தெற்கு தேய்கிறதா?


தெற்கு தேய்கிறதா?
x
தினத்தந்தி 19 March 2018 10:00 PM GMT (Updated: 19 March 2018 11:54 AM GMT)

‘‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’’ என்ற கருத்தை இப்போது தென்மாநில முதல்வர்கள் எல்லோரும் பேசத்தொடங்கி விட்டனர்.

றைந்த பேரறிஞர் அண்ணாவின் பேச்சாற்றல் காலம்காலமாக என்றென்றும் மறக்க முடியாதது. அவருடைய பேச்சுகள் எல்லாம் கேட்பதற்கும் சுவையாக இருக்கும். அதேநேரம் சிந்திக்கவும் வைக்கும். அந்தவகையில், அந்தக்காலங்களில் அவர், ‘‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’’ என்பார். அதே கருத்தைத்தான் இப்போது தென்மாநில முதல்வர்கள் எல்லோரும் பேசத்தொடங்கி விட்டனர். கர்நாடக முதல்–மந்திரி சித்தராமையா ஒரு கட்டுரையில், சரித்திரகாலம் தொட்டு வடமாநிலங்களின் வளர்ச்சிக்கு தென்மாநிலங்கள்தான் நிதி உதவி செய்து வருகின்றன. உத்தரபிரதேசம் மாநிலம், மத்திய அரசாங்கத்திற்கு 1 ரூபாய் வரி வசூலித்துக் கொடுத்தால், 1 ரூபாய் 79 காசு மத்திய அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொள்கிறது. ஆனால், கர்நாடக மாநிலம், மத்திய அரசாங்கத்திற்கு 1 ரூபாய் வரியை வசூலித்துக் கொடுத்தால், 47 காசுதான் திரும்பப் பெறுகிறது என்று எழுதியிருக்கிறார். அதேபோல, சமீபத்தில் மத்திய அரசாங்கத்திற்கு எதிராக போர்க்குரல் எழுப்பிவரும் ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபுநாயுடு சட்டசபையில், தென்மாநிலங்கள் அதிகளவில் மத்திய அரசாங்கத்திற்கு வரியை வசூலித்துக் கொடுக்கிறது. ஆனால், அந்தப்பணத்தை வைத்துக் கொண்டு வடமாநிலங்களுக்கு, மத்திய அரசாங்கம் அதிகமாக செலவழித்து வருகிறது. இந்தப் போக்கை மத்திய அரசாங்கம் மாற்றி, தென்மாநிலங்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று பேசியிருக்கிறார்.

தமிழக பட்ஜெட்டிலும் வெளிப்படையாக இல்லாவிட்டாலும், இந்தக்குரல் எதிரொலித்து விட்டது. 14–வது நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி, மாநிலங்களுக்கு இடையேயான மத்திய வரிகளில் தமிழ்நாட்டுக்கான பங்கு 4.969 சதவீதத்திலிருந்து 4.023 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால், மாநிலத்தின் நிதிஆதாரங்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் திட்டங்களுக்கு, தமிழக அரசு தன் சொந்த வருவாயிலிருந்து கூடுதலாக செலவிட வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 15 சதவீத அளவில் மத்திய அரசின் வருவாய் அதிகரிக்கிற நிலையில், மத்திய வரிகளில் மாநிலங்களுக்கான பகிர்வும் அதே அளவில் அதிகரிக்க வேண்டியது அவசியம். அனைத்திந்திய அளவில் சராசரியாக 173 சதவீத உயர்வை மாநிலங்கள் பெற்றுள்ளன. ஆனால், தமிழ்நாட்டிற்கு 121 சதவீத உயர்வே கிடைத்துள்ளது. தமிழ்நாடு பெற்று வந்த அளவிலேயே நிதி பகிர்வு பெற்று வந்த மராட்டியம் 191 சதவீத உயர்வையும், ஒடிசா 166 சதவீத உயர்வையும், ராஜஸ்தான் 157 சதவீத உயர்வையும் பெற்றுள்ளது. தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ள 121 சதவீத உயர்வு கூட நிதிக்குழுவின் பரிந்துரைதானே அன்றி, தமிழ்நாடு இதைவிட குறைவிலான அளவிலே நிதிஉதவி பெறுகிறது. 

இதுபோல, பல இனங்களில் தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதியை சரிசெய்யவே சிறப்பு உதவி மானியம் வழங்க தனிப்பட்ட ஒதுக்கீடு அளிக்குமாறு மத்திய அரசாங்கத்தை தமிழ்நாடு வலியுறுத்தி வருகிறது. ஆனால், மத்திய அரசு சாதகமான பதில் எதுவும் இதுவரை அளிக்கவில்லை என்பது போன்ற பல கருத்துகள் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. மத்திய அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில், நிதி ஒதுக்கீடு தமிழ்நாட்டுக்கு குறைந்துவிட்டது. தமிழ்நாட்டின் பல கோரிக்கைகள் மத்திய அரசாங்கத்தால் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. உச்சநீதிமன்றம் விதித்த கெடுவின்படி, இன்னும் 10 நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். ஆந்திராவிலும், கர்நாடகாவிலும் வெளிப்படையாக தாங்கள் ஓரம்கட்டப்படுவதாக வரும் கருத்துகள், தமிழ்நாட்டிலிருந்தும் வராமல் இருக்க வேண்டுமென்றால், மத்திய அரசாங்கம் உடனடியாக தமிழ்நாட்டின் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

Next Story