போலீஸ் துறையில் மாற்றம்


போலீஸ் துறையில் மாற்றம்
x
தினத்தந்தி 9 March 2018 9:30 PM GMT (Updated: 9 March 2018 1:02 PM GMT)

இந்த வாரத்தில் தமிழக காவல்துறையில் பெரிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

ந்த வாரத்தில் தமிழக காவல்துறையில் பெரிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம், பாபநாசம் பகுதியைச்சேர்ந்த ராஜா என்பவர் 3 மாத கர்ப்பிணியான தன் மனைவி உஷாவை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு, மாலை 6.30 மணியளவில் துவாக்குடி சுங்கசாவடி அருகே சென்றுகொண்டிருந்தபோது, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் அந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தும்படி கூறி அவர் நிறுத்தாமல் போனார் என்பதற்காக, மோட்டார் சைக்கிளில் விரட்டிச்சென்று 3 முறை எட்டி உதைத்ததால், மோட்டார் சைக்கிளில் இருந்து இருவரும் கீழே விழுந்தனர். இதில் உஷா மரணமடைந்த செய்தி தமிழ்நாடு முழுவதும் காவல்துறை மீது ஒரு கோபக்கனலை ஏற்படுத்தியது.

ஒருபக்கம் பொதுமக்களின் அதிருப்திக்கு காவல்துறை ஆளாகிவிட்டது என்று பேசினாலும், மறுபக்கம் காவல்துறையைச் சேர்ந்த இளம்வயதுள்ள 2 பேர் தற்கொலை செய்துகொண்டது கவலையடையச் செய்துள்ளது. கடந்த 4–ந்தேதி மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா சமாதியில் அருண்ராஜ் என்ற 25 வயதுள்ள ஆயுதப்படை போலீஸ்காரர் அதிகாலை 5 மணியளவில் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். 7–ந்தேதி நள்ளிரவில் சென்னை அயனாவரம் போலீஸ் நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றிய 33 வயது எம்.டெக். பட்டதாரி சதீஷ்குமார் கைத்துப்பாக்கியால் தன் தலையில் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இருவருமே இளம்வயதில் தங்கள் உயிரை மாய்த்து இருக்கிறார்கள். போலீசார் தற்கொலை என்பது தமிழ்நாட்டில் அதிகமாகிக்கொண்டு இருக்கிறது. போலீசார் தற்கொலை செய்வதற்கும், இதுபோன்ற அத்துமீறல்களுக்கும் பல காரணங்கள் கூறப்பட்டாலும், மனஅழுத்தம், பணிச்சுமை, மனச்சோர்வு, ஓய்வு இல்லாமல் வேலைபார்த்த களைப்பு, லீவு கிடைக்காத காரணங்கள், அதிகாரிகளின் கண்டிப்பு, குடும்ப பிரச்சினைகள் என்று பல காரணங்கள் சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் போராட்டங்கள், மறியல்கள், குற்றங்கள் எண்ணிக்கையெல்லாம் அதிகமாக இருப்பதால் போலீசாருக்கு ஓய்வு இல்லாமல் வேலை செய்யவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. போலீசாரின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும்.

போக்குவரத்து போலீசாரை எடுத்துக்கொண்டால், அவர்கள் பணி போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதுதான். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் இவ்வளவு அபராதம் வசூலிக்கவேண்டும் என்று ‘கோட்டா’ நிர்ணயிப்பதால் இவ்வளவு அத்துமீறல் என்று கூறப்படுகிறது. நவீன தொழில்நுட்பத்தில் ஒருவர் வண்டியை நிறுத்தாமல் சென்றால் விரட்டிச்சென்று பிடிக்கவேண்டும் என்பது அல்ல, அந்த வாகன எண்ணை குறித்துக்கொண்டு வயர்லெசில் அடுத்தாற்போல் நிற்கும் அதிகாரியை நிறுத்தச்சொல்லலாம். அவர்களுக்கு நோட்டீசை அனுப்பலாம். பல மாவட்டங்களில் ‘கண்ட்ரோல் ரூம்’ என்று கூறப்படும் கட்டுப்பாட்டு அறை சரியாக இயங்கவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. இப்போதுள்ள இளம் போலீசார் சினிமாவில் வரும் போலீஸ் அதிகாரிகளை கற்பனை செய்துகொண்டு, அதுபோல கரடு முரடாக நடந்துகொள்கிறார்கள் என்ற குறையும் இருக்கிறது. போலீசாருக்கு பணிச்சுமை இல்லாமல் தேவையான ஓய்வும், விடுமுறையும் அளிக்கப்படவேண்டும். அவர்களுக்கான குறைதீர்ப்பு கூட்டங்களை அதிகாரிகள் அவ்வப்போது நடத்தவேண்டும். இரவுப்பணி பார்ப்பவர்கள் கண்டிப்பாக பகலில் ஓய்வெடுக்கவேண்டும். அவ்வப்போது அவர்களை உற்சாகப்படுத்தும் வகையிலான, மனரீதியிலான பயிற்சிகளை அளிக்கவேண்டும். இப்படி போலீஸ் துறையில் உடனடியாக ஒரு பெரிய மாற்றம் கொண்டுவரவேண்டும்.

Next Story