அறிவிப்புகள் ஏராளம்; நிறைவேறுவது கொஞ்சம்!


அறிவிப்புகள் ஏராளம்; நிறைவேறுவது கொஞ்சம்!
x
தினத்தந்தி 23 March 2018 9:30 PM GMT (Updated: 23 March 2018 12:12 PM GMT)

எந்தவொரு நாடு என்றாலும் சரி, மாநிலம் என்றாலும் சரி, வேலைவாய்ப்பு பெருமளவில் இருந்தால்தான் அங்கு தொழில் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.

ந்தவொரு நாடு என்றாலும் சரி, மாநிலம் என்றாலும் சரி, வேலைவாய்ப்பு பெருமளவில் இருந்தால்தான் அங்கு தொழில் வளர்ச்சி அதிகமாக இருக்கும். பல ஆண்டுகளுக்கு முன்பு சிவகாசிக்கும், திருப்பூருக்கும் சென்றால் ஏதாவது வேலைபார்த்து பிழைத்துக் கொள்ளலாம் என்ற நிலைமை தமிழ்நாடு முழுவதும் உள்ள அதிக படிப்பு இல்லாத வேலையில்லாத இளைஞர்கள் மத்தியில் இருந்தது. அப்போதெல்லாம் இந்த 2 நகர்களிலும் அனைத்து சிறு தொழிற்சாலைகள் முன்பும், ‘வேலைக்கு ஆட்கள் தேவை’ என்ற போர்டுகள் தொங்கவிடப் பட்டிருக்கும். ஆனால் இப்போது அப்படிப்பட்ட நிலைமைகள் அங்கு காணவில்லை. வேலைக்கு ஆட்கள் தேவை என்ற நிலைமை அதிகமாக உருவாகும்போது, அங்கு தொழில் வளர்கிறது. தற்போது தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் வேலையில்லாத திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது.

மத்திய அரசாங்கமும், தமிழக அரசும் வேலைவாய்ப்புகளை உருவாக்க பல அறிவிப்புகளை வெளியிட்டும், அது முழுமையாக நிறைவேற்றப் படவில்லை. பிரதமர் நரேந்திரமோடி ஆட்சிக்கு வரும்போது ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறியிருந்தார். ஆனால் அந்தளவு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 82 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்களும்–பெண்களும் வேலைத்தேடி பதிவு செய்திருக்கிறார்கள். அரசாங்கங்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளும் முழுமையான வெற்றியடையவில்லை. பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் சுயதொழில் தொடங்கும் வகையில் பல திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அதில் ஒரு திட்டமாக குறு சிறு நடுத்தர தொழில்கள் அமைச்சகம் நிறைவேற்றும் திட்டம், இளைஞர்கள் புதிய தொழில்களை தொடங்க ரூ.25 லட்சம் வரை கடன் வழங்குகிறது. இதில், 10 சதவீத தொகையை பொதுப் பட்டியலில் உள்ளவர்களும், 5 சதவீத தொகையை தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, இதரபிற்படுத்தப்பட்ட இளைஞர்களும் தங்கள் பங்குதொகையாக செலுத்தவேண்டும். இந்த கடன்தொகைகளில் எந்தெந்த இடங்கள் மற்றும் எந்தெந்த பிரிவு இளைஞர்கள் என்ற வகையில் 15 முதல் 35 சதவீதம் வரை மானியமாக வழங்கப்படும்.

இந்த கடன் தொகைகளுக்காக 4 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தார்கள். கடந்த 11 மாதங்களில்

36 ஆயிரத்து 109 பேருக்கு மட்டும் கடன்வழங்கப்பட் டுள்ளது. இதற்கு காரணம் அவர்கள் தொடங்கும் தொழில்களுக்கு சாத்தியக்கூறுகள் இல்லை. வங்கிகள் கடன்வழங்கும் திட்டத்தில் இல்லை. விண்ணப்பித்தவர் களில் பல குறைபாடுகள் இருக்கின்றன என்பது போன்ற காரணங்கள் கூறப்படுகிறது. விண்ணப்பங்களும் சரியாக பூர்த்தி செய்யப்படவில்லை. இதுகுறித்து அந்த இளைஞர் களுக்கு சரியான புரிதல்கள் இல்லை என்று கூறப்படுகிறது. ரூ.1,170 கோடி இந்தத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற திட்டங்களை மத்திய– மாநில அரசுகள் நிறைவேற்றும்போது, அதுகுறித்து தொழில் தொடங்க நினைக்கும் இளைஞர்கள் முழுமையாக புரிந்துகொள்ள சிறப்பு வகுப்புகள் அல்லது சிறப்பு முகாம்கள் நடத்தப்படவேண்டும். இப்படியொரு திட்டம் இருக்கிறது என்பதை நாடுமுழுவதும் பெருமளவில் விளம்பரப்படுத்த வேண்டும். வேலை வாய்ப்புகளை பெருக்க முடியாத நிலையில், இப்படி சுயவேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் புதிய புதிய சிறு தொழிற்சாலைகள் உருவாகுவது நாட்டுக்கு நல்லது. நமது இளைஞர்களும் வேலைத்தேடி அலையும் இளைஞர்களாக அல்லாமல், மற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் சிறு தொழில்முனைவோர்களாக மாற்றப்படுவது மிகவும் ஆக்கப்பூர்வமான ஒரு முயற்சியாகும்.

Next Story