‘கரிகாலன்’ புறப்பட்டு விட்டார்


‘கரிகாலன்’ புறப்பட்டு விட்டார்
x
தினத்தந்தி 6 March 2018 9:30 PM GMT (Updated: 6 March 2018 1:37 PM GMT)

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ திரைப்படத்துக்கான டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் ரஜினிகாந்த் நெல்லை தமிழில் பேசியிருக்கிறார்.

டிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ திரைப்படத்துக்கான டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் ரஜினிகாந்த் நெல்லை தமிழில் பேசியிருக்கிறார். ‘‘வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன். தில் இருந்தா மொத்தமா வாங்கலே’’ என்ற கரிகாலன் பாத்திரத்தில் நடிக்கும் ரஜினிகாந்த் வசனம் தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதை எல்லோருமே அரசியலோடுதான் தொடர்புபடுத்தி பார்க்கிறார்கள். தமிழக அரசியலில் ரஜினிகாந்தின் பயணம் கரிகாலன் சொல்வதுபோல, தனியாக நேற்று முன்தினம் தொடங்கிவிட்டது. தமிழக அரசியலில் ஜெயலலிதா மறைவுக்குப்பிறகும், கருணாநிதி உடல் நலக்குறைவாக இருக்கிறபோது ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருமே அரசியலுக்குள் காலெடுத்து வைத்துவிடுவார்கள் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. கமல்ஹாசன் ராமேசுவரத்தில் அப்துல்கலாம் வீட்டிலிருந்து தன் அரசியல் பயணத்தை தொடங்கிவிட்டார். ரஜினிகாந்தும் தன் ரசிகர்மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசும்போது, நேரடியாக பேசாமல் சூசகமாக பேசிக்கொண்டிருந்தார்.

‘ரஜினி நற்பணி மன்றம்’ என்ற பெயர், ‘ரஜினி மக்கள் மன்றம்’ என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. அதிலிருந்து அவர் பேச்சுகள் எல்லாம் அரசியலை சுற்றியே இருந்துவந்தது. இந்தநிலையில், நேற்று முன்தினம் சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் எம்.ஜி.ஆர். சிலையை திறந்துவைத்து தன் அரசியல் பயணத்தை தொடங்கிவிட்டார். அவர் பேச்சு முழுவதிலும் தனது அரசியல் எப்படி இருக்கும் என்பதை கோடிட்டு காட்டியிருக்கிறார். மற்ற அரசியல் கட்சிகளை சாடும்வகையில், ‘‘என் வேலையை நான் சரியாக செய்துகொண்டிருக்கிறேன். நீங்கள் உங்கள் வேலையை சரியாக செய்யவில்லையே. எங்கெங்கோ தப்பு நடக்கிறது, அதை எப்படி தடுப்பது என்று எனக்குத்தெரியும். மக்களுக்கு செய்யவேண்டிய கடமை இருக்கிறது. எனவேதான் அரசியலுக்கு வருகிறேன்’’ என்று பட்டவர்த்தனமாக தெரிவித்துவிட்டார்.

தன் கட்சியின் குறிக்கோளாக எம்.ஜி.ஆர். தந்த நல்லாட்சி, ஏழை மக்களுக்கான ஆட்சி, சாமானிய மக்களுக்கான ஆட்சி, நடுத்தர குடும்பங்களுக்கான ஆட்சி என்னாலும் கொடுக்கமுடியும் என்று தெரிவித்த அவர், ஆன்மிக அரசியல் என்றால் மதசார்புள்ள அரசியல் அல்ல என்பதை தெரிவிக்கும்வகையில் உண்மையான, நேர்மையான, வெளிப்படையான, சாதி–மத சார்பற்ற அறவழியில் நடப்பதுதான் ஆன்மிக அரசியல். தூய்மைதான் ஆன்மிகம் என்று தெளிவுபடுத்திவிட்டார். இனிமேல்தான் பார்க்கப்போகிறீர்கள் ஆன்மிக அரசியல் என்று சொன்ன அவர், அரசியலில் வெற்றிடம் இருப்பது உண்மைதான். தமிழகத்திற்கு இப்போது ஒரு தலைமை தேவை. ஒரு தலைவன் தேவை. அந்த இடத்தை நிரப்ப நான் வருகிறேன். ஐயா நம்மபக்கம் அந்த ஆண்டவனே இருக்கிறான் என்று உறுதிபட கூறிவிட்டார். ஒருபக்கம் எம்.ஜி.ஆர். தொண்டர்களை தன்பக்கம் இழுக்கும் முயற்சியில் அவரது பேச்சு இருந்தாலும், மறுபக்கம் இளைஞர்களை குறிப்பாக மாணவர்களை கவரும் வகையிலும், மொத்தத்தில் அனைத்துதரப்பு மக்களையும் தொடமுயற்சிக்கும் வகையிலும் இருந்தது. ஆங்கிலம் படிப்பதின் முக்கியத்துவத்தை இன்றைய இளைஞர்கள் மனதில் பதித்துவிட்டார். ரஜினிகாந்த் புறப்பட்டுவிட்டார். இனி அவரது உரை, அறிக்கைகளெல்லாம் நேரடி அரசியலாகத்தான் இருக்கும். விரைவில் அவரது கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிப்பதைத்தான் எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். அந்தநாளும் வெகுதூரத்தில் இல்லை.

Next Story