நேரடி கொள்முதலில் பயறு வகைகள்


நேரடி கொள்முதலில் பயறு வகைகள்
x
தினத்தந்தி 15 March 2018 9:30 PM GMT (Updated: 2018-03-16T02:01:45+05:30)

தமிழகத்தின் பட்ஜெட்டை நேற்று சட்டசபையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

மிழகத்தின் பட்ஜெட்டை நேற்று சட்டசபையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழக அரசு தொடர்ந்து வரியில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்வதில் அக்கறை கொண்டிருப்பதுபோலவே, இந்த ஆண்டு பட்ஜெட்டும் வரியில்லா பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களை பாதிக்காதவகையில், வரியில்லா பட்ஜெட் என்று ஒருபக்கம் வரவேற்றாலும், மற்றொருபக்கம் அரசின் வருவாய்க்குமேல் செலவுகள் அதிகரித்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், எப்படி பொருளாதார வளர்ச்சி காணப்போகிறது என்ற அச்சமும் ஏற்படுகிறது.

அத்திக்கடவு-அவினாசி குடிநீர் வழங்கல் மற்றும் நீர்ப்பாசன திட்டத்தை ரூ.1,789 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த அரசு விரைவில் அனுமதி வழங்க உள்ளது என்ற அறிவிப்பு நிச்சயமாக கொங்குமண்டல விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் ஒரு மகிழ்ச்சிகரமான அறிவிப்பாகும். இந்த பட்ஜெட்டில் சில புதிய அறிவிப்புகள் இருப்பதை பாராட்டித்தான் ஆகவேண்டும். நெல் கொள்முதல் செய்வதுபோன்று, குறைந்தபட்ச ஆதாரவிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலமாக விவசாயிகளிடமிருந்து துவரை, உளுந்து மற்றும் பச்சைப்பயறு போன்ற பயறு வகைகளை இந்த ஆண்டு முதல் அரசு நேரடியாக கொள்முதல் செய்யும் என்ற அறிவிப்பு நிச்சயமாக விவசாயிகளுக்கு நன்மைபயக்கும் அறிவிப்பாகும். கரும்பு விலையை பொறுத்தமட்டில் உடனடியாக வருவாய் பகிர்வுநிலை நிர்ணயம் முறைக்கு மாற அரசு முடிவுசெய்துள்ளது. ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக மீனவர்களுக்கு மானியவிலையில் உயர் அதிர்வெண் தொடர்பு கருவிகளை அரசு படிப்படியாக வழங்கும் என்ற அறிவிப்பும், புதிய மீன்பிடி துறைமுகங்கள், மீன்பிடி இறங்குதளங்கள் அமைப்பதற்கான அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கதாகும். முதல் தலைமுறை தொழில்முனைவோரை ஊக்கப்படுத்த தற்போது வழங்கப்படும் அதிகபட்ச கடனின் உச்சவரம்பு ரூ.1 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக உயர்த்தப்படும் என்பது புதிதாக தொழில் தொடங்குவோரை ஊக்கப்படுத்தும்.

அரசின் வருவாய் கணக்கில் வரவு ரூ.1 லட்சத்து 76 ஆயிரத்து 251 கோடியே 48 லட்சம் என்றநிலையில், செலவு ரூ.1 லட்சத்து 93 ஆயிரத்து 742 கோடியே 6 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் அரசு ஊழியர்கள் சம்பளத்திற்காக மட்டும் ரூ.52 ஆயிரத்து 171 கோடியும், ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகால பலன்கள் செலவீனத்துக்காக ரூ.25 ஆயிரத்து 362 கோடி போய்விடும். மற்றொரு பெரிய செலவாக மானியம் மற்றும் உதவித்தொகைகளுக்காக ரூ.75 ஆயிரத்து 723 கோடி செலவாகிவிடும். வாங்கிய கடன்களுக்கு வட்டியாக மட்டும் ரூ.29 ஆயிரத்து 624 கோடி கட்டவேண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆக, இந்த செலவுகளுக்கு மட்டும் ரூ.1 லட்சத்து 82 ஆயிரத்து 880 கோடி போய்விட்டால், எங்கே வளர்ச்சித்திட்டங்களுக்கு பணத்தை ஒதுக்கமுடியும்?, இன்னமும் கடன் வாங்குவதைதவிர, வேறு வழியில்லை. வருவாய் பற்றாக்குறை ரூ.17 ஆயிரத்து 491 கோடியே 58 லட்சம் என்றால், நிதிப்பற்றாக்குறை ரூ.44 ஆயிரத்து 481 கோடியாக இருக்கிறது. அரசு கூறியபடி, இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சியை குறிக்கோளாகக்கொண்டு எந்தெந்தவகையில் வருவாயை பெருக்கலாம். எந்தெந்தவகையில் செலவுகளை குறைக்கலாம் என்று தீவிரமாக ஆலோசித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாயத்தை இந்த பட்ஜெட் தெள்ளத்தெளிவாக காட்டிவிட்டது.

Next Story