பா.ஜ.க.வுக்கு எதிராக புதிய கூட்டணி


பா.ஜ.க.வுக்கு எதிராக புதிய கூட்டணி
x
தினத்தந்தி 16 March 2018 9:30 PM GMT (Updated: 2018-03-17T00:53:46+05:30)

2019–ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது.

2019–ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இன்னும் சரியாக ஒரு ஆண்டு மட்டுமே இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் இப்போதே தங்களை தயார்படுத்திக்கொள்வதற்கான வேலைகளில் இறங்கிவிட்டனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, எதிர்க்கட்சி தலைவர்களுக்கு தனது வீட்டில் ஒரு விருந்து அளித்தார். வழக்கமாக பா.ஜ.க. அரசுக்கு எதிராக அவர் கூட்டும் ஆலோசனை கூட்டங்களில் 17 கட்சிகள்தான் வருவது வழக்கம். ஆனால், கடந்த 13–ந்தேதி கூட்டிய கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, ராஷ்ட்ரீய ஜனதாதளம் உள்பட 20 கட்சித்தலைவர்கள் கலந்துகொண்டது எல்லோருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. 20 கட்சித்தலைவர்கள் ஒன்றாக உட்கார்ந்து பேசுகிறார்கள் என்றால், தேர்தலில் இது எதிரொலிக்குமோ? என்று அரசியல் உலகில் சந்தேகமும் எழுந்துள்ளது.

இந்த நிலையில், உத்தரபிரதேசத்திலும், பீகாரிலும் பாராளுமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. பொதுவாக 80 பாராளுமன்ற தொகுதிகளைக்கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் வெற்றிபெறும் கட்சிதான் மத்தியில் ஆட்சி அமைக்கும் என்று ஒரு கருத்து உண்டு. 2014–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 73 இடங்களில் வெற்றிப்பெற்றிருந்தது. உத்தரபிரதேச மாநில முதல்–மந்திரியாக இருக்கும் யோகி ஆதித்யநாத், துணை முதல்–மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோர் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகித்தநிலையில், அதை ராஜினாமா செய்துவிட்டுதான் மாநில அரசு பொறுப்பை ஏற்றனர். அந்த இருதொகுதிகளிலும் தேர்தல் நடந்தது. அதுபோல, பீகாரிலும் இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தல்களில் எப்படியும் வெற்றி பெற்றிடவேண்டும் என்ற நோக்கில் மிகுந்த பரபரப்புக்கிடையே அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தின. உத்தரபிரதேசத்தில் பெரிய அதிசயம் நடந்தது. சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் எதிரும் புதிருமான கட்சிகள். 1993–ல் மட்டும் பா.ஜ.க.வை தோற்கடிக்க ஒன்றிணைந்தன. இப்போது இந்த தேர்தலில் அந்த கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிட்டன. யோகி ஆதித்யநாத் 5 முறை தொடர்ந்து வெற்றிபெற்ற கோரக்பூர் தொகுதி 1989–லிருந்தே பா.ஜ.க.வின் கோட்டையாக இருந்து வந்தது. அதுபோல, துணை முதல்–மந்திரி வெற்றிபெற்ற புல்பூர் தொகுதியும் பா.ஜ.க.வின் பலமுள்ள தொகுதியாக கருதப்பட்டது. இந்த இருதொகுதிகளிலும் சமாஜ்வாடி வெற்றிபெற்றது. காங்கிரஸ் டெபாசிட் இழந்தது. இதுபோல, பீகார் மாநிலத்தில் அராரியா தொகுதியில் நடந்த தேர்தலில் லாலுபிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதாதளமும் வெற்றிபெற்றுள்ளது. தான் தோற்றாலும் பரவாயில்லை, இந்த தேர்தலில் பாஜ.க. தோற்கடிக்கப்பட்டது என்ற நோக்கில், இந்த வெற்றிகுறித்து காங்கிரஸ் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளது. இந்தி பேசும் மாநிலங்களிலேயே பா.ஜ.க. தோல்வியடைந்ததைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளுக்கிடையே ஒரு பெரிய விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது. அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்பதை உண்மையாக்கும் வகையில், 2019–ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக புதிய கூட்டணி உருவாகும் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. பா.ஜ.க.வும் இனி வீறுகொண்டு எழுந்து மக்கள் ஆதரவை பெறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Next Story