வெற்றிவாகை சூடிய பா.ஜ.க.


வெற்றிவாகை சூடிய பா.ஜ.க.
x
தினத்தந்தி 5 March 2018 10:00 PM GMT (Updated: 2018-03-05T17:39:04+05:30)

நாட்டில் 15 மாநிலங்களில் பா.ஜ.க.வும், 6 மாநிலங்களில் பா.ஜ.க. இடம் பெற்றுள்ள கூட்டணி ஆட்சியும் நடந்து வருகிறது.

பிரதமர் நரேந்திரமோடியின் ஒரே குறிக்கோள், ‘காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்கவேண்டும்’ என்பதுதான். காங்கிரசை மட்டுமல்லாமல், எதிர்க்கட்சிகள் ஆளும் மற்ற மாநிலங்களிலும் பா.ஜ.க.வை ஆழமாக காலூன்றவைக்கும் அளவில் அரசியல் பணிகளை முடுக்கிவிட்டு வருகிறார். இந்த சூழ்நிலையில், நடந்துமுடிந்த நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த சனிக்கிழமை வெளியாகின. திரிபுராவில் கடந்த 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆட்சி செய்துகொண்டிருந்தது. கடந்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட பா.ஜ.க. வெற்றிபெறாத திரிபுரா மாநிலத்தில், இப்போது 59 இடங்களில், 45 இடங்களில், பா.ஜ.க. கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ளது. பா.ஜ.க. மட்டும் 35 இடங்களில் தனிப்பெரும்பான்மையாக வெற்றி பெற்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 14 இடங்களில்தான் வெற்றிபெற்று மிகப்பெரிய சரிவை சந்தித்துவிட்டது. இது பா.ஜ.க.வுக்கு மிகப்பெரிய வெற்றியாகும். இந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. 

மேகாலயா மாநிலத்தை எடுத்துக்கொண்டால், கடந்த 15 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. கடந்த தேர்தலில் பா.ஜ.க. ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை. இந்தத்தேர்தலில் மேகாலயாவில் எந்தக்கட்சியும் பெரும்பான்மை இடத்தை பெறவில்லை. மொத்தம் தேர்தல் நடந்த 59 இடங்களில், காங்கிரஸ் 21 இடங்களில் மட்டும் வெற்றிபெற்றுள்ளது. இதுவரையில் காலூன்ற முடியாத பா.ஜ.க. 2 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா தொடங்கி, இப்போது அவர் மகன் கான்ராடு சங்மா தலைமையில் நடக்கும் தேசிய மக்கள் கட்சி 19 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. அவர் தலைமையில் பா.ஜ.க. இடம்பெற்றுள்ள கூட்டணி 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவோடு ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க முடியவில்லை. இதுபோல, நாகாலாந்து மாநிலத்தில் நாகா மக்கள் முன்னணி, பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் இருந்தது. இந்தமுறை இங்கு 59 இடங்களில் பா.ஜ.க. 20 இடங்களில் போட்டியிட்டது. நாகா மக்கள் முன்னணியில் இருந்து விலகி, தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி தொடங்கியுள்ள நெய்பியு ரியோவுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.க. போட்டியிட்டது. நாகாலாந்தில் பா.ஜ.க. கூட்டணி 32 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவோடு ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை. 

நாகாலாந்து, மேகாலயா ஆகிய இருமாநிலங்களிலும் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் மாநிலங்களாகும். இந்த மாநிலங்களில் பா.ஜ.க. காலூன்ற முடியுமா? என்று எல்லோரும் சந்தேகப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் வேறுவிதமாக இருந்தன. இந்தி பேசும் மாநிலங்களில்தான் பா.ஜ.க. வெற்றிபெறும் என்ற கருத்தும் மாற்றப்பட்டுவிட்டது. இப்போது நாட்டில் 15 மாநிலங்களில் பா.ஜ.க.வும், 6 மாநிலங்களில் பா.ஜ.க. இடம் பெற்றுள்ள கூட்டணி ஆட்சியும் நடந்து வருகிறது. காங்கிரஸ் 3 மாநிலங்களிலும், புதுச்சேரியிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கேரளாவில் மட்டும் ஆட்சியில் இருக்கிறது. இந்த தேர்தல் முடிவுகள் நிச்சயமாக பா.ஜ.க.வுக்கு மகத்தான வெற்றியையும், காங்கிரசுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கும் பெரிய பின்னடைவையும் கொடுத்துள்ளது.

Next Story