தெலுங்குதேசம் உறவு முறிந்தது


தெலுங்குதேசம் உறவு முறிந்தது
x
தினத்தந்தி 18 March 2018 9:30 PM GMT (Updated: 18 March 2018 5:15 PM GMT)

அரசியலில் ஒரு கட்சிக்கு ஏதாவது சறுக்கல் வந்தால், அதைத்தொடர்ந்து பல பாதிப்புகள் வந்துகொண்டுதான் இருக்கும்.

ரசியலில் ஒரு கட்சிக்கு ஏதாவது சறுக்கல் வந்தால், அதைத்தொடர்ந்து பல பாதிப்புகள் வந்துகொண்டுதான் இருக்கும். பா.ஜ.க.வி.ன் முக்கியக்கூட்டணி கட்சியான தெலுங்குதேசம் கட்சி, தன்உறவை முறித்துக்கொண்டது. அடுத்த ஆண்டு ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலோடு, சட்டசபை தேர்தலும் நடக்க இருக்கிறது. 2014–ம் ஆண்டு ஆந்திரா என்றும், தெலுங்கானா என்றும் இரண்டு மாநிலங்களாக ஒன்றுபட்ட ஆந்திரா பிரிக்கப்பட்டது. ஐதராபாத்தைச் சுற்றித்தான் அனைத்து தொழில்நிறுவனங்களும் இருக்கின்றன. ஐதராபாத் தெலுங்கானாவுக்குச் செல்லும்போது ஆந்திராவுக்கு வருமான இழப்பு ஏற்படும். எனவே, ஆந்திராவுக்கு ‘சிறப்பு மாநில அந்தஸ்து’ வழங்கப்பட்டு, கூடுதல் உதவிகள் அளிக்கப்படும் என்று அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் உறுதி அளித்தார். அதன் தொடர்ச்சியாக, தேர்தலுக்குப்பிறகு தொடர்ந்து சந்திரபாபு நாயுடு தங்கள் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படவேண்டும் என்று கோரி வந்தார்.

ஆனால் 14–வது நிதிக்குழு எந்த மாநிலத்திற்கும் சிறப்பு அந்தஸ்து வழங்க அனுமதிக்கவில்லை என்று திட்டவட்டமாக மத்திய நிதிமந்திரி அருண்ஜெட்லி அறிவித்துவிட்டார். ஆனால் ஆந்திராவுக்கு, மத்திய அரசாங்கம் சிறப்பு உதவிகளை வழங்கும். அந்த மாநிலத்தில் நிறைவேற்றப்படும் மத்திய அரசு திட்டங்களில் 90 சதவீத செலவை மத்திய அரசாங்கம் பங்கிட்டுகொள்ளும். வருவாய் பற்றாக்குறைக்காக ரூ.1,600 கோடி நிதிஉதவி வழங்கும் என்று சொன்னாலும், சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்பதில் சந்திரபாபு நாயுடு உறுதியாக இருக்கிறார். இந்தநிலையில், கடந்த 8–ந்தேதி மத்திய மந்திரி சபையில் அங்கம்வகித்த தெலுங்குதேசம் மந்திரிகள் ராஜினாமா செய்தார்கள். பதிலுக்கு பதிலாக ஆந்திர மந்திரி சபையில் அங்கம்வகித்த பா.ஜ.க.வின் 2 மந்திரிகள் ராஜினாமா செய்தனர். அமைச்சரவையில் இருந்து விலகினாலும், கூட்டணியில் தொடருகிறோம் என்று அப்போது சந்திரபாபு நாயுடு கூறியிருந்தார். சில தினங்களுக்கு முன்பு பாராளுமன்றத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. முதலில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்போம் என்று சொன்ன சந்திரபாபு நாயுடு, தெலுங்குதேசம் சார்பில் தனியாக நோட்டீஸ் கொடுத்துவிட்டார்.

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு 54 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தேவை. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆதரவு கொடுக்கும் என்ற நம்பிக்கையில் கடந்த வெள்ளிக்கிழமை தெலுங்குதேசம் தீர்மானத்தை முன்மொழிய முயற்சித்தது. அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று கூறி அ.தி.மு.க. உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை சுற்றி நின்றுகொண்டு கோ‌ஷம் எழுப்பிக்கொண்டு இருந்தனர். இதுபோல, தெலுங்கானா ராஷ்டிரீய சமிதி உறுப்பினர்களும் தங்கள் கோரிக்கைக்காக கோ‌ஷம் எழுப்பிக்கொண்டு இருந்தனர். அவை அமைதியாக இருந்தால்தான் என்னால் தீர்மானத்தை எடுத்துக்கொள்ளமுடியும் என்று சபாநாயகர் கூறி தீர்மானத்தை எடுத்துக்கொள்ளவில்லை. இன்று அவை அமைதியாக நடக்குமா? நம்பிக்கையில்லா தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படுமா? அல்லது நிதி மசோதாக்களெல்லாம் நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில், நாள் குறிப்பிடப்படாமல் அவை ஒத்திவைக்கப்பட்டுவிடுமா? என்ற சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் இருக்கிறது. பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவு இருப்பதால், நம்பிக்கையில்லா தீர்மானம் எடுத்துக்கொண்டாலும் தோற்கடிக்கப்படுவது உறுதி. ஆனால், 4 ஆண்டுகளாக இருந்த கூட்டணி முறிந்துவிட்டதுதான் அரசியலில் பெரிய திருப்பம்.

Next Story