ஆந்திராவின் நம்பிக்கை இல்லா தீர்மானம்; அ.தி.மு.க. ஆதரிக்குமா?


ஆந்திராவின் நம்பிக்கை இல்லா தீர்மானம்; அ.தி.மு.க. ஆதரிக்குமா?
x
தினத்தந்தி 22 March 2018 9:30 PM GMT (Updated: 2018-03-22T19:50:42+05:30)

தமிழக விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமென்றால், நிச்சயமாக ‘காவிரி மேலாண்மை வாரியம்’ அமைத்தே தீரவேண்டும்.

மிழக விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமென்றால், நிச்சயமாக ‘காவிரி மேலாண்மை வாரியம்’ அமைத்தே தீரவேண்டும். ‘‘6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவேண்டும்’’ என்று உச்சநீதிமன்றம் கூறி 5 வாரங்கள் முடிந்துவிட்டன. இன்னும் ஒரு வாரம்தான் பாக்கியிருக்கிறது. ஒரு வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கப்போவதாக எந்தவித அடையாளத்தையும் மத்திய அரசாங்கம் காட்டவில்லை. மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் மற்றும் சில பா.ஜ.க. தலைவர்கள் நிச்சயமாக அமைக்கப்பட்டுவிடும் என்று உறுதிமொழி கொடுத்தாலும், மத்திய நீர்வளத்துறை செயலாளர் டெல்லியில் நிருபர்களிடம் பேசும்போது, ‘அதற்கான வாய்ப்பு இல்லை’ என்று கூறிவிட்டார். அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் இதற்காக போராடி வருகின்றன. 14 நாட்களாக மக்களவையும், மாநிலங்களவையும் ஸ்தம்பித்து போய்விட்டது. தமிழக கட்சிகள் காவிரி மேலாண்மை வாரியத்திற்காக ஒருபக்கம் போராடிக்கொண்டிருக்கும்போது, தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிகள், பா.ஜ.க. அரசின்மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை முன்மொழிய முயற்சி செய்துகொண்டு வருகிறது. அவர்கள் கோரிக்கை ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வேண்டும் என்பதுதான். இந்த நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை அதி.மு.க. அரசு ஆதரிக்கவேண்டும் என்று தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் சில கட்சிகள் வலியுறுத்தின.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் போராடிக்கொண்டிருக்கும்போது, பாராளுமன்றத்தில் வேறு எந்தக்கட்சியும் ஆதரவு தெரிவிக்க முன்வராதநிலையில், நாம் ஏன் வலியப்போய் அவர்கள் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, பா.ஜ.க. அரசுக்கு எதிராக வாக்களிக்கவேண்டும் என்ற ஒரு கருத்தும் தமிழ்நாட்டில் நிலவுகிறது. இதுமட்டுமல்லாமல், ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கொடுத்தால் தமிழக தொழில்வளம் பெரிதும் பாதிக்கப்பட்டுவிடும் என்றும் ஒருசில நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

2014–ம் ஆண்டு ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கொடுக்கப்படும் என்று உறுதிமொழி கொடுத்தநிலையில், முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடுமையாக எதிர்த்தார். ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கக்கூடாது, அதனால் தமிழகம் பாதிக்கும் என்ற கருத்தை முதன்மையாக வைத்து, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவுக்கு வழங்கப்படும் வரிச்சலுகைகளால் தமிழகத்தின் பொருளாதாரம் பாதிக்கும். அது அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் பெரியளவில் முதலீடுகளை இடம்பெறச்செய்யும் தொழிற்சாலைகள் இடம்மாறச் செய்யவும் உள்ளிட்ட பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். மேலும் இது அண்டை மாநிலங்களுக்கு சமச்சீர் இல்லாத போட்டிக்கான முழுமையான சூழ்நிலையை ஏற்படுத்திவிடும். உண்மையில் பார்க்கப்போனால் ஆந்திராவும், தெலுங்கானாவும் உள்கட்டமைப்புகளில் நன்கு வளர்ச்சிபெற்ற மாநிலங்களாகும் என்பதுபோன்ற கருத்துகளை வெளியிட்டு, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை சிறப்பு மாநில அந்தஸ்து பட்டியலில் சேர்க்கக்கூடாது என்பதற்காக ஜெயலலிதா அழுத்தமாக அறிக்கை வெளியிட்டார். ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து என்ற கோரிக்கைக்காக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அ.தி.மு.க. அரசு ஆதரித்தால், நிச்சயமாக அவர் வழியிலிருந்து மாறிச்சென்றுவிட்டதாக கூறப்படும் பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடும். எனவே அ.தி.மு.க. இதை ஆதரிக்காது என்பது அரசியல் நோக்கர்களின் கணிப்பாகும்.

Next Story