுடன் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட பிரதமர் நரேந்திரமோடி வந்தார். ‘ஒகி’ புயலைப்போல, வடகிழக்கு பருவமழை பெய்தகாலத்தில் தொடர்மழையின் காரணமாக சென்னை மற்றும் சில மாவட்டங்களில் பெரும்பாதிப்பு ஏற்பட்டது. ‘ஒகி’ புயல் பாதிப்புகள், சென்னை மற்றும் இதர கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நிரந்தரமாக சீரமைக்கும் பணிகளுக்காக ரூ.9,302 கோடி மத்திய அரசு உடனடியாக தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டும் என்று பிரதமரிடம், முதல்வர் கோரிக்கை விடுத்தார்.

மத்திய அரசாங்கத்திலிருந்து நிபுணர் குழுவெல்லாம் வந்து சேதத்தை பார்வையிட்டு சென்றார்கள். ஆனால், கடந்த திங்கட்கிழமை மத்திய உள்துறை மந்திரி தலைமையில் நடந்த உயர்நிலைக்குழு கூட்டத்தில் ரூ.9,302 கோடி நிவாரணம் கேட்ட தமிழ்நாட்டிற்கு, தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து ரூ.133 கோடியே 5 லட்சம் மட்டும் ஒதுக்குவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், கேரளாவிற்கு ரூ.169 கோடியே 63 லட்சமும், பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பீகாருக்கு ரூ.1,711 கோடியே 66 லட்சமும், குஜராத்திற்கு ரூ.1,055 கோடியே 5 லட்சமும், ராஜஸ்தானுக்கு ரூ.420 கோடியே 57 லட்சமும், உத்தரபிரதேசத்திற்கு ரூ.420 கோடியே 69 லட்சமும், மேற்கு வங்காளத்திற்கு ரூ.838 கோடியே 85 லட்சமும், வறட்சியால் பாதிக்கப்பட்ட சத்தீஷ்காருக்கு ரூ.395 கோடியே 91 லட்சமும், மத்தியபிரதேசத்துக்கு ரூ.836 கோடியே 9 லட்சமும் ஒதுக்கீடு செய்ய முடிவுசெய்யப்பட்டுள்ளது.

எல்லா மாநிலங்களையும்விட தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட தொகைதான் மிககுறைவு. தமிழக சேதங்களை முழுமையாக மத்திய அரசாங்கத்திற்கு தெரிவிக்க தமிழக அரசுதான் தவறிவிட்டதா? அல்லது மத்திய அரசாங்கத்தால்தான் தமிழக நிலைமையை சரியாக புரிந்துக்கொள்ள முடியவில்லையா? என்பது புரியாதபுதிராக இருக்கிறது. இப்போது மட்டுமல்ல, ஒவ்வொரு இயற்கை சீற்றத்தின்போதும் தமிழ்நாட்டுக்கு இந்த நிலைதான். ஆனால், இந்தத்தொகை தற்காலிக சீரமைப்பு தொகைதான். நிரந்தர சீரமைப்புக்காக ஒவ்வொரு இனங்களிலும், தமிழக அரசு கோரிய நிவாரணதொகைகள் அந்தந்த அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். பொதுவாக இதுபோல அமைச்சகங்களுக்கு அனுப்பப்படும் கோரிக்கைகள் பெருமளவில் பலன் அளிப்பதில்லை. தமிழகத்திலுள்ள அந்தந்த துறைகளுக்கே அனுப்பி நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்வது வழக்கம். ஆனால் இந்தமுறை நமது பாதிப்பு மிகவும் அதிகம் என்றவகையில் பிரதமருக்கும், மத்திய அரசாங்கத்திற்கும், தமிழக அரசு மீண்டும் கோரிக்கைவிடுத்து அந்தந்த அமைச்சகங்களாவது நிரந்தர சீரமைப்புக்குரிய முழுத்தொகையை ஒதுக்க வலியுறுத்தவேண்டும். பாராளுமன்றத்தில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் குரலும் ஓங்கி ஒலிக்கவேண்டும்.

Next Story