காவிரி மேலாண்மை வாரியம்தான் வேண்டும்


காவிரி மேலாண்மை வாரியம்தான் வேண்டும்
x
தினத்தந்தி 11 March 2018 9:30 PM GMT (Updated: 2018-03-11T17:26:52+05:30)

காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு இறுதியானது என்பது தமிழக மக்களின் நம்பிக்கை.

காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு இறுதியானது என்பது தமிழக மக்களின் நம்பிக்கை. நடுவர்மன்ற தீர்ப்பில் 192 டி.எம்.சி. தண்ணீர் வழங்கவேண்டும் என்று கூறப்பட்டநிலையில், உச்சநீதிமன்றத்தின் இறுதித்தீர்ப்பில் 14.75 டி.எம்.சி. தண்ணீரை குறைத்து, ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீரை வழங்கவேண்டும் என்று கூறியது சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தினாலும், இந்த அளவு தண்ணீரையாவது குறையாமல் கொடுப்பதற்கு காவிரி நடுவர்மன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையிலான அமைப்பை (அதாவது காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழுவை) மத்திய அரசாங்கம் 6 வாரங்களுக்குள் அமைக்கவேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது ஓரளவு ஆறுதலை அளித்தது.

பிப்ரவரி 16–ந்தேதி இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், 6 வாரங்கள் என்றால் மார்ச் 30–க்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசாங்கம் அமைத்துவிடும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், மத்திய அரசாங்கம் திடீரென கடந்த 9–ந்தேதி இதுதொடர்பாக மத்திய நீர்வள அமைச்சகம் சார்பில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநில தலைமைச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டுவதாக அறிவித்திருந்தது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டியநிலையில், இது பின்னுக்கு இழுக்கும் முயற்சியோ என்று மக்கள் சந்தேகப்பட்டாலும், இந்தக்கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர். தமிழ்நாட்டின் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. ஆனால் இந்தக்கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபேந்திரபிரசாத் சிங், உச்சநீதிமன்ற தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தையே குறிப்பிடப்படவில்லை. செயல்திட்டம் என்ற வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, எந்தமாதிரியான செயல்திட்டத்தை உருவாக்குவது என்பதுபற்றி முடிவு செய்யவேண்டும். இரண்டு வகையான செயல்திட்ட வடிவமைப்புகள் உள்ளன. ஒன்று பக்கராநங்கல் மேலாண்மை வாரியம், மற்றொன்று நர்மதா கட்டுப்பாடு ஆணையம் இதில் எந்தவகையான அமைப்பை உருவாக்குவது என அடுத்தக்கூட்டத்தில் முடிவுசெய்யலாம். இதுகுறித்து 4 மாநில அரசுகளும் எழுத்துப்பூர்வமான கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்று சொல்லி, இல்லாத ஊருக்கு போகாத வழியை காட்டியிருக்கிறார்.

ஏற்கனவே கர்நாடகத்தில் இந்த தீர்ப்பு குறித்து உச்சநீதிமன்றத்தில் ஒரு சீராய்வு மனு தாக்கல் செய்ய முயற்சி நடந்துவருகிறது. முன்னாள் பிரதமர் தேவகவுடா, மத்திய நீர்வள மந்திரி நிதின்கட்காரியே கர்நாடக மாநிலத்தை இவ்வாறு ஒரு சீராய்வு மனு தாக்கல் செய்ய ஆலோசனை வழங்கியதாக கூறியிருக்கிறார். ஆக, மக்களின் நலனை பின்னுக்கு தள்ளிவிட்டு அரசியல் மேலோங்கிவிட்டதோ! என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது. மத்திய அரசாங்கத்துக்கு, அனைத்து மாநிலங்களும் பிள்ளைகள்தான். கர்நாடகத்தில் தேர்தல் வருகிறது என்பதற்காக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கான முயற்சியை அதுவரை தள்ளிப்போட மத்தியஅரசாங்கம் முயற்சிக்கக்கூடாது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தைத்தான் அமைக்கவேண்டுமே தவிர, இப்படி ரப்பராக இழுத்துக்கொண்டே போவது தமிழக மக்களை ஓரங்கட்டுவது போலத்தான் ஆகும்.

Next Story