காமராஜர், அண்ணா பெயர் மறையக்கூடாது


காமராஜர், அண்ணா பெயர் மறையக்கூடாது
x
தினத்தந்தி 21 March 2018 9:30 PM GMT (Updated: 2018-03-21T18:34:59+05:30)

மறைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு பிடித்த பாடல் அவர் நடித்த ‘மன்னாதி மன்னன்’ படத்தில் அவர் பாடுவதுபோன்று படமாக்கப்பட்ட, ‘அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிடர் உடமையடா...’ என்ற பாடலாகும்.

றைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு பிடித்த பாடல் அவர் நடித்த ‘மன்னாதி மன்னன்’ படத்தில் அவர் பாடுவதுபோன்று படமாக்கப்பட்ட, ‘அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிடர் உடமையடா...’ என்ற பாடலாகும். அவர் காரில் பயணம் செய்யும்போது, இந்த பாடல் கேசட்டை அடிக்கடி போட்டுக்கேட்பார். இந்த பாடலில் அவருக்கு பிடித்தவரிகள் எதுவென்றால், ‘வாழ்ந்தவர் கோடி... மறைந்தவர் கோடி... மக்களின் மனதில் நிற்பவர் யார்’ என்ற அருமையான தத்துவங்களை கொண்ட வரிகள்தான். இந்த பாடலுக்கேற்ப, தமிழ்நாட்டில் பெரியார், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். போன்ற பல தலைவர்கள் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். அவர்கள் பெயர் காலத்தால் அழியாமல் இருக்க வேண்டுமென்றால், முக்கிய இடங்களுக்கு அவர்களது பெயரை சூட்டுவதுதான். அந்தவகையில், இதுபோன்ற தலைவர்கள் பெயர்கள் பல விமான நிலையங்களுக்கு சூட்டப்பட்டுள்ளன. டெல்லி விமான நிலையத்துக்கு இந்திராகாந்தி பெயரும், ஐதராபாத் விமான நிலையத்துக்கு ராஜீவ்காந்தி பெயரும், வாரணாசி விமான நிலையத்துக்கு லால்பகதூர் சாஸ்திரி பெயரும், புவனேஸ்வரம் விமான நிலையத்துக்கு பிஜூ பட்நாயக் பெயரும், கொல்கத்தா விமான நிலையத்துக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரும் சூட்டப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் 1990–ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின்போது முதல்–அமைச்சர் கருணாநிதியின் முயற்சியால் சென்னை பன்னாட்டு விமான முனையத்துக்கு அண்ணாவின் பெயரும், உள்நாட்டு விமான முனையத்துக்கு காமராஜர் பெயரும் சூட்டப்பட்டது. இந்த பெயரிலேயே இந்த விமான முனையங்கள் இயங்கிக் கொண்டிருப்பதால், சென்னைக்குள் நுழையும் விமான பயணிகள் அவர்கள் பெயர்களை மனதில் கொள்ளாமல் இறங்க முடியாது. இந்தநிலையில், சென்னை விமான நிலையத்தை நவீனமயமாக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. காமராஜர் உள்நாட்டு முனையம் இடிக்கப்படுவதற்கான பணிகளுக்கு தொடங்கிவிட்டன. இந்த பணிகள் 3 மாதங்களுக்குள் முடிவடைந்துவிடும். காமராஜர் உள்நாட்டு விமான முனையம் இடிக்கப்பட்டவுடன், அண்ணா பன்னாட்டு முனையமும் இடிக்கப்படும். அதன்பிறகு இந்த இருபெரும் தலைவர்களின் பெயர்களில் உள்ள முனையங்களும் ஒன்றாக கட்டப்பட்டு, அது பன்னாட்டு முனையமாக செயல்படும். இப்போதுள்ள புதிய உள்நாட்டு முனையமும், பன்னாட்டு முனையமும், புதிய முனையத்துக்கு இருபுறமும் உள்நாட்டு முனையங்களாக மாற்றப்படும். இது 3 ஆண்டு கால திட்டம் என்றாலும், புதிதாக முனையங்கள் செயல்படும்போது 28 ஆண்டுகளுக்குமுன்பு சூட்டப்பட்ட காமராஜர், அண்ணாவின் பெயர்கள் இல்லாமல் மறைக்கப்பட்டுவிடக்கூடாது.

நிச்சயமாக பன்னாட்டு, உள்நாட்டு முனையங்களுக்கு காமராஜர், அண்ணா பெயர் சூட்டுவதை மத்திய அரசாங்கம் உறுதிப்படுத்தவேண்டும். இதுபோல, அந்த தலைவர்களின் படங்கள், வாழ்க்கை வரலாற்றுடன் விமான நிலையத்தில் முக்கியமான இடங்களில் எல்லோரும் பார்க்கும்வகையில் மாட்டப்படவேண்டும். மேலும், மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா 2–வது உள்நாட்டு விமான முனையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்டவேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தார். விமான நிலையத்தை நவீனப்படுத்தும் பணிகள் முடிந்தபிறகு ஏதாவது ஒரு இடத்துக்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்டுவதற்கும் மத்திய அரசாங்கம் பரிசீலிக்கவேண்டும். இதுபோல, தமிழ்நாட்டில் உள்ள மற்ற விமான நிலையங்களுக்கும் அந்தப்பகுதியை சேர்ந்த மறைந்த தலைவர்களின் பெயர்களை சூட்டவேண்டும். மக்களின் மனதில் என்றென்றும் நிலைத்திருக்கும் தலைவர்களின் பெயர்கள் மறைந்துவிடக்கூடாது.

Next Story