தள்ளிப்போட முயற்சியா?


தள்ளிப்போட முயற்சியா?
x
தினத்தந்தி 7 March 2018 9:30 PM GMT (Updated: 2018-03-07T19:44:06+05:30)

கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் பொதுப்பிரச்சினை என்று வந்துவிட்டால், அங்கே அரசியல் வேறுபாடுகள் மறந்து போய்விடுகிறது.

ர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் பொதுப்பிரச்சினை என்று வந்துவிட்டால், அங்கே அரசியல் வேறுபாடுகள் மறந்து போய்விடுகிறது. எல்லோரும் ஒன்றாக இணைந்து நிற்கிறார்களே! இதுபோன்று ‘இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!’ என்றநிலை தமிழ்நாட்டிலும் ஏற்படாதா? என்ற தமிழக மக்களின் கவலை காவிரி பிரச்சினையில் தீர்ந்துவிட்டது. தமிழ்நாட்டுக்கும், கர்நாடகாவுக்கும் காவிரிநீர் பங்கீடு தொடர்பாக தாவா இருந்து வருகிறது. தமிழக மக்களின் நீண்டகால கோரிக்கையான ‘காவிரி மேலாண்மை வாரியம்’ உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி, மார்ச் 30–ந்தேதிக்குள் அமைக்கப்படும் என்று உறுதியாக நினைத்திருந்த நேரத்தில், அதுதொடர்பான எந்த ஆயத்த பணிகளும் நடத்தாமல், சென்னை வந்திருந்த மத்திய மந்திரி நிதின்கட்காரி மழுப்பலாக பதில் சொன்ன நிலையும் தமிழக மக்களுக்கு பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தின் கோரிக்கையை வலுப்படுத்த பல ஆண்டுகளுக்குப்பிறகு அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும் ஒன்றாக அமர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கைப் பற்றி ஆலோசித்தார்கள். முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சர் ஆகியோர் எதிர்க்கட்சி தலைவருடன் டெலிபோனில் பேசிவருகிறார்கள்.

பாராளுமன்றத்தில் அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்கள் ஒன்றாக இணைந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோ‌ஷம் எழுப்பி பாராளுமன்றத்தை முடங்கச் செய்யவும், பாராளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு அ.தி.மு.க., தி.முக., கம்யூனிஸ்டு கட்சிகளின் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதும் நிச்சயமாக பாராட்டுக்கும், வரவேற்புக்கும் உரியது. இந்த பிரச்சினையில் பா.ஜ.க. உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தால் இன்னும் பெரிய மனமகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும். தமிழ்நாட்டில் இருந்து அனைத்துக்கட்சி தலைவர்களும், முதல்–அமைச்சர் தலைமையில் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு இன்னும் கொடுக்கப்படவில்லை. இந்தநிலையில், மத்திய அரசாங்கம் இந்த தீர்ப்பு குறித்து ஒரு முடிவெடுக்க தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் கூட்டத்தை நாளை டெல்லியில் மத்திய நீர்வள அமைச்சக செயலாளர் தலைமையில் கூட்டி இருக்கிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து விவாதிக்க இந்தக்கூட்டம் கூட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. எப்படியிருந்தாலும், தமிழகத்தின் சார்பில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கத்தான் வற்புறுத்தப்போகிறோம். கர்நாடகா முடியாது என்று சொல்லத்தான் போகிறது. இதில் ஒருமித்த கருத்து வரப்போவதில்லை. இந்தக்கூட்டம் முடிந்தவுடன், மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின்கட்காரி தலைமையில் தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி, கேரளா முதல்–மந்திரிகள் கூட்டத்தை கூட்ட முடிவெடுத்து இருக்கிறார்கள். அந்தக்கூட்டத்தை கூட்டினாலும் இதே நிலைமைதான் நீடிக்கும். இப்படி முடிவெடுக்க முடியாமல் இழுத்துக்கொண்டு போவதைவிட, உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றுவதுதான் உடனடியாக மத்திய அரசாங்கம் எடுக்கவேண்டிய நடவடிக்கையாகும். இப்படி ஏற்கனவே பல கூட்டங்கள் நடந்து முடிவெடுக்க முடியாமல்தானே, நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியது. மே மாதம் கர்நாடக தேர்தல்வரை இந்த பிரச்சினையை இழுத்தடிக்க மத்திய அரசாங்கம் முயற்சிக்கிறதோ? என்ற சந்தேகம் மக்களுக்கு எழாமல் இருக்க வேண்டும் என்றால், உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி, உடனடியாக மார்ச் 30–ந்தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவேண்டுமே தவிர, இப்படி முடிவு காணமுடியாத கூட்டங்களை நடத்திக்கொண்டிருப்பதில் அர்த்தமே இல்லை.

Next Story